Published : 07 May 2020 11:15 AM
Last Updated : 07 May 2020 11:15 AM
கரோனா வைரஸ் தொற்று காரணமாக லித்வேனியாவில் மூடப்பட்ட சர்வதேச விமான நிலையத்தை திறந்தவெளி திரையரங்கமாக மாற்றியுள்ளனர்.
இந்த கரோனா காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் லாக்டவுனில் முடங்கியுள்ளன. பொதுமக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் முதலே தியேட்டர்கள், மால்கள், கேளிக்கை விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் அனைத்தும் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன. தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் மட்டுமே பொதுமக்களின் லாக்டவுன் பொழுதுகளை ஓரளவுக்கு ஈடுசெய்து வருகின்றன.
மேற்கத்திய நாடுகளில் எப்போதுமே வார இறுதியில் கொண்டாட்டங்களில் மக்கள் திளைப்பார்கள். ஆனால், இந்த கரோனா காலம் அவர்களை ஓரிடத்திலேயே முடக்கிப் போட்டு வைத்திருக்கிறது. இந்தக் கடினமான சூழ்நிலையிலிருந்து எப்போது மீள்வோம் என்று மக்கள் நினைக்கும் வேளையில், ஐரோப்பிய நாடான லித்வேனியாவில் புதிய ஐடியா ஒன்றைச் செயல்படுத்தியிருக்கிறார்கள். அந்நாடு கடந்த மார்ச் 16-ம் தேதி முதலே லாக்டவுனில் இருப்பதால், விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதில் விலினஸ் சர்வதேச விமான நிலையத்தை தற்போது திறந்தவெளித் திரையரங்கமாக மாற்றியிருக்கிறார்கள்.
விமான ஓடுதளப் பாதைக்கு மத்தியில் திரையை அமைத்து அதைச் சுற்றி கார்களில் இருந்தபடி சினிமா பார்க்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்தத் திறந்தவெளி திரையரங்கத்துக்கு கார்களில் மட்டுமே வர வேண்டும்; ஒரு காரில் இரண்டு பேர் மட்டுமே வரலாம்; எக்காரணம் கொண்டும் காரின் கதவு, ஜன்னல்களைத் திறக்கக் கூடாது; சமூக விலகலுக்கான நிபந்தனைகளும் அறிவிக்கப்பட்டு மே முதல் தேதி முதல் இந்தத் திரையரங்கம் செயல்படத் தொடங்கியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிலேயே அடைந்துகிடக்கும் அப்பகுதி மக்களுக்கு இது பெரிய கொண்டாட்டமாகியுள்ளது. திறந்தவெளி திரையரங்கம் பற்றிய அறிவிப்பு வந்து டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கியவுடனே ஆன்லைனில் டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டன. முதல் படமாக ஆஸ்கர் விருதை வென்ற தென்கொரியத் திரைப்படமான ‘பாரசைட்’ திரையிடப்பட்டது. இப்படத்தைக் காண 160 கார்களில் மக்கள் விமான நிலையத்துக்கு வந்தனர். தற்போது மே 11 வரை லித்வேனியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்பதால், மே மாதம் இறுதிவரை இந்தத் திறந்தவெளி திரையரங்கம் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவால் வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கும் லித்வேனியா மக்களுக்கு, இந்தத் திரையரங்கம் கொஞ்சம் ஆசுவாசத்தைக் கொடுத்துள்ளது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT