Last Updated : 12 May, 2020 12:09 PM

1  

Published : 12 May 2020 12:09 PM
Last Updated : 12 May 2020 12:09 PM

மே 12: உலக செவிலியர் தினம் - மருத்துவ மேலாண்மையியலின் முன்னோடியான நைட்டிங்கேல்!

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கரோனா காலகட்டத்தில், இதுவரை இல்லாத அளவுக்குச் செவிலியர்களின் சேவை மரியாதைக்குரியதாகப் போற்றப்பட்டு வருகிறது. மருத்துவத் துறையில் மருத்துவருக்கு அடுத்தபடியாக செவிலியர்களின் பணி மிக இன்றியமையாததாக இருந்தாலும் ஒரு காலத்தில் அவர்களுக்கான மதிப்பும் மரியாதையும் இல்லை. அந்த நிலையை மாற்றி, செவிலியர் பணியை வரையறுத்து, செவிலியர்களின் தாயாகப் போற்றப்படுபவர் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் .

பெண்களுக்குப் படிக்க அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில், வசதியான நைட்டிங்கேலின் பெற்றோர் தங்களுடைய இரண்டு மகள்களையும் படிக்க வைத்தனர். நைட்டிங்கேலுக்கு வடிவ கணிதத்தில் தீவிரமான ஈடுபாடு இருந்தது. தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், பழங்களை அட்டவணைப்படுத்திக் கொண்டிருந்தார்.

16 வயதானபோது ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் சேவை செய்யவே தான் பிறந்திருப்பதாக நினைத்த நைட்டிங்கேல், செவிலியர் பணியைத் தேர்ந்தெடுத்தார். அந்தக் காலத்தில் செவிலியர் பணி மிகவும் மதிப்பு குறைந்ததாக இருந்தது. ஏழைப் பெண்களே அந்தப் பணியைச் செய்துவந்தனர். அதனால் நைட்டிங்கேலின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தன்னுடைய லட்சியத்துக்குத் திருமணம் தடையாக இருக்கும் என்பதால், பெற்றோரின் விருப்பத்தைப் புறக்கணித்து செவிலியர் படிப்பில் சேர்ந்தார். 1850-ம் ஆண்டு லண்டன் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகச் சேர்ந்தார். நைட்டிங்கேலின் வேலையைக் கண்ட நிர்வாகம், ஓராண்டுக்குள் அவரை மருத்துவமனையின் சூப்ரிடெண்டண்டாக உயர்த்தியது!

மருத்துவமனையில் நிகழ்ந்த காலரா மரணங்களுக்குக் காரணம் சுகாதாரம் இன்மையே என்று கண்டுபிடித்த நைட்டிங்கேல், பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தார். இறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்தது. ஜெர்மனி சென்றபோது, கெய்ஸ்வர்த் மருத்துவமனையில் கொடுக்கப்படும் சிகிச்சையையும் பாதுகாப்பையும் கண்டு வியந்து போன நைட்டிங்கேல், அங்கு பயிற்சியும் எடுத்துக்கொண்டார்.

1854-ம் ஆண்டு துருக்கியில் உள்ள க்ரீமியன் தீவில் ரஷ்யாவுக்கும் ஐரோப்பியக் கூட்டணி நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்றது. இந்தப் போரில் இங்கிலாந்து வீரர்களின் மருத்துவச் சேவைப் பிரிவுக்கு, சிட்னி ஹேர்பர்ட் தலைவராக இருந்தார். போரில் காயம் அடைந்த வீரர்களுக்குச் சிகிச்சையளிக்க விரும்பிய நைட்டிங்கேல், 38 செவிலியர்களை அழைத்துக்கொண்டு துருக்கிக்குச் சென்றார். அங்கு செவிலியர் பெண்கள் படைக்குத் தலைமை தாங்கினார்.

நைட்டிங்கேல்

ஸ்கட்டாரியில் இருந்த மருத்துவமனையைக் கண்டதும் நைட்டிங்கேலுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அங்கு படுக்கைகள் இல்லை. போர்வை இல்லை. காற்றோட்டம் இல்லை. சிறிய இடத்தில் அதிகமான நோயாளிகள் தங்க வேண்டியிருந்தது. மிக முக்கியமாக இடம் அசுத்தமாக இருந்தது. நோயாளிகளின் நிலை பற்றிய தகவல்களும் சரியாக இல்லை. இதனால் அங்கு சிகிச்சையளிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

நைட்டிங்கேல் ஒவ்வொன்றையும் மாற்ற முடிவெடுத்தார். ஆனால், பெருக்குவது, சுத்தம் செய்வது போன்றவைதான் செவிலியர்களின் வேலையாக அப்போது இருந்தது. நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க செவிலியர்களுக்கும் அனுமதி வேண்டும் என்று போராடி, வெற்றியும் பெற்றார் நைட்டிங்கேல்.

நோயாளிகளின் பெயர், வயது, நோய், இறப்பு போன்ற விவரங்களைப் பதிவு செய்தார். அவர் உருவாக்கிய இந்த விவரங்கள் மூலம் வீரர்களின் இறப்புக்குக் காரணம் சுகாதாரச் சீர்கேடு என்பதைக் கண்டறிந்தார். நோயாளிகளின் விவரங்களை அட்டவணைப்படுத்தி, இங்கிலாந்துக்கு அறிக்கை அளித்தார். பின்னர் மருத்துவமனைக்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டன.

நைட்டிங்கேல் கடினமாக உழைத்தார். பகல் முழுவதும் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பார். இரவில் கை விளக்கை எடுத்துக்கொண்டு, மருத்துவமனையைச் சுற்றி வருவார். இதைக் கண்ட நோயாளிகள், 'கை விளக்கு ஏந்திய காரிகை', 'க்ரீமியனின் தேவதை' என்று அவரைக் கொண்டாடினார்கள். நைட்டிங்கேலின் நடவடிக்கைகளால் விரைவில் இறப்பு விகிதம் மூன்றில் இரண்டு பங்காகக் குறைந்தது.

இங்கிலாந்து திரும்பிய நைட்டிங்கேலுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விக்டோரியா ராணி நைட்டிங்கேலின் சேவையைப் பாராட்டிப் பரிசும் பணமும் வழங்கினார். ராணியின் விருப்பப்படி, படை வீரர்களின் உடல் நலன் குறித்த அரசாங்க ஆணைக்குழுவை அமைப்பதிலும் அந்த ஆணைக்குழுவுக்குத் தேவையான அறிக்கைகளைத் தயார் செய்து வழங்குவதிலும் கவனத்தைச் செலுத்தினார், நைட்டிங்கேல்.

பெண் என்ற காரணத்தால் இந்த ஆணைக்குழுவின் தலைவராக நைட்டிங்கேல் நியமிக்கப்படவில்லை. சிட்னி ஹேர்பர்ட் தலைமையேற்றிருந்தார். போரில் மடிந்தவர்களைவிட, சுகாதாரமின்மை, மருந்துப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து இன்மை போன்ற காரணங்களால் நோய்களில் மடிந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று நிரூபித்தார் நைட்டிங்கேல். இதன் விளைவாக ’மருத்துவப் புள்ளியியல்’ என்ற புது ஆய்வுப் பிரிவு தொடங்கப்பட்டது.

லண்டன் மருத்துவமனை விவரங்கள் மற்றும் மருத்துவத் தகவல்களை ஆவணப்படுத்தினார். எல்லா மருத்துவமனைகளிலும் ஒரே மாதிரியான படிவங்களைப் பயன்படுத்த வழி செய்தார். இதன் மூலம் புள்ளியியல் சொஸைட்டியின் ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி பெற்ற முதல் பெண் என்ற சிறப்பையும் பெற்றார் நைட்டிங்கேல்!

Notes on Hospitals என்ற நூலை எழுதினார். இந்த நூல் மருத்துவமனைகள், செவிலியர் கல்லூரிகளில் பயன்படுத்தப்பட்டது. 1860-ம் ஆண்டு செவிலியர் பள்ளியை ஆரம்பித்தார். தான் சேகரித்த புள்ளியியல் தகவல்களோடு, அவற்றை எளிதாகக் கண்டறியும் விதத்தில் வரைபடங்களையும் உருவாக்கினார். இங்கிலாந்து மட்டுமல்லாமல் இந்தியா உட்பட இதர நாடுகளிலும் நைட்டிங்கேலின் வழிமுறைகள் பின்பற்றப்பட்டன.

1869-ம் ஆண்டு எலிசபெத் பிளாக்வெல்லுடன் சேர்ந்து பெண்களுக்கான மருத்துவக் கல்லூரியை ஆரம்பித்தார். அடுத்த பத்தாண்டுகளில் நைட்டிங்கேல் கல்லூரியில் பயின்ற செவிலியர்கள் நாடெங்கும் சேவைகளைச் செய்ய ஆரம்பித்தனர்.

நவீன செவிலியர் துறையை உருவாக்கிய, மருத்துவ மேலாண்மையியலின் முன்னோடியாக இருந்த நைட்டிங்கேலின் புத்தகங்கள் இன்றும் செவிலியர் படிப்புகளில் பாடங்களாக வைக்கப்பட்டுள்ளன. உலக செவிலியர் தினம் நைட்டிங்கேல் பிறந்த மே 12 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x