Published : 03 May 2020 04:09 PM
Last Updated : 03 May 2020 04:09 PM
இன்று தமிழ்நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் யாருக்கும் எழுத்தாளர் சுஜாதாவைத் தெரியாமல் இருக்காது. அவருடைய வாசகர் படை மிகப் பெரியது. இன்றும் ஒவ்வொரு புத்தகக் கண்காட்சி முடிவிலும் பெஸ்ட் செல்லர்களில் அவருடைய நூல்கள் இடம்பெறாமல் இருப்பதில்லை. அவருடைய மிகப் பெரிய வாசகர் பரப்பையும் தாண்டி தமிழில் படிப்பவர்கள் அனைவரும் எங்காவது அவருடைய எழுத்துக்களை படித்திருப்பார்கள். அவர் வசனம் எழுதிய ஏதேனும் ஒரு தமிழ்த் திரைப்படத்தையாவது பார்த்திருப்பார்கள். அந்த அளவு தமிழ்ச் சமூகத்துடன் கலந்துவிட்டவர் சுஜாதா.
1935 மே 3 அன்று சென்னையில் பிறந்தவர் ரங்கராஜன். பள்ளிக் கல்வி முழுவதையும் ஸ்ரீரங்கத்தில் பெற்றார். அதன் பிறகு திருச்சியிலும் சென்னையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப கல்வி மையத்திலும் (எம்.ஐ.டி) உயர் கல்வி பயின்றார். பொறியாளராக இந்திய அரசின் விமானப் போக்குவரத்துத் துறையில் சிறிது காலம் பணியாற்றியவர் பிறகு பெங்களூரில் பாரத் எல்கட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பின் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வடிவமைக்கும் குழுவில் முக்கியப் பங்கு வகித்தார். 1980கள் தொடங்கி திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். இந்த அயராத பணிகளுக்கிடையே 2008 பிப்ரவரி 27 அன்று இறக்கும்வரை கதைகள். கட்டுரைகள். நாடகங்கள். பத்திரிகை பத்திகள், கவிதைகள், சங்க இலக்கிய பொழிப்புரை நூல்கள் என எழுதிக்கொண்டே இருந்தார். ரங்கராஜன் என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு எழுத்தாளர் இருந்ததால் தனது மனைவியின் பெயரான சுஜாதாவின் பெயரில் எழுதினார். அதுவே அவருடைய அடையாளமாகிப் போனது.
அயராத எழுத்துப் பயணம்
பதின்பருவத்திலிருந்து எழுதத் தொடங்கியவர் சுஜாதா. திருச்சியில் வெளியாகிக்கொண்டிருந்த ‘சிவாஜி’ என்ற சிற்றிதழில் சுஜாதாவின் முதல் கதை பிரசுரமானது. 1962இல் குமுதம் இதழில் அவருடைய ‘சசி காத்திருக்கிறாள்’ என்ற சிறுகதை பிரசுரமானது. முதல் கதைக்கே குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி இடமிருந்து ‘தொடர்ந்து எழுதுங்கள்’ என்று ஊக்குவிக்கும் வாழ்த்துச் செய்தியைப் பெற்றார். அதைத் தொடர்ந்து பல முன்னணி இதழ்கள், இலக்கிய சிற்றிதழ்கள் பலவற்றிலும் அவருடைய கதைகள் பிரசுரமாகின. நூற்றுக் கணக்கான சிறுகதைகள்,, பத்திரிகைத் தொடர்கதைகள், நாவல்கள், நாடகங்களை எழுதியுள்ளார். ’நைலான் கயிறு’, ‘எதையும் ஒரு முறை’, ‘பேசும் பொம்மைகள்’, ’ப்ரியா’ என கிரைம் கதைகளில் தனி முத்திரை பதித்தவர் என்றாலும் அவர் எழுதிய ‘பிரிவோம் சந்திப்போம்’ போன்ற காதல்கள் கதைகள் ‘நகரம்’ உள்ளிட்ட சமூக அவலங்களை அம்பலப்படுத்தும் கதைகள், சினிமாத் துறையில் அடித்தட்டு ஊழியர்களைப் பற்றிய ‘கனவுத் தொழிற்சாலை’ போன்ற கிரைம் அல்லாத கதைகளும் அமரத்துவம் பெற்றவை.
புனைவெழுத்தில் தனக்கென்று ஒரு பிரத்யேகமான எழுத்துப்பாணியை உருவாக்கிக்கொண்டார். சுவாரஸ்ய நடை, கச்சிதமான விவரணைகள். தகவல்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறும் பாங்கு, அங்கங்கே ஆங்கில வார்த்தைகள்,. மேல்நாட்டு பிரபலங்களின் பெயர்கள், மேற்கோள்களைப் பயன்படுத்துவது என தமிழ் புனைவுலகுக்கு புதியதொரு எழுத்துப் பாணியை அறிமுகப்படுத்தினார் சுஜாதா. படித்த நவ நாகரீக இளைஞர்களை தமிழ் நூல்களை வாசிக்க வைத்ததில் சுஜாதாவின் பங்கு அளப்பரியது. அப்படிப் படிக்க வந்து அவரால் ஈர்க்கப்பட்டு எழுதத் தொடங்கி எழுத்துலகில் சாதித்தவர்கள் ஏராளம்.
புனைவும் புனைவற்ற எழுத்தும்
புனைவெழுத்தைப் போலவே புனைவற்ற எழுத்திலும் தொடர்ந்து இயங்கிவந்தார். ‘கணையாழியின் கடைசிப் பக்கம்’, ‘கற்றதும் பெற்றதும்’ போன்ற வாராந்திர பத்திகள், ‘ஏன் எதற்கு எப்படி?’ என்ற கேள்வி பதில் தொடர் உள்ளிட்டவற்றின் மூலம் ஆன்மீகம், அரசியல், சினிமா. தொழில்நுட்பம், இலக்கியம், சமூகம் என பல துறைகளில் அவருக்கு இருந்த ஆழமான அறிவையும் விசாலமான பார்வையையும் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டார். இது தவிர ‘திரைக்கதை எழுதுவது எப்படி’ என்கிற அவருடைய நூல் சினிமா இயக்குநராக விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய அடிப்படைக் கையேடு ஆழ்வார் பாசுரங்கள் முதல் குவாண்டம் பிசிக்ஸ் வரை அவர் எழுதாத துறையே இல்லை என்று சொல்லிவிடலாம். கணினித் தொழில்நுட்பம் அறிமுகமாகத் தொடங்கிய காலத்தில் அதைப் பற்றி எளிய தமிழில் அனைவரிடமும் கொண்டு சேர்த்தது சுஜாதாவின் ஆகச் சிறந்த சமூகப் பங்களிப்பு என்று சொல்லலாம். தனது கட்டுரைகளின் மூலம் இலக்கிய பல இளைஞர்கள் அங்கீகாரம் பெறக்காரணமாக இருந்துள்ளார். புகழ்பெற்ற கவிஞர்களான மனுஷ்யபுத்திரன், ந.முத்துக்குமார் போன்றோரை முதன்முதலில் அடையாளம் கண்டு பாராட்டியவர் சுஜாதா.
சினிமா சாதனைகள்
’காயத்ரி’, ’பிரியா’, ‘அனிதா இளம் மனைவி’, ‘கரையெல்லாம் ஷெண்பகப் பூ’ என சுஜாதாவின் கணிசமான நாவல்கள் திரைப்படங்களாகியிருக்கின்றன இதைத் தவிர அவர் பல திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் இரண்டையுமோ அல்லது ஏதேனும் ஒன்றையோ எழுதியுள்ளார்.
1979-ல் வெளியான கே.பாலச்சந்தரின் ‘நினைத்தாலே இனிக்கும்; திரைப்படத்தின் திரைக்கதைக்கு சுஜாதாவும் பங்களித்தார். கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதினார். ’ரோஜா’ மூலம் மணி ரத்னத்துடனும் ‘இந்தியன்’ மூலம் ஷங்கருடனும் இணைந்தவர் இவ்விருவரின் பல திரைப்படங்களில் மறக்க முடியாத வசனங்களை எழுதியுள்ளார். ’கண்ணெதிரே தோன்றினாள்’, ‘கண்டுகொண்டே கண்டுகொண்டேன்’, ‘செல்லமே’, ’விசில்’ ’உள்ளம் கேட்குமே’ என இளம் இயக்குநர்களின் படங்களுக்கும் வசனம் எழுதினார்.
இவருடைய கதைகள் நாடகங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் தொலைக்காட்சிப் படங்களாகவும் உருமாறியுள்ளன. மீடியா ட்ரீம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ‘பாரதி’, ’நிலாக்காலம்’ போன்ற தரமான படங்களைத் தயாரித்தார்.
சுஜாதா இறந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. திரைப்பட வசனம் என்பதில் அவர் விட்டுச் சென்ற இடத்தை இன்னும் யாரும் இட்டு நிரப்பவில்லை. நகைச்சுவையாகவும் யதார்த்தமாகவும் எழுதும் வசனங்களைப் போலவே அவர் எழுதும் காட்சிகளுக்குத் தேவையான பஞ்ச் வசனங்களிலும் தனி முத்திரை இருக்கும். ‘முதல்வன்’ நேர்காணல் காட்சியில் “எதிர்க்கட்சிக்கிட்ட எவ்வளவுவாங்கினீங்க: என்று முதல்வரான ரகுவரன் கேட்க “நீங்க எதிர்க்கட்சியா இருந்தப்ப எவ்ளோ கொடுத்திருப்பீங்க” என்று அர்ஜுன் எதிர்க்கேள்வி கேட்கும் இடம் அவருடைய பஞ்சுக்கு ஒரு உதாரணம். அதே காட்சியில் “கல்விங்கறது கலவின்னு” அச்சாகியிருக்கு என்று தேர்தல் அறிக்கையைப் பற்றி ரகுவரன் சொல்லும் வசனம் தமிழை தவறின்றிக் கையாள்வதில் நமக்கிருக்கும் அக்கறையின்மை குறித்த நறுக்கென்ற பகடி.
மாற்றங்களுக்குத் தயங்காதவர்
எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த டிஜிட்டல் யுக இளைஞர்களாலும் விரும்பிப் படிக்கப்படும் எழுத்தாளராக நிலைத்திருக்கிறார் சுஜாதா. நவீனத்துக்கு முகம் கொடுத்த காலமாற்றத்துக்கேற்ப தன்னை வேகமாகத் தகவமைத்துக்கொண்ட பண்புதான் முக்கியக் காரணம் என்று தோன்றுகிறது. அவர் கால மாற்றத்தை எப்போதும் அஞ்சியதில்லை. நவீன மாற்றங்களை வெறுத்து ஒதுக்காமல் விரும்பி வரவேற்றவராக இருந்தார். இன்றைய இளைஞர்கள் அதிகம் வாசிப்பது சமூக ஊடகங்களில்தான். இணையம் இந்தியாவில் பரவலாகத் தொடங்கிய பத்தாயிரத்தின் தொடக்க ஆண்டுகளிலேயே அதிக இணையதளங்களிலும் வலைப்பக்கங்களிலும் இணைய இதழ்களிலும் எழுதினார் சுஜாதா. இன்று நாம் அனைவரும் தமிழில் தட்டச்சு செய்கிறோம். ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன் கணினியில் தமிழ் தட்டச்சு என்பது அரிதினும் அரிதாக இருந்தது. அந்தச் சூழலில் பல இளம் எழுத்தாளர்களுக்கு முன்பாகவே தன் கதைகளை கணினியில் தட்டச்சு செய்யத் தொடங்கிவிட்டார். அவர் இறந்த பிறகுதான் இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் அறிமுகமாகின இன்று ஒருவேளை அவர் இருந்திருந்தால் தினமும் ஒரு பதிவு, வாரம் ஒரு சிறுகதை, என ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் பதிவேற்றி லைக்குகளையும் ஷேர்களையும் வாரிக் குவித்திருப்பார் என்பதில் ஐயமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT