Published : 15 May 2020 02:46 PM
Last Updated : 15 May 2020 02:46 PM
சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளால் மேல்தட்டு, கீழ்த்தட்டு எனப் பிரிக்கப்பட்டோரில் எந்த வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் பெண்கள் என்கிற புள்ளியில் ஒரேவிதமான சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். அமேசான் பிரைமில் வெளியான வலைத்தொடரான ‘ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்’ (Four More Shots Please) , அப்படியான சிக்கல்களைப் பல்வேறு சிடுக்குகளுடன் சொல்ல முயன்றிருக்கிறது.
தாமினி ரிஸ்வி ராய், அஞ்சனா மேனன், உமங் சிங், சித்தி பட்டேல் ஆகிய நால்வரைச் சுற்றிச் சுழல்கிறது கதை. சமூகத்தின் வெவ்வேறு தரப்பைப் பிரதிபலிக்கிற இவர்களது வாழ்க்கை நான்கு வெவ்வேறு உலகங்களை நம் முன்னால் விரிக்கிறது. மேம்போக்காகப் பார்த்தால் அவர்களது உலகத்துக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லாததுபோல் தோன்றலாம். ஆனால், உண்மையில் நம்மைச் சுற்றி இருக்கிற பலரது வாழ்க்கையைத்தான் அவர்களும் வாழ்கிறார்கள்.
எதிர்பாராத சந்திப்பு
தாமினியும் அஞ்சனாவும் முப்பதுகளின் நடுவில் இருக்கிறார்கள். முற்போக்குப் பெற்றோரால் வளர்க்கப்பட்ட தாமினி, யாருக்கும் அஞ்சாத திமிர்ந்த ஞானச்செருக்குடைய பத்திரிகையாளர். பிரபல சட்ட ஆலோசனை நிறுவனத்தில் மூத்த வழக்குரைஞராகப் பணிபுரியும் அஞ்சனா, விவாகரத்தானவர். நான்கு வயது மகள் ஆர்யாவுடன் தனித்து வாழ்கிறார். உடற்பயிற்சி பயிற்றுநரான உமங், இருபால் ஈர்ப்பு கொண்டவர். தான் காதலித்த பிங்கி, தன் அண்ணனை மணம் முடிக்கிற சூழலில் வீட்டைவிட்டு வெளியேறி மும்பைக்கு வந்தவர். தான் நினைத்தவை அனைத்தும் கேட்பதற்கு முன்னரே கிடைக்கும் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தின் ஒரே வாரிசு சித்தி. உமங், சித்தி இருவரும் இருபதுகளின் தொடக்கத்தில் வாழ்க்கையை வாழ்ந்து தீர்த்துவிடும் பேராவலில் இருக்கிறார்கள். இந்த நால்வரும் ஒரு அசாதாரண சூழலில் மும்பையில் உள்ள மது விடுதியில் சந்திக்கிறார்கள். அந்தச் சந்திப்பு அவர்களை நண்பர்களாக்குகிறது. தங்களது சுக துக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். சிக்கல்களுக்குத் தீர்வு காண்கிறார்கள். சண்டையிட்டுச் சமாதானம் ஆகிறார்கள். சமாதானம் ஆன பிறகு தாங்கள் எவ்வளவு மோசமாக ஒருவரையொருவர் வசைபாடிக்கொண்டோம் என்று சொல்லி மன்னிப்புக் கேட்கிறார்கள். நால்வரும் பெண்கள் என்பதற்காகவே அனைத்துவிதமான வேறுபாடுகளையும் கடந்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் உணர்த்துகிறார்கள்.
சமூக - குடும்ப அமைப்புகளின் அழுத்தத்தால் தொலைந்துபோகிற தங்களது அடையாளத்தை மீட்டெடுக்கிற தேடல் எவ்வளவு முக்கியமானது என்பதைத்தான் இந்தப் பெண்களின் கதை சொல்கிறது. தான் உருவாக்கிய இணையதள ஊடக நிறுவனத்திலிருந்தே தாமினி வெளியேற்றப்படுகிறார். தோல்வி என்று சொல்லப்படுகிற துரோகத்தில் இருந்து அவர் மீண்டெழுந்து, நீதியரசர் ஒருவரின் மர்ம மரணம் குறித்துப் புத்தகம் எழுதுவதும் அது குறிப்பிட்ட தரப்பினரின் எதிர்ப்பைச் சம்பாதிப்பதும் சமகால அரசியல் நிகழ்வுகளைச் சொல்கின்றன. இவ்வளவு துணிச்சல் நிறைந்த தாமினி, தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னை தோல்வுயுற்றவளாகவே நினைக்கிறாள். தன்னைத் தேற்ற யாரேனும் ஒருவர் தேவை என நினைக்கிறாள். தான் விரும்புகிறவனிடம் தன்னை நிரூபிக்கக் கெஞ்சுகிறாள்.
உருவாக்கப்படும் குற்றவுணர்வு
பெண் ஏன் எப்போதும் யாரிடமாவது தன்னை நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது என்ற கேள்வியை தாமினி எழுப்புகிற வேளையில், பெண் என்பதாலேயே வேலைத் தளத்தில் புறக்கணிப்புக்கு ஆளாக்கப்படுகிறாள் அஞ்சனா. அவளுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, அவளைவிடத் தகுதிக் குறைவான ஆணுக்கு அளிக்கப்படுகிறது. பெண் வெறுப்பு கொண்ட மேலாளர், அஞ்சனாவின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் வேலைக்கும் முடிச்சுப் போடுகிறார். வேலைக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் இந்தச் சிக்கல், அஞ்சனாவை வேலையைவிட்டு விலகச் செய்கிறது.
கணவனைப் பிரிந்த பிறகு நான்கு ஆண்டுகளாக எந்த உறவிலும் இல்லாத அஞ்சனாவைத் தோழிகள் கிண்டல் செய்ய, அதுவரை மகள், குடும்பம் எனத் தன் தனிப்பட்ட தேவைகளையே மறந்துவிட்டதை அஞ்சனா உணர்கிறாள். ஆனால், அஞ்சனாவின் கணவனோ மிக எளிதாக அடுத்த உறவைத் தேடிக்கொள்கிறான். குழந்தையை வளர்க்க வேண்டிய பொறுப்பும் சமூக அழுத்தமும் பெண்களை முடிவெடுக்க விடாமல் முடக்கிவிடும் போக்குக்கு அஞ்சனாவும் பலியாகிறாள். அவளாக விரும்பி ஏற்கிற உறவு, அவளை நெருப்பில் நிற்கவைத்து அவமானப்படுத்துகிறது. கடைசியில் அவளுக்கு மிஞ்சுவதெல்லாம் குற்றவுணர்வுதான். பெண்களின் மனத்தில் முளைவிடுகிற இந்தக் குற்றவுணர்வில்தான் இந்தச் சமூகம் ஆண்டாண்டு காலமாகத் தன் பிற்போக்குத்தனத்தை வளர்த்தெடுக்கிறது.
சமூகத்தின் புறக்கணிப்பு
தன்பால் ஈர்ப்பு கொண்டோரையும் மாற்றுப்பாலினத்தோரையும் அசூயையோடு அணுகும் சமூகத்தில், தன் இருபால் ஈர்ப்புணர்வை வெளிப்படுத்த உமங் படும் பாடும் அது வெளிப்பட்ட பிறகு அவள் எதிர்கொள்ளும் சொந்த வீட்டினரின் புறக்கணிப்பும் பாலியல் சிறுபான்மையினரின் நிலைக்குச் சான்று. தன்பால் ஈர்ப்பைக் கொச்சையாகச் சித்தரித்த ‘காவிய’ படைப்புளுக்கு நடுவே உண்மையின் வழிநின்று அணுகியிருக்கிறது இந்த வலைத்தொடர். பெண்ணுக்குப் பெண் மீது ஏற்படும் காதல், நாம் கொண்டாடும் காவியக்காதல் கதைகளுக்கு எவ்வகையிலும் குறைந்ததல்ல என்பதை உமங் - நடிகை சமாரா கபூர் இருவருக்கும் இடையேயான உறவு உணர்த்துகிறது.
வாழ்க்கையில் சகல வசதிகளும் கைகூடுவது மட்டுமே நிறைவைத் தந்துவிடாது என்பதற்குச் சான்றாக இருக்கிறாள் சித்தி. அந்தப் பாதுகாப்பு வளையத்துக்குள் தன் சுயத்தைத் தொலைத்துவிட்டுத் திருமணப் பண்டமாகத் தன்னைத் தயாரித்துக்கொள்ளும் பண்பாட்டுடன் அவள் முரண்படுகிறாள். அதனாலேயே உடல் மீதான ஆர்வமும் அவமானமும் உந்தித்தள்ள, மாய உலகத்துக்குள் நுழைகிறாள். திறமையை நிரூபித்துத் தடம் பதிக்கிறவர்களுக்கு மத்தியில் தன் திறமை எதுவென்று கண்டறிய முடியாமல் குழம்பித் தவிக்கும் இளந்தலைமுறையினரின் தடுமாற்றம் அவளுக்கும் இருக்கிறது. திறமையைக் கண்டறியும் பயணத்தில் அவள் சிலவற்றை இழந்து பலவற்றைக் கற்கிறாள்.
தப்பித்துவிடும் ஆண்கள்
தனி மனித வளர்ச்சியைக் குடும்பமும் சமூகமும் எந்த அளவுக்குப் பாதிக்கின்றன என்பதையும் இந்த நால்வரின் கதை சொல்கிறது. இவர்களைப் போன்ற முற்போக்கு பெற்றோர் கிடைக்க மாட்டார்களா என நாம் ஏங்கும்போது அப்படியான பெற்றோரால் தன் குழந்தைப் பருவம் தொலைந்துபோனதை நினைத்து தாமினி வருந்துகிறாள். அம்மாவைவிட அப்பாவுக்குத்தான் தன் மீது பாசம் அதிகம் என்று நம்பி வளரும் சித்தி, கையறுநிலையில் தன்னைக் கைவிட்டுவிட்ட அப்பாவை நினைத்து வருந்துகிறாள். எந்த உறவையும் சட்டென்று கடந்துவிடுவது ஆணுக்கு எளிது என்பதைத் தன் கணவன் மூலம் உணரும் அஞ்சனா, உறவு சார்ந்த சிக்கல்களில் ஆணே எளிதில் தப்பித்துவிடுகிறவனாகவும் இருக்கிறான் என்பதைத் தன் புதிய உறவால் உணர்கிறாள். திருமணத்தைக் கைவிடுவதன் மூலமாக, எந்த உறவாக இருந்தாலும் அதில் ஒருவரது கை ஓங்கியிருக்க, அடுத்தவர் ஒடுங்கியிருப்பது ஆரோக்கியமானது அல்ல என்பதை உமங் உணர்த்துகிறாள். முன்பைவிட வாழ்க்கை நெருக்கடிகள் அதிகரித்திருக்கும் சூழலில் பெண்களை விழுங்கக் காத்திருக்கும் புதைகுழிகளையும் அவற்றை இனங்கண்டறிந்து அவர்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் இந்த வலைத்தொடர் கோடிட்டுக் காட்டுகிறது.
பெண்கள் எழுதி (தேவிகா பகத், இஷிதா மொய்த்ரா), பெண்களின் இயக்கத்தில் (அனு மேனன்- சீசன் 1, நுபுர் அஸ்தனா - சீசன் 2) வெளியாகியிருக்கும் இந்த வலைத்தொடர், ஆண்களை அவ்வளவாகக் கவரவில்லை என்பது நாம் கடக்க வேண்டிய தொலைவைக் காட்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT