Published : 11 May 2020 06:03 PM
Last Updated : 11 May 2020 06:03 PM
இலங்கை வானொலியின் 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவை' என்ற வார்த்தைகள் எங்கள் வாழ்க்கையோடு கலந்துவிட்டவை. பிறகான காலங்களில் உள்நாட்டு அரசியல் சூழல்களால் ஒலிபரப்பில் பல தடைகள். பிறகு வர்த்தக சேவை, ஆசிய சேவை என்று மாறி மாறி வந்தாலும் அந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் நிகழ்ச்சிகளை எங்களால் மறக்க முடியாது. அது ஒரு கனாக்காலம் போல் இப்போதும் நினைத்து ஏங்க வைக்கிறது; சிலிர்க்க வைக்கிறது; மகிழ வைக்கிறது; நெகிழ வைக்கிறது. மீண்டும் அந்தக் காலம் வராதா என்று ஏங்க வைக்கிறது.
இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்புவதில் தடைகளும் பிரச்சினைகளும் ஏற்பட்ட பிறகு என் கவனம் இங்கே நம்மூர் பக்கம் திரும்பியது .இருந்தாலும் அவர்கள் கொடுத்த திருப்தியும் மகிழ்ச்சியும் இவர்களால் சிறு சதவீதம் கூட அளிக்க முடியவில்லை. இருந்தாலும் திருச்சி ,சென்னை வானொலி நிலையங்களில் நிகழ்ச்சிகள் வழங்கியிருக்கிறேன்.
திருச்சி வானொலி நிலைய அறிவிப்பாளர்களைத் தேடித் தேடிப் போய்ப் பார்த்தபோது குரல்களுக்கும் உருவங்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது. அழகான, அடித்தொண்டையில் மிருதுவான குரலில் பேசும் தூத்துக்குடி ராஜசேகரனைப் போய்ப் பார்த்தபோது அவர் பெரிய மீசையுடன் ராணுவ ஜவான் போல் கம்பீரமாக இருந்தார் .சில்வர் குரலில் பேசிய ஆர்.சீனிவாசனைப் பார்த்த போது வெற்றிலை பாக்கு வாயுடன் வித்துவான் போலத் தோன்றினார்.
திருச்சி வானொலியின் சூப்பர் ஸ்டார் போல் நினைத்த டி.எம். கமலா ஒரு தேவதை போல குரலில் தெரிந்தவர்,நேரில் பார்த்தபோது மனம் உடைந்து சுக்கு நூறானது.
சென்னை வந்து தென்கச்சி சுவாமிநாதனைப் பார்த்தேன். வானொலி அண்ணாவையும் சந்தித்தேன்.தென்கச்சி பேசும்போது "எனக்கு ஏராளமான கடிதம் எழுதுபவர்கள் என்னை நேரில் சந்தித்த பின் எழுதுவதே இல்லை. அவ்வளவு ஏமாற்றம். தந்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டார். கேட்கும் குரல்களுக்கு நாமாக ஓர் உருவம் செதுக்கிக் கொள்வோம்; உடைகள் உடுத்தி வைப்போம்; உடல் மொழியும் சிருஷ்டித்திருப்போம். இப்படி நமக்குள் ஒரு சித்திரம் வரைந்து வைத்திருப்போம். அது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையாக இருக்கும். ஆனால் அது நேரில் பார்க்கும்போது இதற்கு நேர்மாறாக இருக்கும். ஆனால் நமக்கு ஒரு கற்பனை செய்யும் சுதந்திரம் இருந்தது. தொலைக்காட்சியில் பார்க்கும்போது அவர்கள் காட்டும் முகத்தை, உடையைத்தான் நாம் பார்க்க வேண்டும்.அதனால் அவை சலிப்பூட்டுகின்றன.
வானொலி மூலம் தேனொலியாக நம் காது வழியாக நுழைந்து நம்மைக் காதலிக்க வைத்த குரல்கள் நிறைய உண்டு. சில குரல்களுக்குரியோரைப் பார்க்க முடியாவிட்டாலும் அது அப்படியே போகட்டும். அந்தக் குரலும் அது சார்ந்த கற்பனை வடிவமும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
வாழ்வின் மீது பிடிப்பும் ரசனை உணர்வும் வளர்த்த வகையில் கலை உணர்வைப் பாமரனுக்கும் ஊட்டிய வகையில் இலங்கை வானொலிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. என்னைப் போன்ற லட்சக்கணக்கானவர்களுக்கு மனதின் கரடுமுரடான பகுதியைச் செப்பனிட்டு நீர் பாய்ச்சி, நெகிழ வைத்துச் செழுமைப்படுத்தி ,ரசனையை மேம்படுத்தியதில் இலங்கை வானொலியின் பணியை மறக்க முடியாது.
இன்று 'எஃப்எம் வானொலி 'என்கிற பெயரில் ’குரைப்பது’ போல் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது. இடையில் வரும் விளம்பரங்களும் எரிச்சலின் உச்சம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர்கள் செய்யும் அலப்பறைகள் வெறுப்பூட்டும் ரகம். அதிகப்பிரசிங்கித்தனங்களும்,தத்துபித்துத் தனங்களும், கத்துக்குட்டித் தனங்களும் அரைவேக்காட்டுத்தனங்களும் மலிந்துவிட்டன. கேட்கவும் பார்க்கவும் மிகவும் கொடூரமாக உள்ளன. கலையுணர்வு சிறிதும் அற்றவர்களாக இருக்கிறார்கள். வியாபாரம் என்றும் டிஆர்பி என்றும் அலைகிறார்கள்.
ஊடக அறம் என்பது மெல்ல இறந்து வருகிறது. எல்லாமே மாறிவிட்டன. ரசனை உள்ள நிகழ்ச்சிகள் மிக மிகக் குறைந்துவிட்டன. பரபரப்பு என்கிற பெயரில் ஆபாசமும் வன்முறையும் தலைவிரித்தாடுகின்றன. இவர்கள் எப்போது திருந்துவார்கள்? ஏக்கம்தான் மிஞ்சுகிறது. என்றாலும் இதுபோன்ற ஊரடங்கு நெருக்கடிக் காலங்களில் தொலைக்காட்சியும் இல்லாமல் போனால் வானொலி மட்டும்தானே நமக்கு நண்பனாக இருக்கமுடியும்.
அருள்செல்வன்,
தொடர்புக்கு: arulselvanrk@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT