Published : 14 May 2020 07:27 PM
Last Updated : 14 May 2020 07:27 PM
இசையமைப்பாளரின் வேலை பாடல்கள் மட்டுமே அல்ல. ஒரு பாட்டுக்கு நான்கு நிமிடங்கள் வீதம் ஆறு பாட்டுக்கு 24 நிமிடங்களுடன் அவருடைய வேலை முடிந்துவிடுவதில்லை. அதைக் கடந்து, இரண்டரை மணி நேரப் படம் முழுக்கவே இசையால் இட்டு நிரப்புகிற மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அப்படி நிரப்புவதை ‘கடமைக்கு’ச் செய்யாமல், கடமையாகச் செய்தவர் என்று திரையுலகினரும் சாமான்ய ரசிகர்களும் இன்றைக்குக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். ‘இந்தப் பின்னணி இசைல இவர்தாம்பா ராஜா’ என்று இன்றைக்கும் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்... இளையராஜா.
’’ ’அன்னக்கிளி’ படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து வந்த படங்களில், பின்னணி இசையில் ஒரு தயக்கம் இருந்தது. அந்த டைரக்டர்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படித்தான் கொடுக்கவேண்டியிருந்தது. ‘16 வயதினிலே’ படம் வந்தது. பின்னணி இசையில் நான் என்னவெல்லாம் நினைக்கிறேனோ அவற்றையெல்லாம் செய்ய பாரதிராஜா ஒப்புக்கொண்டார். இந்தப் படத்துக்குப் பிறகுதான், எல்லாப் படங்களுக்கும் பின்னணி இசையில் என்னால் முழுமையாக, எந்தத் தயக்கமும் இல்லாமல் பணியாற்ற முடிந்தது.
‘அன்னக்கிளி’ படத்தில் இருந்து ‘16 வயதினிலே’ படத்துக்கு முன்பு வரை நான் இசையமைத்த படங்களைப் பார்த்தால், உங்களுக்கே புரியும்’’ என்று கல்லூரி ஒன்றில், மாணவர்களுக்கு இடையே இளையராஜா பேசினார்.
’16 வயதினிலே’ படத்தில், மயிலு வரும்போதெல்லாம் ஒரு இசையை இழையக் கொடுத்திருப்பார். மயிலுக்கும் சப்பாணிக்கும், மயிலுக்கும் டாக்டருக்கும் என இசையைப் பிரித்திருப்பார். தியேட்டருக்கு வெளியே நின்று கேட்டாலும் யார் யாருக்கான இசை, இப்போது எந்தக் காட்சி ஓடுகிறது என்பதைச் சொல்லிவிடலாம்.
பாக்யராஜின் ‘விடியும் வரை காத்திரு’ படத்தின் சீரியஸை, பின்னணி இசையாலேயே நமக்கு உணர்த்திவிடுவார் இளையராஜா. அதேபோல், ‘தூறல் நின்னுபோச்சு’ படத்தில், பாக்யராஜ் - சுலக்ஷணா சம்பந்தப்பட்ட காட்சிகளின் காதலை, அந்த இசை வழியே தூதாகச் சொல்லியிருப்பார்.
‘சிந்துபைரவி’யின் மிருதங்கமும் தம்புராவும் ’முதல் மரியாதை’யின் புல்லாங்குழலும் நம்மை என்னவோ செய்யும். இம்சை பண்ணும். ‘கடலோரக் கவிதைகள்’ படத்திலும் ‘சிப்பிக்குள் முத்து’ படத்திலும் கனத்த வயலினின் நரம்பிசையும் மெல்லிய நரம்பிசையுமாக வந்து, அந்த அன்பை நம் செவிகளுக்குள் இறக்கிக் கொண்டே இருக்கும்.
‘கரகாட்டக்காரன்’ படத்தில் அத்தனைப் பாடல்களும் சூப்பர் என்று ஒற்றை வரியில் சொல்லிவிடுவோம். ஆனால், அந்தப் படத்தின் ‘சொப்பன சுந்தரி’ காருக்கு இசைஞானி போட்ட மியூஸிக், இன்றைக்கும் எல்லோருக்கும் மனப்பாடம்.
வார்த்தைகள் சொல்லாததை மெளனம் சொல்லும் என்பார்கள். பாலுமகேந்திராவின் படங்களும் மகேந்திரனின் படங்களும் அப்படித்தான். மெளனம் வழியே பேசினார்கள். அந்த மெளனத்துக்கு முன்னதாகவும் பின்னதாகவும் ஒரு ஓபனிங்கும் ஒரு எண்டிங்கும் குழையக் குழையக் கொடுத்திருப்பதுதான் இளையராஜா டச்.
‘’என்னுடைய படங்களில் மெளனத்தை சிதைக்காதவர் இளையராஜா. அவரை நானும் என்னை அவரும் புரிந்துகொண்டிருக்கிறோம். இளையராஜாவின் இசை இல்லாமல், என்னுடைய படத்தை கற்பனை கூட செய்யமுடியவில்லை. ‘உதிரிப்பூக்களில், அந்தக் குழந்தைகளுக்கும் அஸ்வினிக்குமாக படம் நெடுக பின்னணி இசையைக் கோர்த்திருப்பார். படம் பார்க்கிற கல்நெஞ்சக்காரர்களையும் கரைத்து கதறடித்துவிடும். ‘முள்ளும் மலரும்’ படத்தில், அண்ணன் தங்கைக்கான பால்யகாலத்தை நினைவூட்டும் இசையும் அப்படித்தான். ராஜாவின் காதலன் நான்’’ என்று ஒருமுறை நெக்குருகிச் சொன்னார் இயக்குநர் மகேந்திரன்.
‘அலைகள் ஓய்வதில்லை’யின் அலைகள் சத்தத்தையும் ‘காதல் ஓவியத்தின்’ தபேலாவும் மிருதங்கமும் கொஞ்சுகிற ஓசையையும் இத்தனை ஆண்டுகளாகியும் நம் காதுகள் இன்னும் இறக்கிவைக்காமலேயே இருக்கின்றன.
‘’ என்னுடைய ‘ஆண்பாவம்’ படம் ஒரு காமெடிப் படம். அதை அழகான காதல் படமாக ஆக்கியது இளையராஜா சார்தான். சைதாபேட்டையில் இளையராஜா ரசிகர் மன்றத்துக்கு நான் தான் தலைவராக இருந்தேன். பின்னாளில் அவருடன் சேர்ந்து பணிபுரிவேன் என்று நான் நினைக்கவே இல்லை. இன்றைக்கு வரை, இளையராஜா சாரின் பெஸ்ட் பிஜிஎம்களில், ‘ஆண்பாவம்’ படத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு’’ என்று பெருமையுடன் சொல்கிறார் நடிகரும் இயக்குநருமான ஆர்.பாண்டியராஜன்.
உண்மைதான். பாண்டியன் சீதாவைப் பெண்பார்க்கும் அந்தக் காட்சியை, கவிதையாக்கியிருப்பார் இளையராஜா, தன் இசையால்!
’நூறாவது நாள்’ படத்துக்கு கொஞ்சம் திகிலான பின்னணி இசை. அதேபோல், ‘டிக் டிக் டிக்’ படத்திற்கு திரில்லிங்கான பின்னணி இசை. இரண்டுக்கும்தான் எத்தனை வேறுபாடுகள், மாறுபாடுகள் காட்டியிருப்பார். ‘கோபுரங்கள் சாய்வதில்லை’யில் கலகல அருக்காணிக்கு ஆரம்பத்தில் கேலியான இசையும் பின்னர், சோகமான இசையும் தந்து, அந்தக் கேரக்டரை நமக்குள் கொண்டுவந்து ‘உச்’ கொட்டவைத்திருப்பார் ராஜா. அதுதான் ராஜகைங்கர்யம்.
’’22 படங்கள் இயக்கியிருக்கிறேன். இதில் முதல் இரண்டு படங்களுக்கு வேறு ஒருவர் இசை. அதுவும் தயாரிப்பாளர்கள் கட்டாயப்படுத்தியதால் ஏற்பட்டது. அதையடுத்து மற்ற எல்லாப் படங்களுக்கும் ராஜாதான் இசை. என் இனிய நண்பன் ராஜா. இருவரும் முதல்படம் ஒரே சமயத்தில் பணிபுரியத் தொடங்கினோம். என்னுடைய மூன்றாவது படமான ‘மூடுபனி’யில் இளையராஜாதான் இசை. அது, அவருக்கு 100வது படம். அந்த ‘என் இனிய பொன்நிலாவே’வையும் படத்தின் பின்னணி இசையையும் இத்தனை வளர்ச்சிக்குப் பிறகும் என்னால் மறக்கவே முடியவில்லை. இசைக்காகவே பிறந்தவன் என் ராஜா’’ என்று நெகிழ்ச்சி பொங்கச் சொன்னார் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திரா.
‘’என் முதல்படமான ‘ஆகாய கங்கை’க்கும் இளையராஜா சார்தான் இசை. அடுத்து எடுத்த ‘பிள்ளைநிலா’வுக்கும் அவர்தான் இசை. பிறகு பல படங்களுக்கு அவருடன் பணிபுரிந்திருக்கிறேன். என்றாலும் ‘பிள்ளைநிலா’ ரொம்பவே ஸ்பெஷல். ஒருபடத்தின் வசனங்கள் ஒலிச்சித்திரமாக வரும். அதைக் கேட்டிருப்போம். ஆனால், ‘பிள்ளைநிலா’ படத்தின் பின்னணி இசையை மட்டும் தனியே ஒரு ரிக்கார்டாகப் போட்டு விற்றார்கள். அந்த அளவுக்கு பிஜிஎம்மிலும் அவர் ராஜாதான்’’ என்று ‘பிள்ளைநிலா’ பின்னணி இசையைச் சொல்கிறார் இயக்குநரும் நடிகருமான மனோபாலா.
‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தின் பின்னணி இசையில் முக்கியமானதொரு சின்னதொரு பிட், படம் நெடுக பல இடங்களில் வரும். அது, இன்று வரை பலரின் செல்போனில் ரிங்டோன். காலர்டியூன் என இசைத்துக்கொண்டிருக்கிறது. ‘மன்னன்’ படத்தில் ரஜினியும் விஜயசாந்தியும் மோதிக்கொள்ளும் காட்சிகளில் அட்டகாச பின்னணி இசை, மோதும் இடங்களிலெல்லாம் வரும். ‘தளபதி’யின் அந்த ரயிலோசைப் பின்னணி ஏற்படுத்தியது ரயில் சோகம்.
‘மெளன ராகம்’ படத்திலும் கார்த்திக் - ரேவதிக்கு, மோகன் - ரேவதிக்கு... இருதுருவங்களென இசையை வார்த்துத் தந்திருப்பார் இளையராஜா. ’புன்னகை ‘மன்னன்’ படத்தின் பின்னணி இசை, ‘கிழக்கு வாசல்’ படத்தின் பின்னணி இசை என ராஜாவின் பின்னணி இசையே முன்னணி இசை என்பதற்கான படங்களைச் சொல்ல, அவரின் ஆயிரம் படங்களையேனும் பட்டியலிடவேண்டும். 'ஹேராம்’, ‘ஆவாரம்பூ’, ‘அவதாரம்’, ‘தேவர்மகன்’, ‘இதயம்’, ‘சின்னகவுண்டர், ‘பன்னீர் புஷ்பங்கள்’ என சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒரு டீக்கடையிலோ, ரயில்வே ஸ்டேஷனிலோ, பேருந்திலோ, யாரோ யாரிடமோ... ‘’என்ன வேணா சொல்லுங்க... யார் வேணும்னாலும் பாட்டை ஹிட்டாக்கிக் கொடுத்துடலாம். ஆனா, பிஜிஎம்னு சொல்லப்படுற பின்னணி இசையை இளையராஜா அளவுக்குப் போடுறதுக்கு இன்னும் ஒருத்தர் வரலைங்க’’ என்று எண்பதுகளிலும் சொன்னார்கள். தொந்நூறுகளிலும் சொன்னார்கள்... 2000த்திலும் சொன்னார்கள். இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
பின்னணி இசையின் முன்னணி நாயகன்... இளையராஜா.
இளையராஜா திரையுலகிற்கு அடியெடுத்து வைத்த நாள் இன்று. 1976ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதிதான் வெளியானது ‘அன்னக்கிளி’. இளையராஜா தமிழ் ரசிகர்களுக்குக் கிடைத்தநாளும் இதுவே! 44 ஆண்டுகளாகியும், ராஜாவுக்கு அவர்கள் சூட்டிய கிரீடம் அப்படியே!
இளையராஜாவை வாழ்த்துவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT