Published : 11 May 2020 12:48 PM
Last Updated : 11 May 2020 12:48 PM
மதுரையில் கரோனா ஊரடங்கால் மருந்து மாத்திரைகள் வாங்கp பணமில்லாமல் உயிருக்குப் போராடிய மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மதுரையை சேர்ந்த கேரள ஐஏஎஸ் அதிகாரி உதவினார்.
மதுரை பசுமலையில் 68 வயது பெண் ஒருவர், தனியார் மருத்துவமனையில் மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சைப்பெற்று வருகிறார். இவருக்கு 35 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இன்னும் திருமணமாகவில்லை. தாயும், மகளும் சிறிய வாடகை வீட்டில் வசிக்கின்றனர். மகள் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைப்பார்த்து வந்தார். ஊரடங்கால் அவருக்கு, ஊதியம் கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில், இவரது தாயோட புற்றுநோய் தீவிரமடைந்துள்ளது. சாப்பிட்டு வந்த மருந்து, மாத்திரைகளும் தீர்ந்துபோய்விட்டது. அரசு மருத்துவமனையில் தற்போது ‘கரோனா’ சிகிச்சைக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
மேலும், அரசு மருத்துவமனைக்கு இவரை அழைத்து சென்றாலும் புதிதாக ஆரம்பத்தில் இருந்து மருத்துவப்பரிசோதனைகள் பார்க்க வேண்டும். மேலும், இந்த ஊரடங்கு சுழலில் அரசு மருத்துவமனை மருத்துவர்களால் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைகளை விரைவாக பார்க்க முடியுமா என்று தெரியாததால் தாயிக்கான மருத்துவத்திற்கு மருந்து வாங்குவதற்கு, அந்த பெண் பல்வேறு இடங்களில் கடனும், உதவியும் கேட்டுள்ளார். கிடைக்கவில்லை.
அதனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது தாய் உடல்நிலை மோசமடைந்தது. இந்த தகவல், சமூக ஆர்வலர் மணிகண்டன், தனது நண்பரும், கேரளா மாநில ஐஏஎஸ் அதிகாரியுமான எம்ஜி.ராஜமாணிக்கம் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
ராஜமாணிக்கம், ஆரம்பத்தில் கொச்சி, திருச்சூர் மாவட்ட ஆட்சியராக இருந்தார். தற்போது கேரளா மாநில சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குனராக உள்ளார். அவர், மருந்து மாத்திரை இல்லாமல்உயிருக்குப்போராடும் பெண்ணிற்கு உதவி செய்ய முன்வந்தார்.
மருந்து மாத்திரைகளுக்கான செலவு, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அவரது வாழ்வாதாரதிற்கு அரிசி, மளிகைப்பொருட்கள் உள்பட ரூ.10 ஆயிரத்திற்கு உதவி செய்தார். மேலும், அந்த பெண்ணின் மருத்துவத்திற்கும் தொடர்ந்து உதவிசெய்வதாகராஜமாணிக்கம் ஐஏஎஸ் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் மணிகண்டன் கூறுகையில், ‘‘ராஜமாணிக்கம் ஐஏஎஸ், மதுரை அருகே திருவாதவூரைச் சேர்ந்தவர். இவர் கேரளாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும், அவரது சொந்த ஊரான திருவாதவூருக்கும், அங்குள்ள பள்ளிக்கும், போட்டித்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் உதவி வருகிறார்.
அதுபோல், மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கான உதவி என்றாலும் தற்போது வரை உதவி செய்து வருகிறார். தற்போது இந்த பெண்ணின் புற்றுநோய்க்கும், அவரைப் போல், இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு உதவுவதாகக் கூறியுள்ளார். அதற்கான பயனாளிகளை அடையாளம் கண்டு உதவ ஏற்பாடு செய்து வருகிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT