Published : 13 May 2020 01:44 PM
Last Updated : 13 May 2020 01:44 PM
‘’வாழ்க்கையில் நாம் உயரப் போகப்போக... நாம் தன்னிலை உணரவேண்டும். உணர்ந்து செயல்படவேண்டும். நான், சினிமாவில் வேஷம் போடலாம். நிஜத்தில் வேஷம் போடக்கூடாது. நான் வேஷம் போட்டேன்னா, உண்மையான விமர்சனத்தை நான் எப்படிச் சொல்லுவேன். பிரபு என்னைக் கூப்பிட்டு படத்தைப் போட்டுக்காட்டும்போது, உண்மையாய் நான் விமர்சனம் பண்ணமுடியுமா? உண்மையா இருந்தாத்தான், உண்மையான கருத்தைச் சொல்லமுடியும்?’’ என்று ஒளிவின்றி மறைவின்றி, வாழ்வியலைச் சொல்கிறார் நடிகரும் இயக்குநருமான சிவசந்திரன்.
’இந்து தமிழ் திசை’யின் ‘RewindWithRamji' நிகழ்ச்சிக்காக, நடிகர் சிவசந்திரன் மனம் திறந்து பேசினார். நீண்ட நெடிய அந்தப் பேட்டியைத் தொடங்கும்போதே, ‘இதுதான் முதன்முதலில் நான் தருகிற வீடியோ இண்டர்வியூ’ என்றார்.
அந்த வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது :
சிவசந்திரன் பேட்டி தொடர்கிறது...
‘’பிரபு கூப்பிட்டு படம் பாக்கச் சொன்னார்னா, ‘நல்லாருந்தா நல்லாருக்கு, நல்லா இல்லேன்னா நல்லா இல்லை’ன்னு சொல்லிருவேன். அவ்வளவு ஏன்.. அன்னிக்கி நான் பண்ணின படத்தையே பாத்துட்டு, ‘என்னடா இது, கேவலமாகப் பண்ணிருக்கோமே’னு யோசிப்பேன்.
‘தப்பு பண்ணிட்டேன், தப்பு பண்ணிட்டேன்’னு சொன்னேனே... நான் தப்பு பண்ணினாலும் தப்பு தப்புதான். அப்போ சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, கத்துக்கவேண்டியது நிறைய இருக்கு. பெரியவங்களைப் பாத்து கத்துக்கணும். எம்ஜிஆரைப் பாத்து கத்துக்கணும். சிவாஜியைப் பாத்து கத்துக்கணும். சிவகுமாரைப் பாத்து கத்துக்கணும். இப்போ... ரஜினிகாந்தைப் பாத்தும் கத்துக்கணும்.
ரஜினி ஒருகாலத்துல நமக்கு நண்பர்தான். அவர் ஏதோவொரு அபூர்வப்பிறவி. இல்லேன்னா, இந்த அளவுக்கு உயர்ந்திருக்கமுடியாது. ஏதோவொரு விஷயம் இல்லாம இப்படி முன்னேறமுடியாது.
அதேபோல விஜயகாந்தை எடுத்துக்கங்க... சினிமால ஜெயிச்சார். அரசியலுக்கு வந்தார். அங்கேயும் ஜெயிச்சார். இப்போ உடம்பு முடியாம இருக்கார். ரொம்ப வருத்தமா இருக்கு. அவர் பூரணமா குணமாகணும். ரொம்ப நல்ல மனுஷன் விஜயகாந்த். சீக்கிரமே குணமாகி, பழையபடி விஜயகாந்த் பேசணும். பழையபடி நடக்கணும். பழையபடி செயல்படணும். எல்லாருமே அவருக்காக வேண்டிக்கணும்.
நாம யாரையுமே நெகட்டீவ்வா நினைக்கவே கூடாது. நாம பெருசா வரோம், பெருசா வரலை, இன்னிக்கி நாம செலிபிரிட்டியா இல்ல, நாம மக்கள் முன்னிலைல இல்ல... அதெல்லாம் தேவையே இல்ல.
கையும் காலும் நல்லாருக்குதா. மத்தவங்களுக்கு நல்லதையே நினைச்சிக்கிட்டிரு. உன்னுடைய வைப்ரேஷன் அவங்களுக்குப் போய்ச்சேரட்டும். அவ்வளவுதான் என்னுடைய பாலிஸி.
ரஜினி கூட பழக்கம் இருந்துச்சு. விஜயகாந்த் கூட நல்ல பழக்கம் இருந்துச்சு. கமல் கூட நடிச்சிருக்கேன். ஆனாலும் பெரிய பழக்கமெல்லாம் இல்ல. கமல் சின்னவயசிலேருந்தே நடிச்சிட்டிருக்கார். நம்ம தமிழகத்துக்கு கமல் கிடைச்சது பெரிய விஷயம். அவர் கலைப்பொக்கிஷம். மகா நடிகர். நடிப்புக்குன்னு எந்த விருதாவது கொடுக்கறதா இருந்தா, முதல்ல கமலுக்குத்தான் கொடுக்கணும். அதுக்கு அப்புறம்தான், வேற யாருக்காவது கொடுக்கலாமானு யோசிக்கணும்.
சினிமால எல்லா முயற்சியையும் பண்ணிட்டார் கமல். படம் தயாரிக்கிறார். கஷ்டப்பட்டு, வருத்திக்கிட்டு, காலை மடிச்சு நடிக்கிறார். யார் பண்ணுவா? கமல்ங்கற நடிகரை மட்டும் பார்க்கணும். கமலோட அரசியலையும் இதையும் சேர்த்துப் பாக்கக்கூடாது. அவரோட பர்சனல் லைஃபை பாக்காதீங்க. கமலோட பர்சனலைப் பாக்க நாம யாரு?
யாருடைய பர்சனல் பத்தியும் யாரும் விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை. அவங்கவங்க, தங்களோட வேலையைப் பாத்துக்கிட்டு போய்க்கிட்டே இருக்காங்க. அவங்களோட சினிமாவை விமர்சனம் பண்ணுங்க. நல்லாருக்கு, நல்லா இல்லைன்னு எதுவேணாலும் சொல்லுங்க.
கமல் பண்பட்ட நடிகர். அவரோட பங்களிப்பு எல்லா மொழிகள்லயும் இருக்கு. எல்லா மொழியிலயும் நடிச்சிருக்கார். ஜனரஞ்சகமான நடிகர்னா ரஜினி. அந்தக்காலத்துல ஜனரஞ்சகமான நடிகர்னா எம்ஜிஆர். அதேமாதிரி நடிப்புன்னா சிவாஜி, கமல்.
எம்ஜிஆரை தள்ளிநின்று பார்த்திருக்கிறேன். ஆனால் அவரைப் பார்க்கவேண்டும், பேசவேண்டும், நெருங்கிப் பழகவேண்டும் என்றெல்லாம் நினைத்ததுமில்லை. செயல்பட்டதுமில்லை. சிவாஜி சார் கூட நடிச்சதால அவருடைய பழக்கம் கிடைச்சிச்சு. ஒருவேளை, எம்ஜிஆரோட நடிக்கிற வாய்ப்பு கிடைச்சிருந்தா, பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். சத்யராஜ் அடிக்கடி என்னைக்கேப்பார்... ‘என்ன சிவா, எம்ஜிஆரைப் பாத்ததே இல்லியா?’னு! சத்யராஜும் எனக்கு நல்ல நண்பர்தான்.
இப்ப உள்ளவங்க கூடதான் நடிக்கலை. அப்போ உள்ள எல்லா நடிகர்கள் கூடவும் நடிச்சிருக்கேன். அவங்களைப் புரிஞ்சு வைச்சிருக்கேன். சினிமால வேணும்னா, நான் சப்போர்ட்டிங் ஆக்டரா இருந்திருக்கலாம். ஆனா நிஜத்துல நிறையப் படிச்சு, உலகாயத விஷயங்களை தெரிஞ்சு, புரிஞ்சுக்கிட்டிருக்கேன்.
‘சிவசந்திரன் கோபக்காரன்’னு சொல்லிட்டாங்க. ஆனா ஏன் கோபம் வருது. அதை யோசிக்கணும். சக்ஸஸ் ஆன ஒருத்தர் கோபப்பட்டா அதை ஏத்துக்கிறாங்க. சக்ஸஸ்க்காக போராடிகிட்டிருக்கறவன் கோபப்பட்டா, அவன் கோபக்காரன்னு சொல்றதுல என்ன நியாயம் இருக்கு?
நான் ரொம்ப பர்பெக்ஷன் பாப்பேன். நானும் முன்னுக்கு வரணும். நீயும் முன்னுக்கு வரணும்னு இருப்பேன். பல விஷயங்களைத் தாண்டி வந்திருக்கோம். எல்லார்கிட்டயும் எப்பவும் கோபப்படுறதில்லையே. சில காரணங்களுக்காக, சிலர்கிட்ட கோபப்படுறோம். கூட வேலை பாக்கற டெக்னீஷியன்ஸ், அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்னு சரியா பண்ணலேன்னா கோபப்படுறோம். அவங்க தங்களோட வேலையைச் சரியாச் செய்யலேன்னா கோபம் வரத்தானே செய்யும்? இதெல்லாம் நான் ஒத்துக்கமாட்டேன்.
இப்ப கதையை ரெடி பண்ணிட்டுப் போனா ஒரு நடிகர் ‘என்ன படம்லாம் பண்ணிருக்கீங்க?’ன்னு பயோடேட்டா கேக்கறார். இன்னொரு நடிகர், ‘உங்க பேங்க் பேலன்ஸ் எவ்வளவு?’ன்னு கேட்டார். இன்னொரு நடிகர், ‘ஒரு படம் பண்ணிட்டு வாங்களேன்’னு சொன்னார். இங்கே, தோத்தவன் ஜெயிக்கவே முடியாதுன்னு நினைக்கிறாங்க. தன்னை வளர்த்துக்கிட்டு வரலாமே. தோத்தவன் நிச்சயம் ஜெயிப்பான்’’ என்று உறுதியுடன் தெரிவித்தார் சிவசந்திரன்.
- நினைவுகள் தொடரும்
- சிவசந்திரனின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண :
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT