

கரோனாவின் வீரியம் சற்றும் குறைந்தபாடில்லை. அதன் பரவல் அதிவிரைவாக அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஐம்பதாயிரத்தை நெருங்குகிறது. தமிழகத்தில் அது மூவாயிரத்தைத் தாண்டிவிட்டது. சீனாவிலும் நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. சமூக விலகல் மட்டுமே தீர்வு என்ற நிலை இருப்பதால், உலக நாடுகள், மக்களை வீட்டுக்குள் முடக்கியுள்ளன.
கரோனா தடுப்பு மருந்துக்கான முயற்சிகள் உலகெங்கும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், தீர்வு இன்னும் கிட்டவில்லை. இந்த நிலையில், தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியைச் சார்ந்த பேராசிரியர்களான முனைவர். N. சந்திரலேகாவும் முனைவர். G. அருண்குமாரும் கரோனா சிகிச்சைக்கான தீர்வு ஒன்றை, மத்திய சுகாதாரத் துறைக்கும், தமிழக சுகாதாரத் துறைக்கும் முன்மொழிந்துள்ளனர். சந்திரலேகா காமராஜ் கல்லூரியின் வேதியியல் துறைப் பேராசிரியர். அருண்குமார் காமராஜ் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர். இது குறித்து அவர்களிடம் பேசியதிலிருந்து:
கரோனாவின் தாக்குதல் ஏன் இவ்வளவு தீவிரமாக உள்ளது?
கரோனா வைரஸ் மற்ற வைரஸ்களைக் காட்டிலும் சற்றுத் தடிமனான தோலையுடைய ஒற்றைக் கிளையைக் கொண்ட ஆர்.என்.எ (RNA) வைக் கொண்டது. இதன் அளவு 26-32 Kb ஆகும். தொடக்கக் கட்டத்தில் இதன் தாக்குதலானது மேல் சுவாசக் குழாய்த் தொற்றை ஏற்படுத்தி இருமல், காய்ச்சல், தலைவலி போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதன் தாக்குதல் தீவிரமடையும்போது கீழ் சுவாசக் குழாய்த் தொற்றை ஏற்படுத்தி, நிமோனியா வடிவில் நுரையீரலை முற்றிலும் செயலிழக்கச் செய்துவிடுகிறது. சில வேளைகளில் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த வைரஸின் தாக்குதலால் மரணம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம், வைரஸின் தாக்குதலைச் சமாளிக்க, உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் மேற்கொள்ளும் முயற்சிகளில், நமது நுரையீரல் முற்றிலும் பாதிப்படைவதுதான்.
அப்படியானால், நோய் எதிர்ப்பு ஆற்றலின் பயன் என்ன?
வைரஸின் தாக்குதலை நமது உடல் குறைவான நோய் எதிர்ப்பாற்றல் கொண்டு தாக்குவதால் எவ்விதப் பயனும் உண்டாவதில்லை. அது கரோனா வைரஸ் மேலும் பரவுவதற்கே வழிவகுக்கிறது. அதற்கு மாறாக அதிகமான நோய் எதிர்ப்பாற்றல் கொண்டு நமது உடல் தாக்கும்போது, நமது நுரையீரல் பாதிப்படைந்து விடுகிறது. எனவே, இவ்விரு நிலைகளுக்கு நடுவிலான ஒரு சிகிச்சை முறையைப் பின்பற்றுவது மிகவும் அவசியமாகிறது. இந்நோயைக் குணப்படுத்தச் சரியான மருந்து இல்லாததால், ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் மருந்துகளை வைத்து இந்நோய்த் தொற்றைத் தடுப்பதே சிறந்த முறையாகும். மனித உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் டிஃபென்சின்ஸ் (Defensins) என்னும் புரதத்தை அதிக அளவில் உற்பத்தி செய்து வைரஸின் பரவலைத் தடுக்கலாம். எல்-ஐசோலுசின் (L- Isoleucine) எனும் அமினோ அமிலம் இதற்குப் பெரிதும் உதவும்.
டிஃபென்சின்ஸ் (Defensins) என்றால் என்ன?
டிஃபென்சின்ஸ் என்பவை ஆண்டி மைக்ரோபியல், ஆன்டி வைரஸ் ஆகிய பண்புகளைக்கொண்ட, மனித உடலின் உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு ஆற்றலின் ஒரு அங்கமாகும். இதன் நேர்முனை (cationic), ஹைட்ரோ போபிக் ஆகிய பண்புகள் காரணமாக, எதிர்முனைப் (anionic) பண்புகளைக் கொண்ட வைரஸின் உறை சவ்வுடன் (Viral Envelope Membrane) பிணைப்பை ஏற்படுத்தி வைரஸைச் செயலிழக்கச் செய்கிறது. இந்தச் செயல்பாடு பல பரிசோதனைகளின் மூலம் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.
எல்-ஐசோலுசின் (L- Isoleucine) என்றால் என்ன?
எல்-ஐசோலுசின் நமது உடலில் டிஃபென்சின்ஸ்கள் உற்பத்தியாக உறுதுணையாக இருக்கிறது. இதன் மூலம் நமது உடலின் நோய் எதிர்ப்புத் திறன் சீராக இருக்கும். எல்-ஐசோலுசின் என்பது, புரதங்களின் உயிரியக்கவியலால் (Biosynthesis of Proteins) கிளைபட்ட ஒரு அமினோ அமிலம். இது நாம் தினமும் உணவில் உட்கொள்ளும் மீன், முட்டை, இறைச்சி, சோயா ஆகியவற்றிலுள்ள புரதம் மூலம் கிடைக்கிறது. மருத்துவர்களின் அறிவுரையின்படி, விளையாட்டு வீரர்கள் தங்களது உடல் பலத்தை அதிகரிக்க இந்த எல்-ஐசோலுசினை மாத்திரை வடிவில் எடுத்துக்கொள்வர். மேலும், இந்த அமினோ சத்து நுரையீரல் தொடர்பான சீர்கேடுகளுக்குச் சிறந்த நிவாரணி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
தொற்றை இது எவ்வாறு கட்டுப்படுத்துகிறது?
கரோனா வைரஸ் நமது உடலினுள் நுழைவதற்கோ நம்மைத் தாக்குவதற்கோ ஏசிஈ-II (ACE-II) எனும் நொதியைப் (Enzyme) பயன்படுத்துகிறது. இது சார்ஸ் வைரஸ் (SARS-CoV) நமது உடலில் நுழைவதற்குப் பயன்படுத்திய அதே நொதியாகும். இந்த ஏசிஈ-II நொதி நமது உடலின் மிக முக்கிய உறுப்புகளான நுரையீரல், சிறுநீரகம், இதயம், குடல், தமனிகள் ஆகியவற்றின் உயிரணுக்களின் வெளிப்புறத்தில் காணப்படுகின்றன. ஏசிஈ-II நொதியின் உற்பத்தி அதிகரிப்பே கோவிட் -19 வைரஸால் நுரையீரல் பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம். இந்த நொதி (Enzyme), கரோனா வைரஸ் நமது செல்களுக்குள் அதாவது நமது உடலுக்குள் செல்வதற்கு ஏற்பியாகச் (Receptor) செயல்படுகிறது. இந்த எல்-ஐசோலுசின் ஏசிஈ-II நொதியின் அணுக்களுக்கிடையே ஹைட்ரஜன் பிணைப்பை (Intermolecular Hydrogen Bond) ஏற்படுத்தி, ஏசிஈ-II நொதியின் உற்பத்தியைத் தடுக்கிறது. எனவே, கரோனா வைரஸ் நமது உடலினுள் நுழைவதும் தடுக்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்படுகிறது.
இதற்குப் பக்க விளைவுகள் உண்டா?
எல்-ஐசோலுசின் நமது உடலில் டிஃபென்சின்ஸ் உற்பத்தி செய்வதற்கும், ஏசிஈ-II நொதியின் உற்பத்தியைக் கணிசமாகக் குறைக்கவும் உதவுகிறது. எனவே, இந்த மருந்தை ஒரு கூடுதல் மருந்தாக எடுத்துக் கொள்வதன் மூலம் கரோனா தொற்றின் சிகிச்சைக்கான நாட்களைக் குறைக்கலாம். விரைவில் நலமும் பெறலாம். பல்வேறு அறிவியல் ஆராய்ச்சி இதழ்களில் வெளியாகியுள்ள ஆராய்ச்சி முடிவுகள் இதை உறுதி செய்கின்றன. எல்-ஐசோலுசின், உடல் நலத்துக்குத் தேவையான ஒரு அமினோ அமிலம் என்பதால், மற்ற மருந்துகளைப் போல எவ்விதப் பக்க விளைவையும் ஏற்படுத்துவதில்லை.
உங்கள் தீர்வின் இன்றைய நிலை என்ன?
50 ஆண்டுகால அனுபவமும் பாரம்பரியமும் கொண்ட காமராஜ் கல்லூரியில் நாங்கள் பேராசிரியர்களாக உள்ளோம். எங்கள் கல்விக் குழுமம் கொடுத்த உந்துதல் / வழிகாட்டுதல் அடிப்படையில்தான் நாங்கள் இந்தத் தீர்வை அரசுக்கு முன்மொழிந்து உள்ளோம். எங்கள் கல்வி குழுமத்தின் உறுப்பினர்கள், அரசின் செவிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் செவிகளுக்கும் எங்கள் தீர்வைக் கொண்டு சேர்த்துவிட்டனர். ஆவன செய்வதாக அவர்களும் உறுதியளித்துள்ளனர். விரைவில் எங்கள் தீர்வு நடைமுறைக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். அதுவரை, விரைவில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் சமூகத்திலிருந்து விலகி இருப்போம்.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in