

ஆடல் வல்லான் நடராஜரால் புகழ்பெற்ற சிதம்பரம் நகரம் இப்போது கரோனா வைரஸ் தொற்று பரவலால் தகித்துத் தவிக்கிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடலூர் மாவட்ட கரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதய நிலையில் இங்கு 60 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அங்கு பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில், அங்கு பணியாற்றும் இரண்டு மருத்துவர்கள் உட்பட ஆறு பேருக்கு கரோனா தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அவர்களும் இங்கேயே தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், சிதம்பரத்தின் பிற பகுதியிலும் தொற்று பரவல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தேரோடும் வீதியான தெற்கு ரதவீதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு வந்த சீா்காழி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே பகுதியில் மருத்துவா் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தெற்குரதவீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாகியுள்ளது.
இதேபோல, வடக்கு மெயின் ரோட்டில் ஒரு கட்டிடத்தில் தங்கியிருந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த நான்கு கட்டுமான தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதியும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, சீா்காழி மெயின்ரோட்டில் உள்ள காவலா் குடியிருப்பிலும் ஒரு பெண்ணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதியும், கீழப்புதுத் தெருவில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்தப் பகுதியும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாறியுள்ளது.
இப்படி சிதம்பரத்தில் எப்போதும் பரபரப்பாய் மக்கள் நடமாட்டம் உள்ள முக்கிய பகுதிகள் பலவும் கரோனா பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் என்ன செய்வது, நோய்த் தொற்றிலிருந்து தங்களை எப்படிக் காத்துக்கொள்வது என்று புரியாமல் தவித்து நிற்கிறார்கள் சிதம்பரம் மக்கள்.