Published : 04 May 2020 04:59 PM
Last Updated : 04 May 2020 04:59 PM
இங்கிலாந்தில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரரான கேப்டன் டாம் மூரே, கரோனாவை எதிர்த்துப் போராடும் தேசிய சுகாதாரத் துறைக்கு நிதி திரட்ட நினைத்தார். மக்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, தன்னுடைய தோட்டத்தில் 25 மீட்டர் தூரம் கொண்ட சுற்றுப் பாதையை 100 முறை வலம் வர முடிவெடுத்தார். 99 வயது டாமைப் பொறுத்தவரை இது மிகவும் கடினமான செயல். அவரால் நடைவண்டியின் உதவியோடுதான் நடக்க முடியும். ஆனாலும் 1 லட்சம் ரூபாய் நிதி கேட்டு ஏப்ரல் 9-ம் தேதி அன்று நடக்க ஆரம்பித்தார். 24 மணிநேரத்துக்குள் அவருடைய இலக்கை எட்டினார். எதிர்பாராத நன்கொடையால் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்த டாம், உடனே அடுத்த இலக்கை நிர்ணயித்தார். ஏப்ரல் 30-ம் தேதி அன்று தன்னுடைய நூறாவது பிறந்த நாளுக்குள் 10 லட்சம் ரூபாய் திரட்டும் அறிவிப்பை வெளியிட்டார்.
கரோனா நெருக்கடியில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவித்துவரும் இங்கிலாந்தில், மக்கள் தாராளமாக நன்கொடை கொடுத்தனர். ஏப்ரல் 12-ம் தேதி அன்று டாம் அறிவித்ததைவிட பல மடங்காக 2.3 கோடி ரூபாய் நிதி குவிந்தது. உடனே தன்னுடைய இலக்கை ரூ.50 கோடியாக மாற்றினார் டாம். இரண்டே நாட்களில் ரூ.100 கோடியாக நன்கொடை குவிந்துவிட்டது. டாம் தன்னுடைய 100-வது நடையை முடித்தபோது 132 கோடி ரூபாய் நிதி வந்து சேர்ந்திருந்தது!
தன்னுடைய நிதி திரட்டும் திட்டம் மிகப் பெரிய அளவில் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, நடப்பதையும் நிதி திரட்டுவதையும் தொடர்வதாக அறிவித்திருக்கிறார் டாம். தன்னைச் சந்திப்பவர்களிடம், ‘நாளை மிகச் சிறந்த நாள், அனைத்தும் நன்மையாக இருக்கும்’ என்று நேர்மறையாகப் பேசுகிறார்.
டாமின் நடவடிக்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பிரபல பாடகர் மைக்கேல் பெல், ‘யு வில் நெவர் வாக் அலோன்’ என்ற பாடலை வெளியிட்டு, அதில் கிடைக்கும் பணத்தையும் டாமின் நிதித் திரட்டலுக்குக் கொடுப்பதாக அறிவித்தார். பாடல் வெளிவந்தவுடன் வெகுவேகமாக விற்பனையானது. ஒரே வாரத்தில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துவிட்டது. 82 ஆயிரம் பிரதிகள் விற்பனையானதோடு, இந்த வருடத்தின் மிக வேகமாக விற்பனையான பாடல் என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறது.
தற்போது டாம் 2 கின்னஸ் சாதனைகளைப் படைத்திருக்கிறார். இங்கிலாந்தில் மிக வயதான நபருக்கான பாடல் விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. நடை மூலம் தனி நபர் திரட்டிய அதிகபட்ச நன்கொடை ஆகியவற்றுக்கான கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார்.
தற்போது கேப்டன் டாம் இங்கிலாந்தின் புகழ்பெற்ற மனிதராகிவிட்டார். இவரின் பிறந்த நாளுக்காக சுமார் 1.25 லட்சம் வாழ்த்து அட்டைகள் குவிந்தன. இங்கிலாந்து அஞ்சல் துறை, சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு இவரைக் கவுரவிக்க இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT