Published : 05 Aug 2015 05:57 PM
Last Updated : 05 Aug 2015 05:57 PM
இணையத்தில் வெளிவந்திருக்கும் 'தமிழ் டிஜிட்டல் காமிக்ஸ்' நாவல் 'சிவப்புக்கல் மூக்குத்தி'. வழக்கமான இந்திய, வெளிநாட்டு காமிக்ஸ்களின் மொழிபெயர்ப்பாக இல்லாமல், தமிழிலேயே உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பை உருவாக்கியிருக்கிறார், சினிமா படைப்பாளி நந்தினி. |ட்ரெய்லர் இணைப்பு கீழே|
அஜ்மல் அமீர், ரூபா மஞ்சரி உள்ளிட்டோர் நடித்த, ரொமான்டிக் நகைச்சுவைத் திரைப்படமான "திருதிரு துறுதுறு" மூலம் தமிழ்த் திரையுலகத்தில் இயக்குநராகக் கால்பதித்தவர் நந்தினி. தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்றவர். அவர் படிக்கும்போது எடுத்த "ஓட்டம்" குறும்படம் 2003-ம் ஆண்டில் வெளிவந்து தமிழ்நாடு மாநில விருதைப் பெற்றது.
தற்போது தனது கணவர் சுக்தேவ் லகிரியுடன் இணைந்து, விளம்பரம் மற்றும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நிர்வகிக்கிறார் நந்தினி. டிஜிட்டல் காமிக்ஸ் துறையிலும் கால்பதிக்க எண்ணி, தற்போது 'எம்.பி. காமிக்ஸ் ஸ்டூடியோ' என்ற பெயரில் 'சிவப்புக்கல் மூக்குத்தி' என்னும் காமிக்ஸ் நாவலைத் தயாரித்திருக்கின்றனர்.
தமிழில் புது டிஜிட்டல் காமிக்ஸ் முயற்சி குறித்து கேட்டேன். உற்சாகமாக பேசத் தொடங்கிய நந்தினி, ''சின்ன வயதில் இருந்தே எனக்குக் காமிக்ஸ் மீது தீராத ஆர்வம். திரைப்படத் துறையில் நுழைந்த பின்னர், திரைக்கதையை படக்குழுவினருக்குச் சொல்வது வழக்கம். அப்போது அவை எழுத்துக்களாக இல்லாமல் காட்சியாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று பல முறை யோசித்திருக்கிறேன். அந்த யோசனையின் அடுத்த வடிவமே, இப்புது முயற்சி. எழுத்தையும், காட்சியையும் அழகியலோடு ஒன்றிணைக்க முடிவது, தமிழ்ப் படங்களுக்கும் காமிக்ஸ் நாவல்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும். இதனால் நல்ல படங்களை காமிக்ஸ் நாவலாகவும், நாவல்களைப் படமாகவும் எடுக்க முடியும்.
தமிழில் காமிக்ஸ் நாவல்கள் அதிகம் வெளிவந்ததில்லை. குழந்தைகளுக்கான காமிக்ஸ்கள், ஆங்கிலம் மற்றும் மற்ற மொழிகளின் மொழிபெயர்ப்பாகவே இருக்கின்றன. பெரும்பாலான ஆங்கிலப் படங்கள் அவர்களின் காமிக்ஸ் நாவல்களைத் தழுவியே எடுக்கப்படுகின்றன. ஆனால் இங்கே, இளைஞர்களை மையப்படுத்திய காமிக்ஸ் கதைகள்கூட இல்லை. அவர்களுக்கான நவீன மற்றும் சம காலத்திய கதைகளைத் தர வேண்டுமென்ற ஆசை என்னை, சிவப்புக்கல் மூக்குத்தியை நோக்கித் தள்ளியது.
நந்தினி
காமிக்ஸ் நாவலைத் தயாரிப்பது என்று முடிவெடுத்ததும் அது இணைய நாவலாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். வரலாறு, மருத்துவம், இலக்கியம், சினிமா, அரசியல், தொழில்நுட்பம் என அனேகமாய் எல்லாத் துறைகள் சார்ந்த தகவல்களுக்கும் இணையத்தையே நாடுகிறோம். ஒரு முகவரி தேவைப்பட்டால் கூட, கூகுளாண்டவர்தான் வழி சொல்கிறார். ஆக, இளைஞர்களைப் படிக்கத் தூண்ட, இணையமே சிறந்த வெளியாகவும், வழியாகவும் என்று முடிவெடுத்தேன்.
இந்த முழு நீள கிராஃபிக் நாவலை உருவாக்க எங்கள் குழுவினருக்கு கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் ஆகியிருக்கிறது. இந்த நாவலுக்குத் தேவைப்படும் விதத்தில் படக் கலைஞர்களுக்கு நான்கு மாதங்கள் வரைகலைப் பயிற்சி அளிக்கப்பட்டது. கிராஃபிக்ஸில் புது முயற்சி காரணமாக, கடினமாய் உழைக்க வேண்டிய நிலைமை. பல்வேறு தடங்கல்கள், சிரமங்கள், பிரச்சனைகளை எதிர்கொண்டோம். ஒரு வகையாய் சமாளித்து ஜூன் மாதத்தில், தயாரிப்பு வேலைகளை முடித்தோம். தற்போது டிஜிட்டல் வெளியீடு மற்றும் ப்ரோமோஷன் வேலைகள் முடிந்து, நாவல் வெளியாகிருக்கிறது. இந்தப் புதிய முயற்சிக்கு தமிழ் இணையவாசிகள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்" என்றார் நந்தினி.
என்ன கதை?
புதிதாய்த் திருமணமான தம்பதிகளுக்கிடையே இருக்கும் காதலோடு தொடங்குகிறது கதை. வேலை காரணமாக இருவரும் சேர்ந்து, ஒரு இடத்துக்குப் பயணமாகின்றனர். கதாநாயகிக்கு அங்கே சிவப்புக்கல் மூக்குத்தி ஒன்று கிடைக்கிறது. அதற்குப் பிறகு நடக்கும் விசித்திர சம்பவங்களும், கொலைகளும், கதாநாயகியின் வித்தியாசமான நடவடிக்கைகளுக்கான காரணத்தைக் கதையின் நாயகன் கண்டறிவதே கதையாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT