Published : 31 Aug 2015 11:45 AM
Last Updated : 31 Aug 2015 11:45 AM
| இனிமை, எளிமை நிறைந்த புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்திய இத்தாலி மருத்துவரும், கல்வியாளருமான மரியா மான்டிசோரி (Maria Montessori) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 31). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:
l இத்தாலியின் கிராவல்லே நகரில் கற்றறிந்த நடுத்தரக் குடும்பத்தில் (1870) பிறந்தார். ரோம் நகருக்கு குடும்பம் குடிபெயர்ந்தது. பெண் கல்விக்கான முக்கியத்துவமும், வாய்ப்புகளும் குறைவாக இருந்ததால் ஆண்களுக்கான தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார்.
l பெண் என்பதால் மருத்துவப் படிப்பில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. போப் 13-ம் லியோவின் சிபாரிசுடன் ரோம் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் 1896-ல் சேர்ந்தார். மருத்துவப் படிப்பில் சிறப்பாகத் தேர்ச்சியடைந்து, இத்தாலியின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார். பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவராக நியமிக்கப்பட்டார்.
l குழந்தைகள் நலன், உளவியலில் அதிக கவனம் செலுத்தினார். சான் லாலென்சோ நகரில் ஏழைத் தொழிலாளர் குழந்தைகளின் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். குழந்தைகளின் இயல்பான உளவியல் பண்புகளுக்கு ஏற்ப, சுதந்திரமான சூழலில் அவர்களுக்குக் கல்வி அளிக்கும் முறையை மேம்படுத்தினார்.
l நோட்டுப் புத்தகங்களுக்கு பதிலாக பொம்மை, வண்ண அட்டை, ஒலி எழுப்பும் கருவிகள், ஓவிய, வண்ணத்தாள்கள், புட்டிகள் போன்றவற்றைக் கொண்டு, கற்றலை சுவாரஸ்யமாக மாற்றினார். குழந்தைகளும் பாடங்களை எளிதாகக் கற்றனர். இது உலகெங்கும் பரவியது.
l அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகள் அழைப்பு விடுத்தன. அங்கெல்லாம் சென்று இந்த புதிய கல்வி முறை குறித்து விளக்க உரை நிகழ்த்தினார். உலகம் முழுவதும் சிறுவர் கல்வி முறையில் ஒரு புதிய உளவியல் புரட்சி மலர்ந்தது.
l கற்பித்தல் குறித்து ரோம் பல்கலைக்கழகத்தில் பயின்றார். சுமார் 200 ஆண்டுகளின் கல்வி முறை குறித்து ஆராய்ந்தார். பல நூல்களை எழுதினார். பல்வேறு இடங்களில் இவர் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டும் நூல்கள் வெளியாகின.
l புதுமைக் கல்வித் திட்டத்துக்கான கோட்பாடுகளை 1897-ல் உருவாக்கினார். குழந்தை பிறந்தது முதல் 3 வயது வரை, 3-6 வயது, 6-12 வயது, 12-18 வயது என அவரவருக்கு ஏற்ற கல்வி முறைகள் குறித்து பகுப்பாய்வு செய்தார்.
l தனது புதிய கல்வி முறையின் அடிப்படையில் ரோம் நகரில் 1907-ல் முதல் வகுப்பைத் தொடங்கினார். இது ‘மான்டிசோரி கல்வி முறை’ என பிரபலமடைந்தது. அமெரிக்காவில் 1925-ல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்டிசோரி பள்ளிகள் தொடங்கப்பட்டன. தன் வாழ்நாள் முழுவதும் இந்த கல்வி முறையை மேம்படுத்தி வந்தார்.
l மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் கற்கும் திறனையும் மேம்படுத்தினார். 1939-ல் இந்தியாவுக்கு வந்த இவர் 8 ஆண்டுகள் தங்கியிருந்து ஏராளமான ஆசிரியர்களுக்கு மான்டிசோரி முறையில் பயிற்சி அளித்தார். பல மாநாடுகளில் பங்கேற்றார். ‘இந்தியா என் 2-வது வீடு’ என்பார்.
l இனிமை, எளிமை, உற்சாகம் நிறைந்த கல்வி முறையை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் குழந்தைகளின் படைப்பாற்றலை மேம்படுத்திய மரியா மான்டிசோரி 82-வது வயதில் (1952) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT