Published : 19 May 2020 10:38 AM
Last Updated : 19 May 2020 10:38 AM
ஆகாசத்த நான் பாக்கிறேன்…
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உலக நாடுகள் பலவற்றில் தன்னுடைய இசை நிகழ்ச்சியை எஸ்.பி.பி.-50 என்னும் பெயரில் நடத்தினார். அந்தக் குழுவில் இடம்பெற்ற பாடகிகளில் ஒருவர் ஸ்வாகதா. டர்ட்டி பொண்டாட்டி, ஒட்டியாணம் போல, ஆலாலிலோ போன்ற திரைப் பாடல்களையும் பாடியிருப்பவர் ஸ்வாகதா. இவரே இசையமைத்து சத்தியபிரகாஷுடன் பாடிய `அடியாத்தே’ பாடல், இணைய ரசிகர்களின் விருப்பப் பாடலாக அமைந்தது.
தற்போது கரோனா ஊரடங்கில் இருந்தாலும்,தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளோடும் தொழில்நுட்பத்தின் துணையோடும் இளைஞர்களின் மனம் கவர்ந்த ஒரு பாடலைப் பாடி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார் ஸ்வாகதா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்த `ஆகாசத்த’ பாடலின் கவர் வெர்ஷனை வேறொரு பரிமாணத்தில் நம்முடைய காதுகளில் சேர்த்திருக்கிறார் ஸ்வாகதா கிருஷ்ணன். காட்சிகளின் தொகுப்பும், புல்லாங்குழல், சாரங்கி, கீபோர்ட், கிதார், வயலின் போன்ற நரம்பு வாத்தியக் கருவிகளின் சேர்ந்திசையோடு ஸ்வாகதாவின் குரல் கேட்பவர்களை மயக்குகிறது.
ஆகாசத்த நான் பாக்கறேன் பாடலைக் காண:
காதலிக்கு ஒரு தாலாட்டு!
கனடாவைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞர் வீக்எண்ட். அண்மையில் இவர் வெளியிட்ட ஆஃப்டர் ஹவர்ஸ் ஆல்பத்தின் டீலக்ஸ் எடிசனில் இடம்பெற்ற `ஃபைனல் லல்லபய்’ உலகம் தழுவிய பாப் இசை விரும்பிகளின் மனங்களை கொள்ளை கொண்டிருக்கிறது. இந்தப் பாடலை சென்னை, சாந்தோம் புனித ஜோன்ஸ் பள்ளியில் பத்தாம் வகுப்புக்கு தேர்வாகியிருக்கும் ஜே.எ .லோஹித் தன்னுடைய இசைப் பாணியில் கவர் வெர்ஷனாகப் பாடியுள்ளார்.
“குறிப்பாக இந்தப் பாடலை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்றோம் லோஹித்திடம்.
“காரணம் இந்தப் பாடலில் வெளிப்படும் எளிமை. நிறைய வாத்தியங்கள் இதில் ஒலிக்காது. கீபோர்டின் தூறலோடு, தன்னுடைய காதலியை காதலன் தூங்கவைக்கும் வரிகளைக் கொண்டவை இந்தப் பாடல். உச்ச ஸ்தாயியை தொடும்போதும் வீக்எண்டின் குரலில் இனிமை அப்படியே இருக்கும். அதை முடிந்தவரை என்னுடைய குரலிலும் முயன்றிருக்கிறேன்” என்கிறார் வளரிளம் பருவத்தின் வாசலில் இருக்கும் லோஹித்!
ஃபைனல் லல்லபய் பாடலைக் காண:
குவாரன்டைன் மேஷ்அப்!
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்றாலே அவர்களிடம் ஓவியம் வரைதல், கவிதை எழுதுவது, பாடுவது, இசை வாத்தியங்களை வாசிப்பது இப்படி ஏதாவது ஒரு கலைத் திறமை ஒளிந்திருக்கும். அந்தத் திறமையை அடையாளம் கண்டுகொள்வதோடு தன்னுடன் படிக்கும் மாணவர்களுக்கு இருக்கும் திறமையையும் கண்டு அவர்களையும் சேர்த்துக் கொண்டு ஒரு கலைப் படைப்பை தருவதற்கு கலையின் மீது தணியாத காதல் இருக்க வேண்டும். அப்படி இசையின் மீது தனக்கிருக்கும் காதலை தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நண்பர்களையும் பாடவைத்து, பாட்டுக்களாலேயே ஒரு இசைத் தொகுப்பை `குவாரன்டைன் மேஷ்அப்’ என்னும் பெயரில் தன்னுடைய யூடியூப் சேனலில் வழங்கியிருக்கிறார் சென்னை, எஸ்.ஆர்.எம். கல்லூரியில் படிக்கும் நரேந்திரகுமார். அவரோடு யஷ்வந்தி, சத்யா, அனிதா ஆகியோர் இணைந்து பாடியிருக்கின்றனர்.
ஹாய் சொன்னா போதும், பூவுக்குள் ஒளிந்திருக்கும், கதைப்போமா, காதல் கிரிக்கெட்டு, சேராமல் போனால், காதல் கண்கட்டுதே, சான்ஸே இல்ல, மழைவரும் அறிகுறி, துளி துளி மழையாய் வந்தாளே, சத்தியமா நான் சொல்லுறேன்டி, சத்தியமா நான் சொல்லுறேன்டா போன்ற பிரபல பாடல்களிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வரிகள் அடுத்தடுத்து நம்மை தாலாட்டுகிறது. வெவ்வேறு பாட்டின் வரிகளாக இருந்தாலும் அத்தனையையும் இணைக்கும் நரேந்திரகுமாரின் கீபோர்ட் இசைச் சரடால் இந்த கதம்பப் பாடலும் மணம் வீசுகிறது.
குவாரண்டைன் மேஷ்அப் பாடலைக் காண:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT