Published : 05 May 2020 03:35 PM
Last Updated : 05 May 2020 03:35 PM

சர்பத் சாராயமும் அரை லிட்டர் ரகசியமும்: இது கோவை கள்ளச் சாராய கலாட்டா

சர்பத் சாராயம் பிடிபட்டபோது...

பொதுமுடக்கத்துக்கு நடுவே, 7-ம் தேதியிலிருந்து டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறது. எனினும், இடைப்பட்ட நாட்களில் தமிழகமெங்கும் கள்ளச் சாராயம் ஊருக்கு ஊர் விதவிதமாய்க் கொடி கட்டிப் பறக்கிறது. அதில் கோவையில் கொஞ்சம் வித்தியாச ரசம்!

அண்மையில் கோவை பெரியதடாகம், சின்னத்தடாகம், வீரபாண்டிப் பகுதிகளில் சாராய ஊறல் பிடிபட்டது. சம்பந்தப்பட்ட நிலத்துக்காரர்களுக்குத் தெரியாமல் அங்கு பணிபுரியும் கூலித் தொழிலாளர்களின் ‘காய்ச்சுதல்’ கைங்கர்யம் அது என்று விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், அண்மையில் சர்பத் சாராயம் என்ற பெயரில் கள்ளச்சாராயக் கும்பலொன்றைப் பிடித்திருக்கிறார்கள் பேரூர் போலீஸார்.

தேவனாம்பாளையத்திலிருந்து வகுத்தம்பாளையம் செல்லும் வழியில் உள்ள வரப்பருத்திக்காடு பகுதியில் சர்பத் சாராயம் விற்கப்படுவது போலீஸாருக்குத் தெரியவந்தது. உடனே அங்கு சென்ற காவல்துறையினர் செந்தில்குமார், கருப்புசாமி, கிருஷ்ணசாமி ஆகிய மூவரைக் கைது செய்து 118 பிளாஸ்டிக் பாட்டில்களில் தலா 300 மி.லி. கொண்ட சர்பத் சாராயத்தையும் கைப்பற்றினர்.

சர்பத்துக்குப் பயன்படுத்தப்படும் கலரிங் எசன்ஸ், நன்னாரி, ஆரஞ்சு, திராட்சை, பைனாப்பிள், எலுமிச்சைப் பழ ரசங்களுடன், பெட்ரோலியத்தில் இருந்து கிடைக்கும் எத்தனால் கொண்டு கலந்து இந்த சாராயத்தைத் தயாரித்திருக்கிறார்கள் இவர்கள். இதை ‘பாண்டிச்சேரி சரக்கு’ என கிணத்துக்கடவு, ஆலாந்துறை பகுதிகளில் விற்றதும் தெரியவந்துள்ளது.

“கரோனா ஊரடங்கு காரணமாக ஊருக்குள் மதுவுக்கு நல்ல டிமாண்ட். அதுதான் உடனே ஐடியா செஞ்சு இப்படியொரு வித்தியாசமான சரக்கைத் தயாரித்தோம். ஒரு நாளைக்கு ஆளுக்கு 20 பாட்டில்கள் விற்றோம்” என்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர் சர்பத் சாராயம் தயாரித்தவர்கள்.

சமீபகாலமாகப் பிடிபடும் கள்ளச்சாராயம் எல்லாம் அரை லிட்டர் அளவிலேயே இருப்பது இன்னொரு சுவாரசியம்.

கடந்த மே தினத்தன்று பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட பெரியபுத்தூர் கொழிஞ்சி தோட்டத்தில் பிரகாஷ், பாலாஜி என்ற இரண்டு நபர்கள் கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். இவர்களிடம் பிடிபட்டது 500 மி.லி. நாட்டுச்சாராயம் மற்றும் 15 லிட்டர் ஊறல் சரக்கு. அதே நாளில் இதே பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரபாண்டி அய்யசாமி கோயில் அருகே குழந்தைவேலு, அய்யாசாமி ஆகியோர் கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் பிடிபட்டதும் 500 மி.லி. சாராயமும் 20 லிட்டர் ஊறலும் தான்.

அடுத்தது வீரபாண்டிபுதூர், அரசு மருத்துவமனை அருகில் ரஞ்சித் குமார் என்பவர் சாராயம் காய்ச்சி பிடிபட்டார். இவரிடம் இருந்ததும் 500 மி.லி. சாராயமும் 25 லிட்டர் ஊறலும்தான். அடுத்ததாக சென்னியப்பன் என்பவர் கோவில்பாளையம் வெள்ளானப்பட்டி, விஷ்ணு அவென்யூ, சோலார் கம்பெனி பின்னால் பிடிபட்டுள்ளார். இவரிடமிருந்து 2 லிட்டர் சாராயமும் 10 லிட்டர் சாராய ஊறலும் கைப்பற்றப்பட்டது.

அது என்ன சாராயம் காய்ச்சுபவர்கள் எல்லாம் அரை லிட்டர் சாராயம்தான் வைத்திருப்பார்களா, அதற்கு மேல் வைத்திருக்கவே மாட்டார்களா என்று கேட்டால் உளவுப் பிரிவு போலீஸார் சிரிக்கிறார்கள். இதைப் பற்றி ஒரு போலீஸ்காரர் விளக்கினார்.

“இப்படி சின்ன அளவில் கேஸ் போட்டால் மட்டும்தான் ஸ்டேஷன் ஜாமீனிலேயே கைதிகளை விட்டுவிட முடியும். இந்த கரோனா காலத்தில் முக்கியமான வழக்குகளில் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்தக் கைதிகளையும் சிறைக்குள் தள்ளப் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. கைதிகளில் பெரும்பாலானவர்கள் ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளார்கள்.

வெளியிலிருந்து சிறைக்குள் வருபவரிடம் கரோனா தொற்று ஏதாவது இருந்தது தெரியாமல் போய், அவரிடமிருந்து ஜெயிலுக்குள் பரவினால் கைதிகளிடம் ஏற்கெனவே இருக்கும் நோய்க்கு இது தீ மூட்டுவதாக அமைந்துவிடும். எனவேதான் இப்படி ஸ்டேஷன் ஜாமீன் என்ற அளவில் இந்த அளவிலேயே வழக்குகள் போடுகிறார்கள்” என்றார் அந்தப் போலீஸ்காரர்.

மது மீதான போதைதான் மனிதர்களை என்ன பாடுபடுத்துகிறது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x