Published : 09 May 2020 03:04 PM
Last Updated : 09 May 2020 03:04 PM
மதுரையில் சலூன் கடைக்காரர் ஒருவர், தன்னுடைய மகள் படிப்பிற்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாய் பணத்தில் வறுமையில் வாடும் தன்னுடைய வாடிக்கையாளர்கள் குடும்பத்திற்கும், அவர்கள் வசிக்கும் பகுதி மக்களுக்கும் 5 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வாங்கிக் கொடுத்து, நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.
‘கரோனா’ ஊரடங்கில் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதிகமான பாதிப்பை சந்தித்தவர்கள் சலூன் கடைக்காரர்கள். அதில் பணிபுரியும் முடிதிருத்தும் தொழிலாளர்கள். கடந்த 2 மாதமாக கடையைத் திறக்கஅரசு அனுமதிக்கவில்லை.
‘கரோனா’ அச்சத்தால் யாரும் அவர்களை வீட்டிற்கு வரவழைத்து முடித்திருத்தம் செய்யவும் அழைக்கவில்லை. சுயமாகவே அவரவர் குழந்தைகளுக்கு அவர்களே முடித்திருத்தம் செய்து கொண்டனர். அதனால், சலூன் கடைக்காரர்கள் வருமானம் இல்லாமல் அவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது.
தற்போது ‘கரோனா’ அச்சம் குறைந்த நிலையில் மற்ற தொழில்களை தொடங்குவதற்கு அனுமதி வழங்கும் தமிழக அரசு தற்போது வரை சலூன் கடைகளை மட்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கவில்லை.
எதிர்காலம் என்னவாகும் தெரியாத இந்த பொருளாதார நெருக்கடி நேரத்தில் மதுரை மேலமடையில் வசிக்கும் சலூன் கடைக்காரர் பி.மோகன் என்பவர், தன் குழந்தை படிப்பிற்காக வங்கியில் சேமித்த பணம் ரூ.5 லட்சத்தைக் கொண்டு வறுமையில் வாடும் தன்னோட கடையில் முடிதிருத்தம் செய்ய வரும் வாடிக்கையாளர்கள் குடும்பத்திற்கும், தன் பகுதியில் வசிக்கும் அடித்தட்டு தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் அரிசி, காய்கறி, மளிகைப்பொருட்கள் கொண்ட 2 பைகளை வழங்கி அவர்கள் பசியைப் போக்கியுள்ளார்.
அவரது இந்த உதவி அப்பகுதியில் இருப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளதோடு சுயநலமுடன் ஓடும் இந்த சமூகத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இதுகுறித்து சலூன் கடைக்காரர் பி.மோகன் கூறுகையில், ‘‘என்னுடைய சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பக்கம். 20 ஆண்டுகளுக்கு முன் பிழைப்பிற்காக மதுரைக்கு வந்தேன். படிப்பு எதுவும் இல்லை.
என்னை வாழ வைத்தது, இந்த ஊரும், இந்த ஊர் மக்களும்தான். அவர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் உதவுவது மகிழ்ச்சியாக உள்ளது. எனது மகள் நேத்ராதான் அதற்குக் காரணம். 9-ம் வகுப்பு படிக்கும் அவரது மேல் படிப்பிற்காக சலூன் கடை வருமானத்தில் சிறுகசிறுக சேமித்து 5 லட்சம் ரூபாய் வங்கியில் போட்டிருந்தேன்.
அவ்வப்போது ரியல் எஸ்ட்டேட் தொழிலும் பார்த்து வந்தேன். கடவுள் எனக்கும், என் குடும்பத்திற்கும் எந்தக் குறையும் வைக்கவில்லை.
‘கரோனா’வால் என் கடையை மூடியதால் வருமானம் இல்லாவிட்டாலும் என்னோட அன்றாட வாழ்வாதாரத்திற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. நாங்கள் குடியிருக்கும் பகுதியில் சாதாரண ஏழை, எளிய மக்கள்தான் வசிக்கிறார்கள். அவர்கள் அன்றாடம் வேலைக்குப் போனால்தான் வீட்டில் சமைக்க முடியும். இந்த ‘கரோனா’ ஊரடங்கால் அவர்களும்,
எங்கள் கடைக்கும் முடி வெட்ட வரும் வாடிக்கையாளர்கள் பலரின் குடும்பங்களும் அன்றாட சாப்பாட்டிற்கே தற்போது மிகவும் சிரமப்படுகிறார்கள். சிலர் என் வீட்டிற்கு வந்து அழவே ஆரம்பித்து விட்டார்கள்.
இதைப்பார்த்த என் மகள் தான், படிப்பிற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் அப்பா, அந்தப் பணத்தில் சாப்பாட்டிற்கு வழியில்லாதவர்களுக்கு உதவுங்கள் என்றார்.
அந்த சின்னக் குழந்தை உள்ளத்தில் ஏற்பட்ட இரக்கத்தைப் பார்த்து நானும் என் மனைவியும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். உடனே வங்கியில் இருந்து சேமிப்புப் பணம் 5 லட்சம் ரூபாயை எடுத்து வந்து, எங்கள் பகுதியில் கஷ்டப்படுகிற குடும்பத்திற்கும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் 5 கிலோஅரிசி, ஒவ்வொரு கிலோ காய்கறி, மளிகைப்பொருட்கள், எண்ணெய் போன்றவற்றை இரண்டு பை நிறைய கொடுத்தோம்.
இதுவரை 650 குடும்பங்களுக்கு உதவியுள்ளோம். 5 லட்சமும் காலியாகவிட்டது. தற்போது எனது மனைவியின் நகையை அடகு வைத்தேன். அந்த பணத்தில் மீதமுள்ள இன்னும் பலருக்கு உதவ உள்ளேன்,’’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT