Published : 19 May 2020 09:06 AM
Last Updated : 19 May 2020 09:06 AM
’’எழுத்தாளர் பாலகுமாரன் எழுத்து ராட்சசன். அன்புச்சக்கரவர்த்தி. பல வாசகர்களை மேம்படுத்திய, நல்வழிப்படுத்திய, எழுத்தாளர்களாக்கிய மயக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர்’’ என்று பட்டுகோட்டை பிரபாகர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பாலகுமாரனின் நினைவுநாள் மே.15. இரண்டாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கருத்து இது.
மேலும் அந்தப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
''தாமதமான பதிவு இது!
பாலகுமாரனுக்கு குதிரைகள் பிடிக்கும். தன்னை ஒரு பந்தயக் குதிரையாக, வெற்றிக் குதிரையாக, சக்தி வாய்ந்த குதிரையாக நினைத்துக் கொள்வதும் பிடிக்கும். அது உண்மையும்கூட.
பல வாசகர்களை மேம்படுத்திய, நல்வழிப்படுத்திய, எழுத்தாளர்களாக்கிய மயக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரரான பாலகுமாரன் என்னும் அசுரக் குதிரை கடைசி வரை வாயில் நுரை தள்ள ஓடிக்கொண்டேயிருந்தது. உடல்நிலை பாதிப்பில்லையென்றால் இன்னும் ஓடியிருக்கக் கூடிய குதிரை.
அவர் கதைகளில் நான் முதலில் படித்தது மோனா மாத இதழில் எழுதிய "ஏதோ ஒரு நதியில்..' என்னும் குறுநாவல். அந்தக் கதை ஒரு பிடித்த சங்கீதம் போல மனதிற்குள் ஒட்டிக்கொண்டது. அதன் பிறகுதான் அவரின் கதைகளை விடாமல் படிக்கத் துவங்கினேன்.
அவர் எழுத்துக்களில் கண்டிப்பாக அவரே ஆஜராவார். பாத்திரங்கள் அனைத்தும் அவரைப் போலவே மிகவும் பக்குவமாக சிந்தித்துப் பேசும். தர்க்கம் செய்யும். அனைத்துப் பிரச்சினைகளையும்,சூழ்நிலைகளையும் நுணுக்கமாக அலசும். சிநேகமாக உரையாடும். கொஞ்சிக் கொஞ்சிக் காதலிக்கும். வாசிப்பவர்களுக்கு இப்படி ஒரு சிநேகிதி, காதலி, தோழன் நமக்கில்லையே என்று ஏங்க வைக்கும். தன் எழுத்தின் மீது அவருக்கு பரிபூரணமான ஆதிக்கம் இருக்கும். குரலுயர்த்திச் சொல்வார். குற்றம் சுமத்தும் சட்ட மன்ற எதிர்க் கட்சி எம்.எல்.ஏ மாதிரி ஆணித்தரமாக சொல்வார்.
ஆங்கிலத்தில் ஆர்தர் ஹெய்லி ஒரு துறை அல்லது இடத்தின் பின்னணியில் நாவல்கள் எழுதியிருக்கிறார். அப்படி தமிழில் அதிகம் எழுதியவர் நானறிந்த வகையில் பாலகுமாரன்தான். பயணிகள் கவனிக்கவும் -விமான நிலையப் பின்னணி. தினமும் என்னைக் கவனி - லாரி ஷெட் பின்னணி. மெர்க்குரிப் பூக்கள் - தொழிற்சாலை, மற்றும் தொழிற்சங்கம் பின்னணி. சேவல் பண்ணை - பேச்சுலர்ஸ் மேன்ஷன் பின்னணி. இப்படி இன்னும் பல.
பாலகுமாரனின் கதைகளில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தும். கடுமையான விவாதங்களை ஏற்படுத்தும். இரண்டு அணிகளாகப் பிரிந்து நின்று வாதிட வைக்கும். இதெல்லாமே ஒரு எழுத்தாளனுக்கு வெற்றிதான்.
ஒரு திருமண விழாவில் ஏற்பட்ட சாதாரண அறிமுகமும், பரஸ்பரம் கை குலுக்கலுடன் மட்டுமே எங்கள் நட்பு இருந்த சமயத்தில் விகடனில் நான் எழுதிய ஒரு கதையை வெகுவாகப் பாராட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தார் பாலகுமாரன். கையெழுத்துக்கு அருகில் குதிரை படத்துடன். அது அவர் வழக்கம்.
சென்னையில் நான குடியேறிய பிறகு பல சந்திப்புகள். போன் பேச்சுகள் என்று நட்பும் அவர் மீதான மரியாதையும் வளர்ந்தது.
பாராட்டுவதென்றாலும், கண்டிப்பதென்றாலும் இரண்டையும் உச்சமாக செய்பவர் அவர். பாக்கெட் நாவல் அசோகன் எடுத்த ஒரு விழாவில் என்னைக் கூச்சத்தில் நெளியும்படி அப்படிப் பாராட்டித் தள்ளினார்.
அவருக்கு உடல்நிலை சரியில்லாத ஒரு சமயம் விட்டுக்குச் சென்று சந்தித்தேன். அவரின் உடல் மட்டுமே சோர்ந்திருந்தது. மனதில் அந்த எழுத்து வெறி அப்படியே சுடர் விட்டபடி இருந்தது.
அவர் காலமாவதற்கு கொஞ்ச நாட்கள் முன்பு விகடன் எற்பாடு செய்த ஒரு எழுத்தாளர் சந்திப்பில் நெடுநேரம் பாசத்துடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு அனைவருக்கும் தன் கையெழுத்திட்டு இரண்டு புத்தகங்கள் கொடுத்து தனித்தனியாக அவரது போனில் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதுதான் எங்களையெல்லாம் சந்திக்கப் போகிற கடைசி சந்திப்பு என்று அவருக்கு ஒரு உள்ளுணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும். அப்படியேதான் நடந்தது.
தன் படைப்புகள் மூலம் வாழும் பாலகுமாரனை ஒரு எழுத்து ராட்சசன், அன்புச் சக்கரவர்த்தி என்றெல்லாம் அழைத்து மகிழலாம்.’’
இவ்வாறு பட்டுகோட்டை பிரபாகர் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT