Published : 18 May 2020 11:32 AM
Last Updated : 18 May 2020 11:32 AM
’வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் கட்டபொம்ம அவதாரம் எடுத்த சிவாஜியை யாரால்தான் மறக்கமுடியும்? ‘சிம்மக்குரலோன்’ எனும் பட்டத்துக்கு ஏற்ப, படம் நெடுக வெள்ளைக்காரர்களிடம் கர்ஜித்துப் பாய்ந்திருப்பார். அதேபோல், அந்தப் படத்தில் மறக்கமுடியாத கேரக்டர்... ஜாக்ஸன் துரை. இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவர் சி.ஆர்.பார்த்திபன். 90 வயதை நெருங்கிய நிலையிலும், அதே உற்சாகக் குரலும் பழசை மறக்காத ஞாபகங்களுடன் கணீரெனப் பேசினார்.
திரை அனுபவங்களையும் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார் சி.ஆர்.பார்த்திபன்.
‘இந்து தமிழ் திசை’யின் ‘RewindWithRamji' வீடியோ நிகழ்ச்சியில், நடிகர் சி.ஆர்.பார்த்திபன் அளித்த பேட்டியின் எழுத்தாக்கம் இது.
‘’எனக்கு சொந்த ஊர் வேலூர். ஸ்கூல் படிப்பை முடித்துவிட்டு, காலேஜ் படிப்பதற்காக சென்னைக்கு வந்தேன். சென்னை லயோலாவில் சேர்ந்தேன். பி.ஏ.எகனாமிக்ஸ் படித்தேன். சிறுவயதில், பள்ளியில் நடித்திருக்கிறேன். கல்லூரியிலும் நடித்திருக்கிறேன். சிவாஜியின் நடிப்பும் வசனங்களும்தான் என்னை ரொம்பவே ஈர்த்தன. நடிப்பின் மீது இன்னும் ஈடுபாடு வருவதற்குக் காரணமாக அமைந்தன.
படித்துப் பட்டம் பெற்றேன். தலைமைச் செயலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். பிறகு நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன். சென்னையின் எல்லாப் பகுதிகளிலும் நாடகம் போட்டிருக்கிறோம். பல நாடகங்களில் பல வேடங்களில் நடித்திருக்கிறேன். அந்த நாடகத்தில்.. ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகமும் ஒன்று.
ஜெமினி ஸ்டூடியோவில் வேலை கேட்டு அப்ளை செய்தேன். குமாஸ்தா வேலையோ வேறு ஏதேனும் ஒரு வேலையோ கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று காத்திருந்தேன். அழைப்பு வந்தது. ஆனால், என்னை அவர்கள் நடிகராகப் பார்த்தார்கள். ’எவ்வளவு சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அப்போது தலைமைச் செயலகத்தில் 82 ரூபாய் சம்பளம் எனக்கு. சொன்னேன். ‘150 ரூபா சம்பளம் தரோம்’ என்றார்கள். நான் யோசித்தேன். உடனே அவர்கள், ‘200 ரூபாய் தரோம்’ என்றார்கள். பிறகு என்ன நினைத்தார்களோ... ‘300 ரூபாய்’ என்றார்கள். சரியென்று சொல்லிவிட்டேன்.
‘வண்டி வரும், உங்களை பிக் அப் பண்ணிக்கும். அங்கே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டுக்கலாம்’ என்றார்கள். அதன்படி போனேன். திலீப்குமார் நடிக்கிறார். ’ஷோலே’யில் வில்லனாக நடித்த அம்ஜத்கானின் அப்பா ஜெயந்த் நடிக்கிறார். அதில் நானும் நடிக்கிறேன். ஆக, என்னுடைய முதல் படம் இந்திப்படம்தான்.
இந்தப் படத்துக்குப் பிறகு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய ‘புதுமைப்பித்தன்’ படத்தில் நடித்தேன். இதில் டி.ஆர்.ராஜகுமாரிக்கு அண்ணனாக, நாடககோஷ்டித் தலைவனாக நடித்தேன். பாலையா அண்ணன், சந்திரபாபு எல்லாரும் நடிச்சோம். டி.ஆர்.ராஜகுமாரி கூட நடிக்கவே முடியாது.
படத்தில் என் பெயர் ‘நல்லண்ணன்’. ராஜகுமாரியின் பெயர் இன்பவல்லி. கலைஞர் அப்போதுதான் முதன்முறையாக எம்.எல்.ஆ. ஆகியிருந்தார். டி.ஆர்.ராமண்ணா டைரக்ஷன். அப்போது எம்ஜிஆருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அதன் பிறகு ‘இரும்புத்திரை’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’ என தொடர்ந்து நடித்தேன். இவை எல்லாமே ஜெமினி கம்பெனிப் படங்கள். ‘அன்னையின் ஆணை’ மாதிரி வெளிப்படங்களிலும் நடித்தேன். கலைஞர், எம்ஜிஆர் எல்லோரும் பின்னாளில் முதல்வரானார்கள். அதேபோல், என் டி ஆருடனும் நடித்திருக்கிறேன். ஜெயலலிதாவுடனும் ‘மூன்றெழுத்து’ படத்தில் நடித்திருக்கிறேன். இவர்களில் சிவாஜிதான் எந்தப் பதவியும் வகிக்கவில்லை.
இந்தி, தமிழ், தெலுங்கு என 120 படங்களில் நடித்திருக்கிறேன். எதுவும் தெரியவில்லை எனக்கு. தண்ணீர் மாதிரி, நானும் அதுபாட்டுக்கு, அதன்போக்கில் போனேன். அதிர்ஷ்டம் எனக்குக் கைகொடுத்தது என்றுதான் சொல்லவேண்டும். பலபேர் கஷ்டப்பட்டு நடிக்கிறார்கள். ஆனால் படம் சரியாக போகாமல் இருந்துவிடுகிறது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.
என் வாழ்வில், எனக்கு வசனங்கள் நன்றாகக் கொடுத்து, முக எக்ஸ்பிரஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, என் நடிப்பை வெளிக்காட்டிய மிக முக்கியமான, ஒரே படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. ’புதுமைப்பித்தன்’ படமும் சொல்லலாம். சின்னப் பாத்திரங்களில் நடித்திருந்தாலும் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில், ‘பணமா பாசமா’, ‘பாலசந்தர் சார் படங்கள்’, ஸ்ரீதரின் ‘சுமைதாங்கி’ என பல படங்களைச் சொல்லலாம்.
ஜெமினிகணேசனுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். எனக்கும் அவரைப் பிடிக்கும். நான் பி.ஏ., ஜெமினி கணேசன் பி.எஸ்.சி. அவர் படங்களில் அவருக்கு நண்பனாக பல படங்களில் நடித்திருக்கிறேன்.
ராஜாஜி அவர்கள் ஒருவகையில் சொந்தம். அதாவது நாங்களெல்லாம் ஒரே வம்சம். ‘சக்கரவர்த்தி’ வம்சம். என் இன்ஷியலில் இருக்கும் ‘சி’ சக்ரவர்த்தியைக் குறிக்கும். அவருடைய ‘திக்கற்ற பார்வதி’யில் நடித்தேன். படத்துக்கு விருதெல்லாம் கிடைத்தது.
இவையெல்லாம் என் உழைப்பால் கிடைத்தது என்று நான் சொல்லமாட்டேன். அதிர்ஷ்டம். அப்படி அமைந்தது எனக்கு. அப்படி நல்ல காட்சிகளும் கிடைத்து, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பையும் அடைந்து, வெளிநாட்டில் விருதெல்லாம் கிடைத்து, நன்றாகவும் ஓடி, மிகப்பெரிய வெற்றி அடைந்ததால்தான் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் நடித்த என்னை இப்போதும் மறக்காமல் இருக்கிறார்கள்.
ஜாக்ஸன் துரையாக நடித்தேன். அந்தக் காட்சியில் உள்ள வசனங்கள் பேசப்பட்டன. சக்தி கிருஷ்ணசாமிதான் வசனம். ரத்தத்தால் எழுதினார் என்றுதான் சொல்லவேண்டும். ‘அண்ணன் (சிவாஜி) நடிக்கிறார். பாத்துக்கோ’ என்று பலரும் பயமுறுத்தினார்கள். எனக்கு பயமே கிடையாது. எனக்கு ஒண்ணும் தெரியாது. அதனால பயமும் கிடையாது. அப்படிப் பயந்திருந்தா, எப்பவோ காணாப் போயிருப்பேன்.
இந்தப் படத்துல நல்லா குளோஸப்லாம் வைச்சிருப்பாங்க. ஆக, எனக்குப் பின்னாடி அப்படி உழைச்சிருப்பாங்க. ஆனா, எல்லாப் படத்துலயும் இப்படி அமைஞ்சிருந்தா, நானும் இன்னும் பெரிய அளவுல வந்திருப்பேன். அதுக்காக வருத்தப்படலை.
ஆனாலும் நல்ல வாய்ப்பு கிடைச்சதை, சரியா நடிச்சுப் பயன்படுத்திக்கிட்டேன். ஜாக்ஸன் துரை, அப்படிப்பட்ட கேரக்டர். இத்தனை வருஷம் கழிச்சும், இன்றைக்கும் அந்தப் படம் பேசப்படுதுன்னா, கேரக்டர் பேசப்படுதுன்னா, ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு!’’ என்றார் பழம்பெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபன்.
- நினைவுகள் தொடரும்
-நடிகர் சி.ஆர்.பார்த்திபனின் முழு வீடியோ பேட்டியைக் காண :
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT