Published : 10 Jul 2015 11:32 AM
Last Updated : 10 Jul 2015 11:32 AM
ரத்னாகர் ஒரு கொள்ளைக்காரன். அவன் நாரதரிடமே கொள்ளை யடிக்க முற்பட்டபோது மாட்டிக் கொண்டான். ‘‘இந்தப் பாவத்தில் பங்கெடுக்க உன் குடும்பத்தினருக்கு சம்மதமா?’’ என்று கேட்டார் நாரதர். ரத்னாகர் குடும்பத்தில் கேட்க, அவர்கள் யாரும் சம்மதிக்கவில்லை. அன்று மனம் திருந்திய ரத்னாகர், நாரதர் சொல்லித் தந்த மந்திரத்தை ஜெபித்து தவம் இருந்தான். உடல் மறையும் அளவுக்கு எறும்பு கோபுரமாக புற்று கட்டியது. வரம் கிடைத்தது. அவர்தான் இராமாயணத்தை எழுதிய வால்மீகி. (சமஸ்கிருதத்தில் வால்மீகம் என்றால் எறும்புப் புற்று என்று ஒரு பொருள்)
இன்று அமெரிக்காவில் வாழும் ஒரு ரத்னாகர்தான் ஃபிராங்க் அபாக்னேல். ஒரு சமயம் அமெரிக்கா, சுவீடன், ஃபிரான்ஸ் என்று 12 நாடுகளில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தவன். அமெரிக்காவின் குற்றப் புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ-க்குப் பெரிய சவாலாக இருந்த இவன், இப்போது அதே துறையால் ஒரு ஹீரோவாக மதிக்கப்படுபவன்.
வில்லன் எப்படி ஹீரோ?
அபாக்னேலுக்கு 12 வயதானபோது பெற்றோருக்குள் விவாகரத்து நடந்தது. அப்பாவிடம் பாசமாக வளர்ந்த அபாக்னேல், தன்னுடைய 16-வது வயதில் முதன்முதலில் அப்பாவின் கிரெடிட் கார்டு மூலம் 3,400 டாலர்கள் மோசடி செய்தான். அதில் சுவை கண்டு, பல வங்கிகளில் பொய்யான பெயர்களில் கணக்குகள் தொடங்கி போலி காசோலைகளைத் தயாரித்து, புத்திசாலித்தனமாக கிட்டத்தட்ட 25 லட்சம் டாலர்களுக்கு மோசடிகள் செய்தான்.
அபாக்னேலுக்கு பிடித்த விஷயம் ஆள் மாறாட்டம் செய்வது. விமானி யாக, டாக்டராக, வக்கீலாக, சிறை அதி காரியாக, காவல்துறை அதிகாரியாக, கல்லூரி விரிவுரையாளராக வெவ் வேறு பெயர்களில் புதுப் புது அடையாளங்களில் பல நிறுவனங்களை சாமர்த்தியமாக ஏமாற்றினான்.
‘பான் ஆம்’ என்கிற பிரபலமான விமான நிறுவனத்தில் ஆரம்பித்தது இந்த ஆள் மாறாட்ட விளையாட்டு. போலி அடையாள அட்டை தயாரித்து, தன் சீருடை தொலைந்து போனதாகச் சொல்லி, உடைப் பிரிவில் இருந்து சீருடை பெற்று, பயிற்சி விமானி என்கிற போர்வையில் விமானங்களில் பறக்கத் தொடங்கினான். அப்படி 26 நாடுகளுக்கு 250 பயணங்களை மேற்கொண்டான்.
ஒருமுறை 30 ஆயிரம் அடி உயரத்தில் 140 பயணிகளுடன் பறந்த விமானத்தை இயக்க இவன் அனுமதிக்கப்பட்டபோது பதற்றம் வந்தது. தன் உயிரையும் சேர்த்து இத்தனை பேரின் உயிர்களைப் பணயம் வைக்கிறோமே என்கிற பயத்தின் காரணமாக, அந்த வேடத்தைக் கலைத்தான். அதுவரை ஒரு விமானிக்கு உரிய சம்பளம் மற்றும் அத்தனைச் சலுகைகளையும் அனுபவித்தான்.
அடுத்து டாக்டர் சான்றிதழ் தயாரித்துக் கொண்டான். சூபர்வைசர் வேலையில் ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்ந்தான். அந்த வேலையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கத் தேவையில்லை. அதிலும் ஒருநாள் சிக்கல் வந்தது. ஓர் இரவு அவசர நோயாளியாக சேர்க்கப்பட்ட ஒரு குழந்தைக்கு இவனை வைத்தியம் பார்க்கச் சொல்லிவிட்டார்கள். புரியாமல் விழித்த அபாக்னேல் அந்த சமயம் பயிற்சிக்கு வந்திருந்த மருத்துவ மாண வர்களை அழைத்து, அவர்களுக்கு இது பயிற்சி என்று உத்தரவிட்டு வைத்தியம் பார்க்க வைத்தான். மனசாட்சி உறுத்தவே அந்த வேலையில் இருந்தும் விலகினான்.
இவனை கைது செய்வதற்காக நிய மிக்கப்பட்ட காவல் அதிகாரி, பல விதமாக பொறி வைத்துக் கொண்டிருந் தார். ஆனால், இவன் அவருடன் தொடர்பில் இருந்தபடி அவருக்குப் போக்குக் காட்டி ஊர் ஊராக தப்பித்துச் சென்றான். பிறகு, பிடிபட்டு சுவீடன் நாட்டிலும், ஃபிரான்ஸ் நாட்டிலும் தலா ஆறு மாதங்கள் சிறைகளில் இருந்தான்.
அமெரிக்காவில் இவன் மேல் இருந்த வழக்குகளுக் காக அதிகாரி இவனைக் கைது செய்து விமானத்தில் அமெரிக்காவுக்கு அழைத்து வந்தார். விமானம் ரன்வேயில் நிறுத்தத்துக்கு வரும் சமயம், விமானத்தின் அத்தனை வழிகளும் இவனுக்கு அத்துப் படி என்பதால் கழிவறையில் இருந்து நைசாக நழுவி வேறு வழியில் தப்பித்து, விமான நிலையத்தைவிட்டு ஓடிவிட்டான்.
ஆனால், போலீஸின் இடைவிடாத துரத்தலில் மாட்டிக் கொண்டான். அமெரிக்காவின் கோர்ட் இவனுக்கு 12 வருடங்கள் சிறைத் தண்டனை கொடுத்தது. அந்தச் சிறையில் இருந்தும் சாமர்த்தியமாக தன்னை சிறைத்துறை அதிகாரியாக நம்பவைத்து தப்பித்தான். மீண்டும் பிடித்து சிறையில் அடைத்தார்கள்.
இவனைக் கைது செய்த காவல் துறை அதிகாரிக்கு இவன் மேல் கோபம் இருந்தாலும் இவனுடைய அபாரமான புத்திசாலித்தனத்தின் மீது மிகுந்த மரியாதை இருந்தது. பல காசோலை மோசடி வழக்குகளில் இவனிடம் ஆலோசனை கேட்டார் அவர். சிறைத் தண்டனையை 5 வருடங்களோடு முடித்து, இவனை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மோசடி வழக்கு களைத் தீர்க்க உதவி செய்ய வைத்தார்.
விடுதலையான அபாக்னேல் சில வேலைகளில் சேர்ந்தான். ஆனால், இவனுடைய குற்றப் பின்னணி தெரிந் ததும் உடனே வேலையைவிட்டு நிறுத் தினார்கள். மனம் நொந்துபோன அபாக்னேல் தன் புத்திசாலித்தனத் தையே ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தி னால் என்னவென்று யோசித்தான்.
அபாக்னேல் ஒரு வங்கியின் உயர் அதிகாரியிடம் தன் குற்ற வரலாறு முழுவதும் சொல்லிவிட்டு, “உங்கள் வங்கி ஊழியர்கள் மத்தியில் ஒரு மணி நேரம் நான் பேசுகிறேன். காசோலை மோசடிகளை எப்படி தடுக்க முடியும் என்று விளக்குகிறேன். என் பேச்சு உபயோகமாக இருந்தால், எனக்கு 500 டாலர்கள் தாருங்கள்’’ என்றான். அனுமதி அளிக்கப்பட்டது. அற்புதமாகப் பேசினான் அபாக்னேல். பணம் தந்ததுடன் மற்ற வங்கிகளுக்கும் சிபாரிசு செய்தார் அந்த அதிகாரி.
காசோலை மோசடிகளுக்கு எதிரான வழிமுறைகளை வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் வழங்குவதையே தொழிலாக மேற்கொண்டான். காவல் துறைக்கும் ஆலோசகராக பணியைத் தொடர்ந்தான். 67 வயதான அபாக்னேல் இன்று மிகப் பெரிய இடத்தில் இருக்கிறான். தவறு… இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அபாக்னேல் தொடங்கி வெற்றி கரமாக நடத்தி வரும் இந்த நிறுவனம் இப்போது 14,000 நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது. மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார். நிறைய விருதுகள் பெற்று, பல தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள் கொடுத்துள்ளார். ஒரு தொண்டு நிறு வனம் நிதி திரட்டுவதற்காக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அதில் அபாக்னேலின் சிறப்புரைக்கும் அவருடன் ஒரு இரவு விருந்து சாப் பிடவும் 250 டாலர்கள் என்று நிர்ணயித்து டிக்கெட்டுகளை விற்று, 4 லட்சம் டாலர்களை நிதியாக திரட்டியது என்றால் ஒரு பேச்சாளராக இவரின் பிரபல்யத்தைப் புரிந்துகொள்ளலாம்.
அபாக்னேலின் மூன்று மகன்களில் ஒரு மகன் இன்றைக்கு காவல்துறையில் ஓர் அதிகாரியாக இருக்கிறார். அபாக்னேலின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ஹாலிவுட் டைரக்டர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் எடுத்த ‘கேட்ச் மி இஃப் யூ கேன்' திரைப்படம் வசூலில் சாதனை புரிந்தது.
அபாக்னேல் ஒரு பேட்டியில், ‘‘நான் செய்த குற்றங்கள் மிகவும் மோச மானவை. ஒழுக்கமற்றவை. நியாய மற்றவை. அதனால்தான் மூன்று ஜனாதிபதிகள் எனக்கு பொது மன்னிப்பு வழங்க முன்வந்தபோதும் நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மோசடி குற்றங்களைப் பொறுத்தவரையில்..மோசடிகள் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பதுதான் சிறந்ததாக நான் கருதுகிறேன்'’ என்றார்.
- வழக்குகள் தொடரும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pkpchennai@yahoo.co.in
முந்தைய அத்தியாயம்: >எப்படி? இப்படி?- 9: வெளிச்சம் படாத ஹீரோக்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT