Published : 12 May 2020 03:42 PM
Last Updated : 12 May 2020 03:42 PM

கரோனா ஊரடங்கில் ஆதரவற்றோரின் ஆலமரமான ‘நிழலகம்’: ‘பாக்கெட்’ மணியில் 19 கிராமங்களை தத்தெடுத்து பசியாற்றிய இளைஞர்கள் 

மதுரை

கரோனா ஊரடங்கில் ‘நிழலகம்’ தன்னார்வ அமைப்பினர், தங்கள் ஊதியத்தின் ஒரு பகுதியை சேமித்து மதுரை மாவட்டத்தில் 18 கிராமங்களை தத்தெடுத்து அவர்களுடைய அன்றாட உணவு தேவைக்கான அரிசி, காய்கறி, மளிகைப்பொருட்கள் தொகுப்பை வழங்கியுள்ளனர்.

பிறருக்கு உதவி செய்து வாழ்வது மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமை. ஆனால், இந்த அறத்தை உணராமல் இதை செய்தால் புண்ணியம், அதை செய்தால் புண்ணியம் என்ற சுயநல கணக்குகளுடனே உதவிகள் செய்வோருக்கு மத்தியில்,

‘பசியற்ற உலகத்தை உருவாக்குவோம்’ என்ற உயரிய நோக்கத்துடன் மதுரையில் தொடங்கிய ஒரு அமைப்புதான் இந்த ‘நிழலகம்’ தன்னார்வ அமைப்பு.

அதில் தற்போது வரை அச்சு பிசகாமல் வீறு நடைப்போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பில் கல்லூரி மாணவர்கள் தொடங்கி, ஐடி நிறுவன ஊழியர்கள், பிற தனியார் நிறுவன ஊழியர்கள் வரை 200 தன்னார்வலர்கள் உள்ளனர்.

இவர்களை ஒருங்கிணைக்க 4 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட பாக்கெட் மணியில் இருந்து ஒரு சிறு தொகையை சேமித்து ஒரு நாளைக்கு மதுரையில் 2, 3 ஆதரவற்றவர்களையாவது தேடிச்சென்று சாப்பாடு வாங்கி கொடுத்து அவர்கள் பசியை போக்கி வருகின்றனர்.

பணம் கொடுக்க முடியாதவர்கள், பொது இடங்களில் டிராபிக் போலீஸாருக்கு உதவியாக போக்குவரத்து ஒழுங்கும் படுத்துவது,ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று பத்தாம் வகுப்பு, ப்ளஸ்-டூ படிக்கும் மாணவர்களுக்கு டியூசன் எடுப்பது, ஆங்கில பேச்சுத்திறன் மற்றும் ட்ராயிங் வரைய பயிற்சி கொடுப்பது போன்ற பிற தன்னார்வ பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்களை அழைத்து வந்து

‘சமூகத்திற்கு நாம் என்ன செய்யலாம்’ என மாணவர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள் அமைப்பினர்.

தற்போது ‘கரோனா’ ஊரடங்கில் பெரும்பாலும் நகர்புறங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கே பெரியளவில் உதவிகள் சென்றடைந்துள்ளது. கிராமங்கள் பெரியளவில் கண்டுகொள்ளப்படவில்லை.

ஆனால், இவர்கள் கிராமங்களில் ஊரடங்கால் அன்றாட வாழ்வாதாரத்தை தொலைத்து ஒரு வேளை உணவுக்கு கூட கிடைக்காமல்கஷ்டப்படுகிறவர்களுக்கு தேடிச்சென்று அரிசி, மளிகைப்பொருட்கள் மற்றும் காய்கறி தொகுப்புகளை வழங்கி உதவி வருகின்றனர்.

இதற்காக, மதுரை அருகே திருமங்கலம் பகுதியில் 18 கிராமங்களை இந்த அமைப்பினர் தத்தெடுத்து உதவி செய்து வருகின்றனர்.

இந்த அமைப்பின் நிறுவனர் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த அபிநயா சந்தரபாண்டியன் நம்மிடம் பேசுகையில், ‘‘நான் மதுரை பாத்திமா கல்லூரியில் எம்பிஏ படித்தேன். சமூகத்திற்கு சேவை செய்வதிலே நாட்டம் ஏற்பட்டது. அதற்காக ‘நிழலகம்’ என்ற தன்னார்வ அமைப்பை தொடங்கினேன். தன்னார்வ பணிகளில் ஆர்வமுள்ள மாணவர்கள், இளைஞர்கள் என்னுடன் கைகோர்த்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் அவரவர்களுக்குவிருப்பமுடைய சேவைப்பணிகளில் ஈடுபடுத்தி வருகிறோம்.

இளையோர் சத்தியே இந்த சமூகத்தின் முதுகெலும்பு. அவர்களை சரியான முறையில் கையாண்டால் இந்த சமூகத்தை மாற்றியமைக்கலாம். அதற்காக கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராக சென்று என்.எஸ்.எஸ்., என்.சி.சி., களில் சமூக அக்கறையுள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை எங்கள் அமைப்பில் இணைத்து சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கும், ஆதரவற்ற மாணவர்களுக்கும் எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம்.

பசியற்ற உலகை உருவாக்கும் நோக்கில் தான் நாங்கள் இந்த அமைப்பை தொடங்கினோம். இந்த ஊரடங்கில் அதுவே எங்கள் முழு முதற் நோக்கமாக கொண்டு செயல்பட்டோம்.

திருமங்கலம் பகுதியில் 19 கிராமங்களை தத்தெடுத்து, அந்த கிராமங்களில் வறுமைக்கு இலக்கான தூய்மைப்பணியாளர்கள், தினசரி கூலித்தொழிலாளர்களை அடையாளம் கண்டு ஒவ்வொருவருக்கும் ரூ.500 மதிப்புள்ள

அரிசி, பருப்பு, மளிகைப்பொருட்கள் தொகுப்பை வழங்கினோம். இதற்காக நாங்கள் யாரிடம் நன்கொடை வசூலிக்கவில்லை. நாங்கள் ஒவ்வொரும் ஒரு சிறுதொகையை பகிர்ந்து இந்த உதவியை செய்து வருகிறோம். இதை இந்த ஊரடங்கோடு நிறுத்தாமல் அதன்பிறகும் தொடர முடிவு செய்துள்ளோம், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x