Published : 14 Aug 2015 10:32 AM
Last Updated : 14 Aug 2015 10:32 AM
போஸ் ஓய்வு பெற்ற அரசு அலு வலர். வீட்டில் கண்டிப் புக்கு பெயர் போனவர். இன்ஜினீயரிங் படித்து முடித்த ஒரே மகன் வாசுவுக்கு தனது சிபாரிசில் வேலை வாங்கித் தர மறுத்துவிட்டார். “அவனுக்கு திறமை இருந்தால் அவனே வேலை வாங்கி கொள்ளட் டும்” என்று பிடிவாதமாக இருந்து விட்டார்.
வாசுவும் வேலைக்கு முயற்சி செய்து எதுவும் நடக்கவில்லை. தினமும் நண்பர்களோடு வெளியே கிளம்பி விடுவான். தெருவின் எல்லையில் உள்ள ஒரு சிதிலமடைந்த சுவரில் அமர்ந்து இரவு வரை அரட்டை அடித்துவிட்டு வீட்டுக்கு வருவான்.
“தண்டச்சோறு ... இந்த காலத்து பசங்களுக்கு பொறுப்பே இல்லை. எல் லாம் உங்களுக்கு பெத்தவங்க கொடுக் குற சுதந்திரம்” என்று திட்டினாலும் வாசு மவுனமாகிவிடுவான்.
அன்று மதியம். சாப்பிட்டுக் கொண் டிருந்த வாசுவிடம் ஒரு அழைப்பிதழை காட்டி, “பாருடா, இந்த வருஷம் சுதந்திர தினத்துக்கு நம்ம காலனியில கொடி ஏத்துறதுக்கு என்னை விருந் தினரா அழைச்சிருக்காங்க... எல்லாம் நான் கட்டி காப்பாத்துன மரியாதை... நீ என்னத்தை சாதிச்சு கிழிச்ச?” என்றார்.
மௌனமாக கேட்டுக்கொண்டான் வாசு.
அன்று இரவு தாமதமாக வீட்டுக்குள் வந்த வாசுவின் கையில் ஒரு காகித பார்சல். பிரித்தவன் ஒரு பத்திரிக் கையை தந்தையின் கையில் நீட்டினான்.
ஒன்றும் புரியாமல் பார்த்த போஸிடம், “அப்பா, நானும் என் நண்பர்களும் சேர்ந்து மனித நேய கழகம் ஒன்றை சுதந்திர தினத்துக்கு ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். நாங்க வழக்கமா சந்திச்சு பேசுற அந்த குட்டி சுவருதான் எங்க சங்க அலுவலகம். எல்லோரும் அவங்க கையில இருக்குற சேமிப்பை போட்டு, படிக்க முடியாத குழந்தைகளுக்கு பண உதவி, கஷ்டப்படுற மகளிருக்கு பொருள் உதவின்னு செய்யலாம்னு இருக்கோம்” என்றான் அமைதியாக.
கோபமான போஸ், “உனக்கு பெருசா சாதிசுட்டோம்னு நெனப்போ?” என்றார்.
“பெருசா எதுவும் பண்ணிடலை தான். இருந்தாலும் நமக்கு கிடைச்ச சுதந்திரத்த நமக்கு மட்டும் வச்சு அழகு பார்க்காம, அடுத்தவங்களுக்கும் உப யோகமா செய்யணும்ல. வெறுமனே கொடி ஏத்துறது மட்டும் சுதந்திரம் இல்லைப்பா. அடுத்தவங்களையும் வாழ வைக்கணும்” என்று கூறியவாறு உள்ளே சென்று விட்டான்.
அன்று இரவு தூக்கம் வராமல் சிந்தித்துக் கொண்டிருந்தார் போஸ். “என் பெயரை மட்டுமே நிலை நாட்டிக் கொள்ள, சிறப்பு விருந்தினராக அழைத் ததற்கு பெருமைபட்டேன். ஆனால், இந்த கால தலைமுறை நாட்டின் பெயரை நிலை நாட்ட தங்களை வருத் திக் கொள்ளத்தான் செய்கிறார்கள். இளைஞர்கள் நாட்டின் தூண் என்பது சரிதான். நாளை விடிந்தவுடன் என் பங் களிப்பாக ஏதேனும் நன்கொடை தர வேண்டும்” என்று நினைத்துக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT