Published : 20 May 2020 05:35 PM
Last Updated : 20 May 2020 05:35 PM
தஞ்சை மாவட்டம் சுவாமிமலை, பட்டீஸ்வரம், கோவிந்தகுடி மற்றும் ஆவூர் ஆகிய இடங்களில் இருக்கும் மதுபானக் கடைகளுக்கு இன்று காலை வழக்கம் போல மது வாங்கச் சென்ற மதுப்பிரியர்கள் கொஞ்சம் அதிர்ந்துதான் போனார்கள்.
அந்தந்த மதுபானக் கடைகளின் அருகில் நின்று கொண்டு, முகக்கவசம் இல்லாமல் வருவோரை இடைமறித்த மூன்று பேர் கொண்ட குழு, மதுவுக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. கையில் பதாகைகளை வைத்திருந்த அவர்கள், முகக் கவசம் இல்லாமல் வந்தவர்களுக்கு முகக் கவசங்களையும் வழங்கினர்.
இவர்கள் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தின் சார்பு அமைப்பான ‘விமோசனம்’ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்த விமோசனம் இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் மது இல்லாத தீபாவளியைக் கொண்டாட வேண்டி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
அதுபோல் இந்தக் கரோனா பெருந்தொற்று காலத்திலும் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடி, மதுக்கடைகளைத் திறந்து விற்பனையைத் துரிதபடுத்தியுள்ளதை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த முறையை இன்று கையாண்டனர். மதுவுக்கு அடிமையானவர்கள் மற்றும் அரசால் மதுவுக்கு அடிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்தப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.
ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட அடியார்கள் ஹரிபாபு, மோகன் மற்றும் நீலமேகம் ஆகியோர் இப்பணியை மேற்கொண்டனர். முகக்கவசம் இல்லாமல் மதுவாங்க நின்றிருந்த மதுப்பிரியர்களிடமும் அந்தப் பகுதி பொதுமக்களிடமும் ‘மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம்; மதுபானக் கடைவாசலை மிதிக்கவேண்டாம்’ என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முகக்கவசங்களை வழங்கினார்கள்.
‘இந்த இக்கட்டான சூழலில், ஏற்கெனவே சேமித்த குறைவான வருமானத்தையும் மதுக்கடையில் கொடுத்துவிட்டால் இனிவரும் நாட்களில் குடும்பச் செலவுக்கு யாரிடம் கையேந்தி நிற்கப் போகிறீர்கள்?’ என்ற இவர்களது விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் கடந்து மதுவாங்குவதற்குக் கூட்டம் வந்து கொண்டுதான் இருந்தது என்பது தனிக்கதை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT