Published : 12 May 2020 05:05 PM
Last Updated : 12 May 2020 05:05 PM
’சம்சாரம் அது மின்சாரம்’ படத்துக்கான பட்ஜெட் பதிமூணரை லட்ச ரூபாய். ஃபர்ஸ்ட் காப்பி. அதாவது ஃபர்ஸ்ட் காப்பின்னா, எல்லாத்தையும் சேர்த்துதான்! சரவணன் சார் அந்த வீடு கொடுப்பார்; நெகடீவ் தருவார். இந்த ரெண்டையும் வைச்சுப் படம் பண்ணனும். ஒருவேளை, அவுட்டோர், வீடு, நெகட்டீவ் செலவையும் சேர்த்தா, பதினாறு, பதினேழு லட்ச ரூபாய் ஆகியிருக்கும். ’சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை 41 நாள்ல எடுத்துமுடிச்சோம். அதுக்கு ஆர்ட்டிஸ்ட்டுகளோட கோ ஆபரேஷன்தான் காரணம்’’ என்று விவரித்தார் விசு.
’சம்சாரம் அது மின்சாரம்’ படம் வெளியான நாளையொட்டி (ஜுலை 18, 1986) கடந்த வருடம் விசு ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த பிரத்யேக வீடியோ பேட்டி இது.
அந்தப் பேட்டியின் எழுத்தாக்கம் இது :
‘’ ‘ சம்சாரம் அது மின்சாரம்’ படத்துக்கு முன்பு வரை ‘மணல் கயிறு’, ‘டெளரி கல்யாணம்’ என்றெல்லாம் பெயர் வைத்தேன். இந்தப் படத்துக்குப் பிறகு, ‘வரவு நல்ல உறவு’, ‘பெண்மணி அவள் கண்மணி’, ‘திருமதி ஒரு வெகுமதி’, ‘வேடிக்கை என் வாடிக்கை’ என்றெல்லாம் பெயர் வைத்ததற்கு காரணம் இருக்கிறது.
சினிமாவில் அதிர்ஷ்டத்துக்கு ரொம்பவே முக்கியத்துவம் உண்டு. ‘சார் அப்படியே வைங்க, அப்படியே வைங்க’ன்னு சொல்லுவாங்க. அப்புறம் இப்படி வைச்சு நாலு படம் ஃபெயிலியராச்சுன்னா, ‘அதுமாதிரி வைக்காதீங்க’ன்னு சொல்லிருவாங்க. அதனால இப்படி வைச்சதுக்கு வேற எந்தக் காரணகாரியமும் கிடையாது.
இதுல என்னன்னா... ‘இந்த பட டைட்டில் ஸ்டைல், விசு ஸ்டைல்னே வந்துச்சு. இதுல ஒருவிஷயம்... எங்கிட்ட அஸிஸ்டெண்டா இருந்த டி.பி.கஜேந்திரன், ‘பெண்கள் வீட்டின் கண்கள்’னு படம் டைரக்ட் பண்ணினார். பார்த்தால்... அவருக்கு எந்தப் பேருமே கிடைக்கலை. விசு விசு படம்னே சொன்னாங்க. நானும் அவரும் நிக்கும்போதே, எங்கிட்ட வந்து, ‘பெண்கள் வீட்டின் கண்கள் பாத்தேன் சார். ரொம்ப நல்லாருந்துச்சு சார்’னு சொல்லுவாங்க. காரணம்... ‘சம்சாரம் அது மின்சாரம்’ மாதிரியே பட டைட்டில் ரைமிங்கா இருந்ததுதான்!
சரி... ‘சம்சாரம் அது மின்சாரம்’ விஷயத்துக்கு வருவோம்.
படத்துல இந்தந்த கேரக்டருக்கு இவங்கவங்கதான் நடிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். எதையும் மாத்தல. யாரையும் மாத்தல. இந்த சமயத்துல ஏவிஎம்.சரவணன் சார் பத்தி சொல்லணும். படத்தோட வெற்றிக்கு ரெண்டு கிரெடிட் அவர்தான்னு சொன்னேனே... மூணாவது கிரெடிட்டும் அவருக்குக் கொடுக்கறேன்.
கதையைச் சொன்னேன். கேட்டுட்டு, ‘நாளைக்கு சொல்றேன்’னு சொன்னார் சரவணன் சார். ‘என்னடா இது, நல்ல கதைதானே. அவருக்குப் பிடிச்சிருக்கே. அப்புறம் ஏன் நாளைக்குச் சொல்றேன்னு சொல்றார்னு எனக்கு யோசனை.
மறுநாள். சரவணன் சாரைப் பாத்தேன். ‘கதை நல்லா இருக்கு. ஆனா ட்ரையா இருக்கு. ஒரு எலெக்ட்ரிசிட்டி வயர் படம் முழுக்க இருந்தா நல்லாருக்கும்’னார். ‘என்ன செய்யணும் சார்’னு கேட்டேன். ‘ஒரு வேலைக்காரப் பெண்மணி கேரக்டரைக் கொண்டுவாங்க. அது மனோரமாவா இருந்தா ரொம்ப நல்லாருக்கும்’னும் சொன்னார். ஆக, ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்துல வேலைக்கார பெண்மணி கண்ணம்மா கேரக்டர், மனோரமா கேரக்டர், ஏவிஎம்.சரவணன் சார் சொன்னதுதான்.
பதிமூணாயிரம் அடிக்கு நான் கதை பண்ணிவைச்சிருக்கேன். இப்போ மனோரமா காட்சிகளை உள்ளே நுழைக்கணும். அதனால, அதுலேருந்து நிறைய காட்சிகளை எடுத்துட்டு, மனோரமா காட்சிகளை சேர்க்கணும். சவாலான வேலை. ஆனா சரியா அமைஞ்சிச்சு. வீடு விஷயம் சக்ஸஸ் கொடுத்ததுக்கு காரணம் சரவணன் சார். மனோரமாவை உள்ளே கொண்டு வந்த சக்ஸஸுக்கு காரணம் சரவணன் சார்.
ராமாயணத்துல, சீதையை மீட்டுக் கொண்டு வந்தது யாரு? ராமன். அதுக்கு உறுதுணையா இருந்தது யாரு? அனுமன். ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தைப் பொருத்தவரை, நான் அனுமன். மத்த எல்லா வெற்றியும் சரவணன் சாருதுதான். டெல்லில போய் விருது வாங்கற வரைக்கும் அந்தப் படம் போச்சுன்னா, அதுக்கு அவர்தான் காரணம். அப்படியொரு பண்பும், திறனும், மரியாதையும் அந்தக் காலத்து தயாரிப்பாளர்களிடம் இருந்துச்சு.
‘மணல் கயிறு’க்குப் பிறகு எல்லோருக்கும் தெரிந்த இயக்குநரானேன். இங்கே நான் சொன்னதை கவனிக்கணும்... பெரிய இயக்குநராகலை. தெரிந்த இயக்குநரானேன். ’சம்சாரம் அது மின்சாரம்’ படத்துக்குப் பிறகுதான் அப்படியொரு இயக்குநரானேன். குடும்பத்தலைவனா என்னை ரசிச்சாங்க. ஏத்துக்கிட்டாங்க.
இன்னும் சொல்லணும்னா, பின்னாடி நான் ‘அரட்டை அரங்கம்’, ‘மக்கள் அரங்கம்’ நடத்தினதுக்கெல்லாம் அந்த அம்மையப்ப முதலியார் கேரக்டர்தான் மிக முக்கிய காரணம். ஒரு குடும்பத்தலைவனா ஏத்துக்கிட்டவங்க, நான் சொன்னதையும் இதுல ஏத்துக்குவாங்கன்னு நம்பி, இறங்கினேன். இது அத்தனைக்கும் பேஸ்... ‘சம்சாரம் அது மின்சாரம்’ என்று விவரித்தார் விசு.
- நினைவுகள் தொடரும்
விசுவின் முழுமையான வீடியோ பேட்டியைக் காண :
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT