Last Updated : 20 May, 2020 11:30 AM

1  

Published : 20 May 2020 11:30 AM
Last Updated : 20 May 2020 11:30 AM

கொத்துக் கொத்தாக வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்: குழம்பி நிற்கும் கோவை நிறுவனங்கள்

கோவையில் ஆங்காங்கே பயணப்பட்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்.


புலம்பெயர் தொழிலாளர்கள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தங்கள் சொந்த ஊர்களை நோக்கி நடந்தே சென்றுகொண்டிருக்கும் அவலம் இன்றும் தொடர்கிறது. தமிழகத்தின் தொழில் நகரங்களில் ஒன்றான கோவையிலிருந்தும் தொழிலாளர்கள் கொத்துக் கொத்தாகப் புறப்பட்டுச் செல்கிறார்கள். அரசு சார்பில் ரயில், பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் அதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களால் அவர்கள் அலைக்கழிப்புக்கு ஆளாவதும் தொடர்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு சூலூரில் இ-பாஸ் விண்ணப்பித்து முகாமில் காத்திருந்த நிலையில் நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வாகனங்கள் வரவில்லை. அதனால் அவர்கள் அங்கிருந்து 12 கிலோ மீட்டர் தூரம் நடந்து கோவை ரயில் நிலையம் வந்தனர். அப்போதும் அவர்கள் செல்லும் ரயில் வரவில்லை. இதனால், அவர்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது. பிறகு அவர்கள் எப்படி வண்டி பிடித்து ஊருக்குச் சென்றார்களோ அவர்களுக்கே வெளிச்சம்.

அதற்கடுத்த நாள் கோவை உப்பிலிபாளையம் மாநகராட்சிப் பூங்காவில் 60 வட இந்தியத் தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டனர். ஒரு நாள் அங்கு இருந்த அவர்கள் அடுத்த நாளே தங்களுக்கான ரயில் வந்துவிட்டதாகக் கிளம்பிச் சென்றனர். இதனால் அப்பகுதியே திடீர் பரபரப்பில் ஆழ்ந்தது. அதேபோல் அங்குள்ள உப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 80 வட இந்தியத் தொழிலாளர்கள் 4 நாட்கள் முன்பு தங்க வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் உள்ளூர் போலீஸார், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரால் அழைத்துச் செல்லப்படுவதும், திரும்பக் கொண்டுவந்து விடப்படுவதுமாக இருந்தனர். இறுதியில் மே 18 மதியம்தான் அவர்களுக்கான ரயில் வருவதாகச் சொல்லி அழைத்து செல்லப்பட்டனர்.

இதற்கிடையே கோவை ரயில் நிலையம், டவுன் ஹால், உக்கடம், மணிக்கூண்டு என பல்வேறு பகுதிகளில் பெட்டி, படுக்கைகள், பாத்திர பண்டங்களைத் தூக்கிக் கொண்டு வெளிமாநிலத் தொழிலாளர்கள் அலைவதைக் காண முடிந்தது. அவர்களிடம் பேசிப் பார்த்தால் ஒருவருக்குக் கூடத் தமிழ் தெரியவில்லை.

அவர்களை வேலைக்கு அழைத்து வர புரோக்கர்கள் இருப்பார்கள். அவர்களும் பெரும்பாலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும் அவர்களுக்கு அரைகுறை தமிழாவது தெரியும். தொழிலாளர்கள் இன்றைக்கு இக்கட்டில் மாட்டித் தவிக்கும் சூழலில், வழிகாட்ட அவர்களில் யாரும் இல்லை என்பதுதான் கூடுதல் வேதனை.

இது பற்றி நம்மிடம் வேதனையான பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் தன்னார்வலர் சந்திரசேகர்.
“புலம்பெயர் தொழிலாளர்களுக்கான உதவிகளைக் கடந்த ஒரு மாதமாகச் செய்து வருகிறேன். நேற்று கூட வடமதுரையில் 40 பேர் ஊருக்குச் செல்ல உதவி கேட்பதாக மாங்கரையிலிருந்து நண்பர் போன் பண்ணினார். அவர்களைப் போய்ப் பார்த்து உணவு ஏற்பாடு செய்து, உள்ளூர் போலீஸார், விஏஓவிடம் கொண்டுபோய் விட்டுவந்தேன். அவர்களில் ஊருக்குப் போக விருப்பமுள்ளவர்கள் முறைப்படி விண்ணப்பித்தால் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்குகிறார். அதற்கு முதலில் அணுக வேண்டியது உள்ளூர் விஏஓவைத்தான். அவர் அவர்களிடம் உள்ள ஆதார் கார்டு, வேலை செய்த நிறுவனம் பற்றிய தகவல், சொந்த ஊர், டிக்கெட் எடுக்கப் பணம் இருக்கிறதா என்பன போன்ற விவரங்களை எல்லாம் சேகரித்து எழுதி, தன் ஏரியா வருவாய்த் துறை ஆய்வாளரிடம் (ஆர்ஐ) அனுப்புவார். ஆர்ஐ அதைச் சரிபார்த்துத் தாசில்தாரிடம் அனுப்ப வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பாஸ் தருவார்.

எல்லாமே ஆன்லைனிலேயே நடக்கும். இடைப்பட்ட நேரத்தில் அவர்களை எல்லாம் அந்தந்த போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தகவல்களைச் சரிபார்க்கிறார்கள். அதன் பிறகு சுகாதாரத் துறை அலுவலர்கள் கோவை டவுன் ஹாலில் உள்ள நல்லாயன் பள்ளியில் காய்ச்சல், சளி, கரோனா சோதனை எடுக்கிறார்கள். இதெல்லாமே முடிந்ததும் அவர்கள் எந்த ரயில் அல்லது பேருந்தில் போகிறார்களோ அங்கே கொண்டு போய் நிறுத்தி ஏற்றிவிட வேண்டியது அந்தந்த போலீஸார் மற்றும் விஏஓவின் வேலை. அதுவரை ஊருக்குப் போக விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தவர்கள் இப்படிப் பூங்காக்கள், பள்ளிக்கூடங்கள், சமூகக்கூடங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

அப்படி தங்கியிருக்கும்போது ரயில், பஸ் வந்துவிட்டது என்று தகவல் வந்தால் போதும், அடித்துப் பிடித்து ஓடுகிறார்கள். அந்த நேரத்தில் அவர்களை அழைத்துச் செல்ல போலீஸ் வராது. விஏஓ இருக்க மாட்டார். அதனால் அவர்களாகவே கிளம்பிச் செல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படி திக்கற்று செல்பவர்கள்தான் நகர் முழுக்க தெருத்தெருவாக நிற்கிறார்கள். அவர்களைத் திரும்ப அழைத்து வருவதற்குள் தன்னார்வலர்கள், போலீஸார், விஏஓக்கள் கடும் சிரமத்தை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

நாங்கள் இருக்கும் உப்பிலிபாளையம் ஏரியாவில் மட்டும் இந்த ஒரு வாரத்தில் 3,800 பேர் சொந்த ஊருக்குப் போக பதிவு செய்துள்ளார்கள். அதில் 1,800 பேர் ரயிலிலும் பஸ்ஸிலும் ஏற்றி அனுப்பப்பட்டு விட்டார்கள். மற்றவர்கள் பாஸுக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கிறார்கள்” என்று தெரிவித்தார் அந்தத் தன்னார்வலர்.

புலம்பெயர் தொழிலாளர்களைப் பணியமர்த்தி யிருக்கும் நிறுவன உரிமையாளர் ஒருவரிடம் பேசினேன். “என்னிடம் மொத்தம் 200 பேர் வேலை செய்கிறார்கள். அதில் 180 பேர் வடநாட்டவர்கள்தான். அவர்களுக்குத் தங்குமிடம், சாப்பாடு எல்லாம் இலவசம்தான். இப்போது அவர்களில் 30 பேர் ஊருக்குக் கிளம்பிப் போய்விட்டார்கள். மீதி 150 பேர் இருக்கிறார்கள். பொது முடக்கத்தில் தளர்வு வந்திருப்பதால் இவர்களை வைத்து நிறுவனத்தை இயக்கலாம் என்று முடிவு செய்து வேலைக்கு அவர்களை வரச்சொல்லி அழைத்தேன். யாரும் வருவதாகத் தெரியவில்லை. மற்ற தொழிற்சாலைகளிலும் இதே நிலைதான்.

கோவையில் எப்படிப் பார்த்தாலும் நகைப்பட்டறை, இரும்புப் பட்டறை, வார்ப்புத் தொழிற்சாலை, ஓட்டல்கள் என பல்வேறு நிறுவனங்களில் சுமார் 80 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பார்கள். அவர்களில் சுமார் 20 ஆயிரம் பேர் ஏற்கெனவே திரும்பிச் சென்றுவிட்டார்கள். தொழிற்சாலைகளில் வேலை செய்ய ஆளில்லை. உள்ளூர்க்காரர்களை வைத்து எப்படித் தொழில் செய்வது என்றும் தெரியவில்லை” என்றார் அவர்.

புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பும் பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரிடம், “சார், இவங்க எல்லாம் ஊருக்குப் போறாங்களே. திரும்ப எப்போ வருவாங்கன்னு ஏதும் சொல்றாங்களா?” என்று கேட்டேன்.

“இவங்க எங்கே சார் வரப் போறாங்க? விட்டாப் போதும்னு இருக்காங்க. வருஷக்கணக்கு ஆனாலும் இங்கே வரணும்னு நினைச்சுக்கூட பார்க்க மாட்டாங்க. அந்த அளவுக்கு இங்கே சோறு தண்ணியில்லாம வதை பட்டிருக்காங்க” என்றார் சந்திரசேகர்.

புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையின்மை, அடுத்துவரும் நாட்களில் பல தொழில்களைப் பாதிக்கும் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x