Published : 07 May 2020 02:55 PM
Last Updated : 07 May 2020 02:55 PM
கோவைக்கு மேற்கே 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆனைகட்டி. இதையடுத்து கேரளத்தின் அட்டப்பாடி பகுதி அமைந்திருக்கிறது. இரு மாநில எல்லைகளை இங்கே பிரிப்பது கொடுங்கரைப் பள்ளம் என்கிற காட்டாறு. காடும், மலைகளும் நிறைந்த இந்தத் தமிழக - கேரள எல்லைப் பிரதேசத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன.
இவை மாவோயிஸ்ட்டுகள் நடமாடும் சென்சிட்டிவ் பகுதிகளாகவும் அறியப்பட்டிருக்கின்றன. இதனால், தமிழக சிறப்பு அதிரடிப் படை தமிழகப் பகுதி காடுகளிலும், கேரள தண்டர்போல்ட் காவல் பிரிவு கேரள பகுதிக் காடுகளிலும் ஆங்காங்கே முகாம் அமைத்து மாவோயிஸ்ட்டுகள் மற்றும் தீவிரவாதிகள் கண்காணிப்பைப் பலப்படுத்தியுள்ளன. இப்படியான இந்த எல்லைப் பிரதேசத்தில் கரோனா ஊரடங்கு காரணமாய் புதுவிதப் பிரச்சினைகள் முளைத்துள்ளன.
பழங்குடிகள் நல்லது கெட்டதுக்காகத் தமிழகத்திலிருந்து செல்ல முயன்றால் அனுமதி மறுப்பதைக் கேரள போலீஸார் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மட்டும் தமிழகப் பகுதியின் கட்டுக்காவலை மீறி உள்ளே வந்து போவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை 6 மணிவாக்கில் ஆனைகட்டிப் பகுதிக்குள் நுழைந்த கேரளக் காவல் துறை வாகனம் ஒன்று அங்குள்ள பெத்தானி மருத்துவமனை எதிரே உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பிவிட்டு வந்துள்ளது. அப்போது தமிழகப் பகுதியிலிருந்து 24, வீரபாண்டி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவ்வாகனத்தைத் தடுத்துள்ளனர். அப்போது கேரளப் போலீஸார் அவர்களைத் தரக்குறைவாகப் பேசியுள்ளனர். இதை வேடிக்கை பார்த்த தமிழகக் காவல் துறையினர், ஒரு கட்டத்தில் சமாதானம் பேசி கேரள போலீஸாரைப் பத்திரமாகக் கேரள எல்லைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இதேபோல் அடிக்கடி கேரளப் போலீஸார் தமிழகப் பகுதிக்கு வருவதும், வாகனங்களுக்குப் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு சாவகாசமாகச் செல்வதும், இங்குள்ளவர்கள் தட்டிக்கேட்டால் பதிலுக்குச் சூடான வார்த்தைகளை வீசுவதும் தொடர்கதையாகி வருகிறது. தமிழகப் போலீஸாரோ அதைத் துளியும் கண்டுகொள்வதில்லை என்று குமுறுகின்றனர், இப்பகுதியில் இருக்கும் சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள்.
“இனம் இனத்தோடு, போலீஸ் போலீஸோடு என்கிற போக்குதான் இங்கே நடக்கிறது. இத்தனைக்கும் தமிழகப் போலீஸார் ஒருவரைக்கூட கேரள போலீஸார் தம் எல்லைக்குள் அனுமதிப்பதில்லை. வங்கிக்கு, மருத்துவமனைக்கு, விவசாயம் சார்ந்த பொருட்கள் எடுப்பதற்கு என்று எதற்கும் அனுமதி இல்லை. ஆனால், கேரளத்தைச் சேர்ந்த போலீஸார் காய்கனி, மளிகைப் பொருட்கள், பெட்ரோல், டீசல் என எல்லா அத்தியாவசியத் தேவைக்கும் தமிழகப் பகுதிக்குள்தான் வருகின்றனர். நம்மூர்ப் போலீஸாரைக் கேட்டால், ‘தேவையில்லாமல் எல்லைப் பிரச்சினையை நாமே உருவாக்க வேண்டாம்’ என்கிறார்கள்.
”அவர்கள் ஒரு வேனில் ஏழு பேர், எட்டுப் பேர் கூட வருகின்றனர். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. ஆரம்பத்தில் கேரளத்திலிருந்துதான் கரோனா தொற்று தமிழகத்திற்குப் பரவியது. அப்படியிருக்க அவர்களை இப்படி அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்?” என்று தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் கேட்கின்றனர்.
இது பற்றித் தமிழகப் போலீஸாரிடம் கேட்டால், “அவர்களாவது நம் பகுதிக்குள் வருகிறார்கள். பெட்ரோல் அடித்துவிட்டு கடைகளில் சில பொருட்களை வாங்கிவிட்டு உடனே சென்றுவிடுகிறார்கள். நம் பகுதி மக்கள் பொதுமுடக்கத்தை மதிக்காமல் வெளியில் திரிகிறார்களே… நாங்கள் யாருக்காகப் பேசுவது?” என்கின்றனர்.
“இது எல்லைப் பகுதியாக இருப்பதாலும், காடுகள் அடர்ந்த மலைக்கிராமங்களாக இருப்பதாலும் சமூக விரோதச் செயல்கள் சுலபமாக நடக்கின்றன. போதாக்குறைக்கு, ஆனைகட்டியிலிருந்து மாங்கரை வரைக்கும் செங்கல் சூளைகள் நிறைந்திருப்பதால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று அடிக்கடி வெளியில் கிளம்பிவிடுகிறார்கள். அதையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது” என்றும் போலீஸார் குறிப்பிடுகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று, மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பிய வெளிமாநிலத் தொழிலாளர்களை வெள்ளருக்கம் பாளையம் மலைப் பகுதியில் போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்தத் தொழிலாளர்களோ, “இந்த நோய் எப்போது அடங்குறது நாங்க எப்போ ஊருக்கு போறது? எத்தனை நாளைக்குத்தான் நாங்கள் சூளைகளிலும், தோட்டங்காடுகளிலும் தங்கியிருப்பது இப்போ எங்களுக்கு வேலையும் இல்லை. சொந்த ஊருக்கு எங்களைப் போக விடுங்கள்” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போலீஸார் அவர்களைச் சமாதானப்படுத்தி உணவு வசதி செய்து கொடுத்து ஒரு தோட்டத்தில் தங்க வைத்துள்ளனர்.
இன்று மாங்கரையில் டாஸ்மாக் மதுபானக் கடை கோலாகலமாகத் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆனைகட்டி ஜம்புகண்டியில் இருந்த மதுக்கடை, மக்கள் போராட்டத்தின் மூலம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆனைகட்டியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாங்கரையில் மதுபானக்கடை திறக்கப்பட்டது.
“இத்தனை நாள் ஊரடங்கி இருந்த மதுப்பிரியர்கள் இனி சும்மா இருக்க மாட்டார்கள். இந்த பத்து கிலோ மீட்டருக்கும் இருசக்கர வாகனங்களில் பறந்துகொண்டே இருப்பார்கள். இதில் கேரளக்காரர்கள் அனுமதிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இனி, எங்கள் ஊர் என்னத்துக்காகுமோ... எல்லைப் பகுதி என்ன பாடுபடுமோ?” என்று கவலைப்படுகிறார்கள் ஆனைகட்டி மக்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT