Published : 05 May 2020 04:56 PM
Last Updated : 05 May 2020 04:56 PM
கிட்டத்தட்ட எண்பதுகளில், எல்லா நடிகர்களுடனும் நடித்து ஒருரவுண்டு வந்த நடிகராகத்தான் இருந்திருக்கிறார் நடிகர் சிவசந்திரன். கமல். ரஜினி உள்ளிட்ட பல நடிகர்களுடன் பழகினாலும் எவரைப் பற்றியும் குறைவாகவோ தவறாகவோ சொல்வதில்லை. ஒவ்வொருவரின் பிளஸ் பாயிண்டுகளை மட்டுமே மனதுக்குள் பத்திரப்படுத்திவைத்திருக்கிறார்.
‘இந்து தமிழ் திசை’யின் ‘RewindwithRamji' எனும் நிகழ்ச்சிக்காக, சிவசந்திரன் அளித்த மனம் திறந்த வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இது.
நடிகரும் இயக்குநருமான சிவசந்திரனின் பிரத்யேகப் பேட்டி தொடருகிறது.
’’பணத்துக்காகவோ, நல்ல கேரக்டர்னோ நடிக்க ஒத்துக்கலை நான். சொன்னா ஆச்சரியப்படுவீங்க. ‘இந்தப் படத்துல பிரபு நடிக்கிறாரா? ஓகே. அவரோட நாமளும் இருப்போம்’ங்கற மாதிரிதான் பல படங்களை ஒத்துக்கிட்டேன். இப்படித்தான் கமல் சார் தயாரிப்புல, சத்யராஜ் நடிச்ச ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ வாய்ப்பை ஏத்துக்கிட்டேன்.
இப்ப யோசிக்கும்போது, ‘எவ்ளோ பெரிய தப்பெல்லாம் பண்ணிருக்கோம்’னு தோணுது. நட்புங்கறது வேற, தொழில்ங்கறது வேறன்னெல்லாம் பிரிச்சுப் பாத்து ஒர்க் பண்ணனும்னு தெரியல. ஒண்ணு மட்டும் உறுதியா சொல்லணும்... நம்மளோட முன்னேற்றத்துக்கும் ஃபெயிலியருக்கும் நாமதான் காரணம். வேற யாரும் காரணமில்லை. வேற யாரையும் காரணமாச் சொல்லவும் முடியாது.
இன்னிக்கி சினிமாவுக்கு வர்ற பசங்களெல்லாம், டான்ஸ் கத்துக்கிறாங்க, டைவ் அடிக்கிறாங்க. அன்னிக்கி, கமல் சாரும் சும்மா இருக்கலையே. டான்ஸ், பைட்னு விதவிதமா கத்துக்கிட்டாரு. ஹார்ட் ஒர்க் பண்ணினாரு. அதான் இந்த நிலைமைக்கு உசந்து நிக்கிறாரு. இப்படிலாம் நான் எதுவுமே செய்யல.
ஆனா, அதேசமயத்துல, நான் ஒரு ரைட்டர். கிரியேட்டர். டைரக்டர். அதுக்கு எவ்ளோ உழைச்சிருக்கேன்னு எனக்குத்தான் தெரியும். சில படங்கள் ஜெயிச்சிருக்கு. சில படங்கள் தோத்திருக்கு. அப்படித் தோத்ததுக்கு என்னென்ன காரணங்களெல்லாம் இருக்குன்னு எனக்குத் தெரியும். அதை வெளியே சொல்லமுடியாது.
’என் உயிர் கண்ணம்மா’ படத்தினால், மிகப்பெரிய கான்ஃபிடண்ட் வந்துவிட்டது. ’படம் நல்லாருக்கு சார். ஆனா கொஞ்சம் கமர்ஷியலா இருக்கலாம் சார்’னு சொன்னாங்க. இந்தப் படம் பண்ணின பிறகு, தயாரிப்பாளர்கள் யாரும் வரலை. பாத்தேன். நாமளே சொந்தப்படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணினேன். பிரபுகிட்ட கேட்டேன். ‘பண்ணு சிவா. பண்ணித்தரேன்’னு சொன்னார்.
இன்னிக்கி, மூணுநாலு பசங்களை வைச்சு ஏகப்பட்ட படம் பண்றாங்க. இதை அன்னிக்கே பண்னினேன். படம் பேரு ‘ரத்ததானம்’. அதேபோலத்தான் அம்மனுக்கு டான்ஸ் ஆடுறதுன்னு ‘என் உயிர் கண்ணம்மா’ல பிரபுவை டான்ஸ் ஆடவைச்சேன். இது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துல ‘ஜக்கம்மா’ பாட்டு வரும். ’என் உயிர் கண்ணம்மா’வுக்கு அப்புறம் அம்மன் டான்ஸ்னு நிறைய படங்கள்ல வந்துச்சு.
‘ரத்ததானம்’ படம், ஒரு இங்கிலீஷ் படத்தோட தாக்கத்திலிருந்துதான் எடுத்தேன். உடனே படம் பண்ணியாகணும். இந்தக் கதை பிடிச்சிருந்துச்சு. அதனால புதுசா கதை யோசிக்காம, பண்ணினேன். இந்தப் படத்துக்கு கங்கை அமரன் சார்தான் இசை. பட்ஜெட் காரணம்... அதனால இளையராஜா சார்கிட்ட போகலை. பார்த்தால், இந்த ‘ரத்ததானம்’ படம் நல்லா ஓடுச்சு. நல்ல லாபத்தைக் கொடுத்துச்சு. ’நியாயங்கள் ஜெயிக்கட்டும்’னு ஒரு படம் பண்ணினேன். அது ரொம்ப நல்ல படம். அருமையான சப்ஜெக்ட். என்னைப் பார்த்தவங்களெல்லாம், ‘ரத்ததானம்’ மாதிரி படம் எடுங்க சார்’னு சொன்னாங்க.
‘ரத்ததானம்’ படத்தையும் ‘நியாயங்கள் ஜெயிக்கட்டும்’ படத்தையும் பார்த்துட்டு கலைஞர் அவர்கள் ரொம்பவே பாராட்டினார். ’கோர்ட் சீன் வசனமெல்லாம் நல்லா எழுதிருக்கய்யா’னு சொன்னார். நூறாவது நாள் விழாவுக்கும் வந்திருந்து, பாராட்டினார். கலைஞர் சொன்ன ஐடியாவை வைச்சுத்தான், ‘நியாயங்கள் ஜெயிக்கட்டும்’ படத்துல க்ளைமாக்ஸ்ல கோர்ட் சீன் வைச்சுருந்தேன். செம ரெஸ்பான்ஸ். அதையும் பாராட்டினார் கலைஞர். இந்தப் பாராட்டுதான், நம்மளை ஒரு எனர்ஜியோட வைச்சிருக்கு. ஆக்சிஜனா இருக்கு.
நமக்கு கரெக்டான பாதைல போகத் தெரியாம இருக்கலாம். ‘சிவசந்திரனா... கோபக்காரன்யா’ன்னு சிலர் சொல்லிருக்கலாம். சிவாஜி சார்கிட்டேருந்து கத்துக்கிட்டேன். ஆறு மணிக்கு ஷூட்டிங்னா, நாலுமணிக்கே வந்துருவார். சிவகுமார் அண்ணன் ஆறுமணிக்கெல்லாம் வந்துடுவாரு. இப்படி இரு இப்படி இருன்னு சிவகுமார் அண்ணன் சொல்லிக்கொடுத்தாரு. இதையெல்லாம் உள்வாங்கித்தான் நடிகராவும் இருந்தேன். டைரக்டராவும் ஒர்க் பண்ணினேன்.
சினிமால, மார்க்கெட்டிங் பேக்கிரவுண்டு வேணும். பி.ஆர்.ஓ. வேணும். நம்மளைப் பத்தி சொல்லிக்கிட்டே இருக்கறதுக்கு ஆள் வேணும். இதெல்லாம் நமக்குத் தெரியல. நடிக்கக் கூப்பிட்டா போவேன். இல்லியா... புக்ஸ் படிப்பேன். சிவாஜி சார் வீட்டுக்குப் போவேன். யார் வம்புதும்புக்கும் போகமாட்டேன்.
ரஜினியை நல்லாத் தெரியும். விஜயகாந்த் எனக்கு நல்ல நண்பர்தான். சத்யராஜுக்கும் எனக்கும் நல்ல பழக்கம் உண்டுதான். ஆனா அதுக்காக, இதையெல்லாம் வைச்சிக்கிட்டு அவங்களைப் போய் அடிக்கடி பாக்கறதெல்லாம் செய்யமாட்டேன். அது நல்லாவும் இருக்காதுன்னு நினைக்கிறவன் நான்’’ என்று தெளிவுறச் சொல்கிறார் சிவசந்திரன்.
- நினைவுகள் தொடரும்
நடிகர் சிவசந்திரனின் முழு வீடியோவைக் காண :
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT