Published : 03 May 2020 02:55 PM
Last Updated : 03 May 2020 02:55 PM
மதுரையில் செயல்படும் படிக்கட்டுகள் அமைப்பு, 2012-ம் ஆண்டில் மதுரை சேது பொறியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த 25 மாணவர்கள் உருவாக்கியது.
தற்போது இந்த அமைப்பில், மாணவர்கள் மட்டுமில்லாது இளைஞர்கள், பெண்கள், தொழில் முனைவோர் என்று ஏராளமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களுடைய இலக்கு ஆதரவற்றவர்கள் உயர்வுக்கும், வாழ்க்கைக்கும் படிக்கட்டுகளாக துணை இருப்பதே. பள்ளி, கல்லூரிகளில் கல்விக்கட்டணம் செலுத்த சிரமப்படும் ஏழை மாணவர்களுக்கு உதவுவது, பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளை கல்லூரி படிக்கும் வரை தத்தெடுத்து ஒவ்வொரு பருவத்திற்கும் தேடிச்சென்று கல்வி கட்டணம் செலுத்துவது, கல்வி உபகரணங்கள், சீருடைகள் வாங்கி கொடுப்பது, ஆதரவற்ற முதியோர் இல்லங்களை அரவணைபப்து என்று இவர்களுடைய சேவை பட்டியல் நீளுகிறது.
மாணவர்களாக இந்த அமைப்பை தொடங்கியவர்கள் பலர் தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் உள்ளனர். இவர்கள் உதவியால் ஏழை மாணவர்கள் பலர் தற்போது பலர் உயர்ந்தநிலைக்கு வந்துள்ளனர்.
தற்போது ‘கரோனா’ ஊரடங்கு காலத்திலும் இவர்கள், வீட்டில் முடங்கியிருக்காமல் இந்த சூழலில் அடித்தட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்த அமைப்பின் உறுப்பினர் கிஷார் குமார் கூறுகையில், ‘‘படிக்கட்டுகள் அமைப்பு இளைஞர்கள், மதுரை தத்தனேரியில் வசிக்கும் விழிம்புநிலை மக்களுக்காக கடந்த ஒரு வாரமாக நிதி திரட்டினோம். ஒரு குடும்பத்துக்கு 1000 வீதம் 150 குடும்பங்களுக்கு 1,50,000 தேவைப்பட்டது. இந்த தேவையை படிக்கட்டுகள் இளைஞர்கள் தத்தம் பேஸ்புக், வாட்ஸப்பில் பகிர்ந்தனர்.
ஒரு நபரோ, அல்லது இரண்டு நபர்கள் இணைந்தோ ஒரு குடும்பத்துக்காக ஸ்பான்சர் செய்ய முன்வரலாம் என்ற நிலையில் அவர்கள் நிதி திரட்ட ஆரம்பிக்க, ஒரே வாரத்தில் 80 நண்பர்கள் ஒன்றிணைய 150 குடும்பத்துக்கும் தேவையான நிதி கிடைக்கப் பெற்றது.
அரிசி, எண்ணெய், கோதுமை,சுண்டல்,மசாலா பொருட்கள், பயறு வகைகள் உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் கொண்ட பேக் தயார் செய்யப்பட்டு தத்தனேரி சுடுகாட்டுப் பகுதியில் உள்ள 30 குடும்பங்களுக்கும்,
கணேசபுரம் பகுதியில் உள்ள 120 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது. தன்னார்வலர்கள் மாஸ்க், கிளவுஸ் சகிதம் பொருட்களை விநியோகித்தனர். பொருட்களை வாங்க வந்த மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் நின்றும், முகத்தில் மாஸ்க், துணி கட்டிக்கொண்டும் வந்து ஒத்துழைத்தனர் . தன்னார்வலர்கள் செல்வா வெற்றி, கயல்விழி , சந்துரு, மலைச்சாமி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்
இதற்கு நிதி உதவி அளித்த அத்தனை நண்பர்களுக்கும்,முகம் தெரியாத கொடையாளர்களுக்கும் நிகழ்வின் விவரங்கள், கணக்கு வழக்குகள், புகைப்படங்கள் அத்தாட்சியாக அனுப்பி வைத்தோம். தொடர்ந்து படிக்கட்டுகள் அமைப்பு
மதுரையில் காசநோய் பாதிப்பிற்குள்ளான ஏழை குடும்பங்களுக்கும்,ஆரப்பாளையம் பகுதியில் இருக்கும் ஏழை மக்களுக்கும் உதவ தீர்மானித்துள்ளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT