Published : 04 May 2020 02:06 PM
Last Updated : 04 May 2020 02:06 PM

யார் யாரை கரோனா வைரஸ் தொற்றும்?

ஜி.வி.எஸ். மூர்த்தி.

மிகக் குறைவான எண்ணிக்கை கொண்ட வைரஸ்களுடனான தொடர்பால் கரோனா வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று நம்பிக்கை தருகிறார் ஹைதராபாத்தின் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பப்ளிக் ஹெல்த் இயக்குநர் ஜி.வி.எஸ். மூர்த்தி. அவரது மனைவி பி. விசாலாக்ஷி, மருத்துவ நுண் உயிரியலாளரும் வைரஸ் தொற்று தொடர்பில் உண்டாகியிருக்கும் பல சந்தேகங்களுக்கு இந்த நேர்காணலில் பதில் அளித்துள்ளார்.

கோவிட்-19 வைரஸ் தொற்று பரவும் வழிமுறைகளைச் சொல்லுங்கள்?

கோவிட்-19 வைரஸ் இருக்கும், அளவில் பெரிய உமிழ்நீர்த் துளிகளுடன் ஒருவருக்கு நெருக்கமான தொடர்பு ஏற்படும்போதே நோய்த் தொற்று ஒருவருக்கு ஏற்படுகிறது. உமிழ்நீர் ஒரு பரப்பில் விழுந்தபிறகு, வைரஸால் ஒரு மீட்டருக்கு மேல் பயணிக்க முடியாது. ஆனால், அது இருக்கும் இடத்துக்கு நெருக்கமாக ஒரு நபர் வந்தால் தொற்றும். மேஜைப் பரப்பு, கதவு கைப்பிடி, பீரோ, சமையலறை மேடை மூலமாகப் பரவுகிறது. கோவிட் -19 நோய்த் தொற்று கொண்ட ஒருவருடன் முகத்துக்கு முகம் நெருக்கமான தொடர்பு உருவாகும்போது நோய்த்தொற்றும் வாய்ப்பு அதிகமாகிறது. பதினைந்து நிமிடங்களுக்கு மேல் அப்படிப்பட்ட தொடர்பு இருந்தால் அபாயம் தான். இதைத் தவிரவும் வேறு வழிகளிலும் நோய்த் தொற்று பரவுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவுமே வெளியே தெரியாத நபர்கள் இருக்கிறார்களே?

வெளியே அறிகுறிகள் இல்லாத நபர்களிடமிருந்து கோவிட் - 19 பரவும் என்பதற்கு இதுவரை எந்த ஆவணப்படுத்தப்பட்ட தடயங்களும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கோவிட் 19 நோய்த்தொற்று உறுதியான நபருடன் பத்துப் பேர் நெருங்கிய தொடர்பு கொள்வதாக வைத்துக் கொள்வோம், அவர்களில் ஏழு பேரிடம் நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை. மூன்று பேருக்குத்தான் அறிகுறிகளே தெரிகின்றன.

அறிகுறிகளே தெரியாத நிலையில் தொற்றுவது நல்ல அம்சம் என்கிறீர்களா விசாலாக்‌ஷி?

ஆமாம். அப்படி அறிகுறிகளே இல்லாமல் நோய் வந்து போனவர்களை நோய் இந்தச் சுற்றில் மறுபடியும் தாக்காது என்பது ஆறுதலான விஷயம்தான். அத்துடன் மந்தை நோய் எதிர்ப்புத் திறனும் அவர்கள் மூலமாகச் சமூகத்தில் அதிகரிக்கிறது. ஏற்கெனவே நோய் வந்து சென்றவர்களில் ஒரு பகுதியினருக்குத் திரும்ப நோய் வராத நிலை ஏற்படும். ஜனத்தொகையில் முக்கியமான ஒரு பகுதி மக்கள் இப்படி பாதுகாக்கப்படும் நிலையில், நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் குறையும். எதிர்காலத்தில் வரும் நோயையும் நோய்த் தொற்றையும் தடுக்கும் மந்தை நோய் எதிர்ப்புத் திறனின் அளவு ஒவ்வொரு நோய்க்கும் வேறுபடுகிறது.

அதற்கு உதாரணம் சொல்ல முடியுமா?

தட்டம்மையைப் பொறுத்து, மந்தை நோய் எதிர்ப்புத் திறன் 90 முதல் 95 சதவீதம் ஆகும். டிப்தீரியா என்னும் தொண்டை அழற்சி நோய்க்கு மந்தை நோய் எதிர்ப்புத் திறன் 80 முதல் 85 சதவீதம். கோவிட் 19-ஐப் பொறுத்தவரையில் 55-60 சதவீதம் பேருக்கு வந்துவிட்டால், நோய்த் தொற்றுப் பரவலைத் துண்டிக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். தடுப்பு மருந்து என்பது இன்னமும் கண்டறியப்படாத நிலையில், நோய்த் தொற்று வந்தவர்களும், குணமானவர்களும் தான் நமது பாதுகாப்பு வளையங்களாக உள்ளனர். அதனாலேயே குணமான நோயாளிகளும், வெளிப்படையாக அறிகுறிகள் தெரியாத நோயாளிகளும் முக்கியமான அம்சங்களாக உள்ளனர்.

கோவிட் 19 வைரஸோடு தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு நபரையும் நோய் தொற்றும் வாய்ப்பு இல்லை என்கிறீர்கள்…

வைரஸின் அளவு அதிகரிக்கும்போது தொற்றுக்கான வாய்ப்பும் கூடுகிறது. மிகக் குறைவான அளவு வைரஸுடன் ஒரு நபர் தொடர்பு கொள்ளும்போது அது தொற்றாவதில்லை. இருமல், காய்ச்சல், தொண்டை வலி ஆகியவை மூன்று முதல் நான்கு நாட்களில் வந்து 14 நாட்கள் தொடரலாம். அதிக அளவு வைரஸ் கொண்ட உமிழ்நீருடன் தொடர்பு கொள்ளும்போது ஆரம்பத்திலேயே நோய் வலுவடையத் தொடங்கிவிடும். அதனால் ஆரம்பத்திலேயே அடையாளம் காண்பது அவசியமாகிறது. அதனால்தான், அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து தனிமைப்படுத்த வேண்டியிருக்கிறது. அப்போதுதான் நாம் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும்.

உடனடியாக யாரையெல்லாம் தனிமைப்படுத்த வேண்டும்?

நோய்த் தொற்று வந்ததாகக் கண்டறியப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களை உடனடியாகக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும். கோவிட்-19 தொற்று சார்ந்த அனைத்து அறிகுறிகளும் அவர்களிடமிருந்து மறையும் வரை அவர்கள் கண்காணிப்பில் வைத்திருக்கப்பட வேண்டும். ஆனாலும், நோய் அறிகுறிகளே தெரியாத நபர்களிடமிருந்து நோய் பரவும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. அது நமக்கு நம்பிக்கை தரும் செய்தியாகும்.

ஊரடங்குகள் நோய்ப் பரவலை நிறுத்துமா?

பெரும் எண்ணிக்கை கொண்ட மக்களை அவரவர் வீட்டில் நிறுத்துவது என்பது குறுகிய கால அளவில் நல்ல பலனை அளிக்கும் உபாயம்தான். ஆனால், நோய் வர வாய்ப்புள்ள நபருக்கு எதிர்காலத்தில் நோய் வராமல் இருப்பதற்கான தீர்வை இது தருவதில்லை. திடீரென்று மக்களைத் திறந்துவிடுவது, நோய் தொற்றக்கூடிய வாய்ப்புள்ள நிறைய பேருக்கு நோய் வருவதற்கான அபாயமாக ஆகிவிடும். அதனால், படிப்படியாகத் திறந்துவிடுவது தான், நோய்த் தொற்று சூழலைக் கண்காணிப்பதற்கு அரசுக்கு உதவக்கூடிய வழிமுறையாகும். ஆனால், கைகளைக் கழுவுவது, தனிப்பட்ட ஆரோக்கியத்தில் கவனம், பாதுகாப்பு நெறிமுறைகள் அனைத்தும் நமது மனத்தில் பதிந்து நீங்காமல் தொடர வேண்டிய கடமைகளாக இருக்க வேண்டும். ஏனெனில் வயிற்றுப் போக்கு, மலேரியா மற்றும் டெங்கு நோய்களும் வருங்காலத்தில் வருகை தர உள்ளன.

வி. கீதாநாத், தி இந்து ஆங்கிலத்தில் வெளியான பேட்டி.

தமிழில் : ஷங்கர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x