Published : 17 May 2020 01:48 PM
Last Updated : 17 May 2020 01:48 PM
டாஸ்மாக் பாதுகாப்புப் பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்த வேண்டாம் என தமிழக அரசுக்கு மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தால் தடை விலக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் நேற்று முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியிருக்கிறது. மதுப்பிரியர்கள் தனிமனித விலகலைக் கடைப்பிடிக்கவும், சட்டம் ஒழுங்கைக் காக்கவும் டாஸ்மாக் மதுக்கடைகளில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் பெண் காவலர்களும் டாஸ்மாக் வாசலில் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவது பலருக்கும் மன வேதனையை அளித்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளில் பெண் காவலர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று கோரிக்கைகள் பல தரப்பிலிருந்தும் அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராம.சேயோன் 'இந்து தமிழ்' இணையத்திடம் பேசுகையில், “தமிழகத்தில் ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் குறைந்தபட்சம் 5 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்தப் பணியில் பெண் காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இப்படி பெண் காவலர்கள், காவல் அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள், காவல்துணை கண்காணிப் பாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் சீருடையுடன் டாஸ்மாக் கடைக்கு முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதைப் பார்க்கும்பொழுது நெஞ்சம் பதறுகிறது. போற்றப்பட வேண்டிய பெண்களை, மதுப் பிரியர்களுக்குக் காவலாய் நிற்க வேண்டிய துர்பாக்கிய நிலையை தமிழக அரசு தற்போது உண்டாக்கியுள்ளது.
இந்தக் கரோனா காலத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது களத்தில் நின்று கடமையாற்றி வருகிறது தமிழக காவல்துறை. அதனால் தான் காவல் அதிகாரிகள் உள்ளிட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறைப் பணியாளர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். கரோனாவால் வாழ்வாதாம பாதிக்கப்பட்டு நிற்கும் எளிய மக்களுக்கு மனிதநேயமிக்க பல உதவிகளையும் செய்து வருகிறது தமிழக காவல்துறை. அப்படிப்பட்ட காவல்துறை பெண்களைப் போற்றி பெண்ணியத்தையும் காக்க வேண்டும். எனவே, டாஸ்மாக் பாதுகாப்புப் பணியில் பெண் காவலர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்படுவதை உடனே நிறுத்த வேண்டும் என தமிழக அரசையும் குறிப்பாக உள்துறைச் செயலாளரையும், காவல்துறை இயக்குநரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT