Last Updated : 03 May, 2020 10:42 AM

 

Published : 03 May 2020 10:42 AM
Last Updated : 03 May 2020 10:42 AM

’’ ’கிழக்கே போகும் ரயில்’ படத்துல நடிக்க பாரதிராஜா என்னைத்தான் கூப்பிட்டார்; நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்!’’ -  நடிகர் சிவசந்திரன் பிரத்யேகப் பேட்டி 

எழுபதுகளில் நடிக்கத் தொடங்கிய சிவச்சந்திரன், இயக்குநர் பாலசந்தரின் பட்டறையில் இருந்து வந்தவர். பல படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கிறார்; பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கிறார் என்று சிவசந்திரனுக்கு பல திறமைகள் உண்டு; பன்முகங்கள் இருக்கின்றன. ‘இந்து தமிழ் திசை’யின் ‘RewindwithRamji' எனும் வீடியோ பேட்டிக்காகத் தொடர்புக் கொண்டு பேசினேன்.


‘சரி... வாங்க’ என்று தேதியும் நேரமும் சொன்னார். ‘என் லைஃப்ல இதான் என்னோட முதல் வீடியோ பேட்டி’ என்றார் வெள்ளந்தியாகச் சிரித்தபடி.
அந்தச் சிரிப்பு மட்டுமல்ல... மனிதரே வெள்ளந்தியானவர்தான்.


ஒளிவுமறைவில்லாமல், மனதின் அடி ஆழத்திலிருந்து பதில்களாக, தன் வாழ்க்கையையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார் சிவசந்திரன்.


அவரின் வீடியோ பேட்டியின் எழுத்தாக்கம் இதோ...


‘’நடிக்கவேண்டும் என்கிற ஆசையோ லட்சியமோ எதுவுமில்லாமல் சினிமாவுக்கு வந்தேன். ‘தந்தி’யில் விளம்பரம் வந்திருந்தது. சினிமாவுக்கு நடிகர்கள் தேவை என்கிற அந்த விளம்பரம் பார்த்ததும் போய்ப்பார்க்கலாமே என்று தோன்றியது. என்னை புக் செய்தார்கள். என் பெயரை மாற்றினார்கள். அங்கே என் பெயர் சிவசந்திரன் என்றானது. அது கருப்பு வெள்ளைப் படம். ஆனால் அந்தப் படம் எடுக்கப்படவே இல்லை. ஆனால் அந்தப் பெயர் பிடித்திருந்தது. சிவாஜி கணேசனில் இருந்து சிவாவையும் எம்.ஜி.ராமசந்திரனில் இருந்து சந்திரனையும் எடுத்து, ‘சிவசந்திரன்’ என்று வைத்ததால், பிடித்திருந்தது.


எனக்கு சொந்த ஊர் வால்பாறை. அப்பாவுக்கு கவர்ன்மெட்ல வேலை. கஸ்டம்ஸ் சூப்ரண்ட். எனக்கு நடிக்கணும்னெலாம் ஆசை இருந்ததில்லை. ஆனால், சினிமா பார்க்க ஆசை இருந்தது. முதல் நாள், முதல் ஷோ பார்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து ஓடினேன். எம்ஜிஆர், சிவாஜி படங்களெல்லாம் அப்படி முதல்நாள் பார்த்திருக்கிறேன். அதுவும் ஒரே படத்தை, ஐந்து தடவை, பத்து தடவை பார்ப்பேன்.


சென்னை லயோலாலதான் படித்தேன். அப்பாவுக்கு ஐபிஎஸ்ல நான் சேரணும்னு ஆசை. அந்த ஹைட்டு, நாலெட்ஜ், ஸ்போர்ட்ஸ்னு ஆர்வம் இருந்தது. அப்பா ரொம்ப நேர்மையானவர். ஸ்ட்ரிக்டானவர். அப்பா சொன்னால் சரியென்று தலையாட்டுவேன். அவ்ளோதான்.


மதி ஒளி சண்முகம் என்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர். என் நண்பர் மூலமாக எனக்கு அறிமுகமானார். அவரிடம் புகைப்படங்களைக் கொடுத்து சினிமா ஆர்வத்தைச் சொன்னேன். அந்தப் புகைப்படங்களை பாலசந்தர் சாருக்கு அனுப்பிவைத்தார். அப்போது ‘பட்டினப்பிரவேசம்’ எனும் படத்துக்காக, புதுமுகங்களை தேடிக்கொண்டிருந்தார் பாலசந்தர் சார். எனக்கு இயல்பாகவே வசனம் எழுதக்கூடிய திறன் இருந்தது. ‘நடித்துக்காட்டு’ என்றார். நானே வசனம் எழுதி, நடித்துக் காட்டினேன். அவருக்குப் பிடித்திருந்தது. ஓகே என்று சொல்லி நடிக்கவைத்தார்.


அந்தப் படத்தில் உள்ள ‘வான் நிலா நிலா அல்ல’ பாட்டைச் சொல்லவேண்டும். கவியரசு கண்ணதாசனுடைய பாடல். எம்.எஸ்.வி.யின் இசை. பாலசந்தர் சாரின் இயக்கம் எல்லாமே பிரமாதம். என்ன... இப்போது பார்க்கும்போது நான் இன்னும் கொஞ்சம் சிறப்பாக நடித்திருக்கலாமோ என்றுதான் தோன்றுகிறது. அந்தப் பாட்டுக்கு நான் தான் பெரிய மைனஸோன்னு சொல்லும் அளவுக்கு இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். பயம்... பாடணும். நடந்துக்கிட்டே பாடணும். மணல்ல நடக்கணும். பாடணும். நடிக்கணும். பிராக்டீஸே ஆகலையே.


’பட்டினப்பிரவேசம்’ படம் டைரக்ட் பண்ணிட்டிருக்கும்போதே’மூன்று முடிச்சு’ பட வேலையும் நடந்தது. அதனால் அங்கே, அலுவலகத்திற்கு ரஜினியும் அடிக்கடி வருவார். அவரை அதற்கும் முன்னதாக, ‘மூன்று முடிச்சு’ டப்பிங், கற்பகம் ஸ்டூடியோவில் நடந்துகொண்டிருந்தாபோது சந்தித்தேன். ரஜினியும் ஸ்ரீதேவியும் டப்பிங் பேசிக்கொண்டிருந்தார்கள். ரஜினியை ஸ்கிரீனில் பார்த்தபோது, வித்தியாசமான முகம் என்பதாக உணர்ந்தேன். அப்போதிருந்து நானும் ரஜினியும் நட்பானோம்.
அலுவலகத்துக்கு வந்தால், ‘வான் நிலா நிலா’ பாட்டுக்கு அவர் திடீரென்று நடித்துக்காட்டுவார். வேறு ஏதேனும் செய்துகாட்டுவார். திடீரென்று காணாமல் போய்விடுவார். பார்த்தால், பாத்ரூமில் உள்ள பாதரசம் பாதி போன கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு, தனக்குத்தானே நடித்துக் கொண்டிருப்பார். ஒன்றாக பேசிக்கொண்டு நடப்போம். டீ குடிக்கச் செல்வோம்.


‘வான் நிலா நிலா’ பாட்டு அருமையான பாட்டு. ‘என்னடி மீனாட்சி’ என்ற படத்தில் நானும் ஸ்ரீப்ரியாவும் நடித்த ‘ரொம்பநாளாக எனக்கொரு ஆசை’ என்ற பாட்டுக்கு நன்றாக நடித்திருப்பதாக உணர்ந்தேன். அதேபோல, ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில், நல்ல பாட்டு எனக்குக் கிடைத்தது. சொல்லப்போனால், எனக்குக் கிடைத்த பாடல்களெல்லாம் நல்ல பாடல்கள்தான்!


ஆனால், இப்போது இவ்வளவு சொன்னாலும், ‘பட்டினப்பிரவேசம்’ படம் வந்ததும் ‘இனிமேல் நடிக்கவேண்டாம்’ என்று முடிவு செய்தேன். பயமாக இருந்தது. எதிர்காலம் பற்றிய பயம். அப்பாவும் ரிடையர்டாகப் போகிறார். எதிர்காலத்தை ஒரு சூதாட்டம் போல், சினிமாவில் பணய வைப்பதா என்று பயந்தேன். ஆக, கஷ்டமோ நஷ்டமோ ஒரேவிஷயத்தில் போகஸ் இருக்கணும். நான் அப்படியில்லாமல், அமெரிக்கா போய்விடலாம் என்று முடிவெடுத்தேன். அமெரிக்கன் எம்பஸிக்கெல்லாம் போய்வந்துவிட்டேன்.

சினிமால இறங்கிட்டா, அதில் உள்ளவற்றையெல்லாம் எதிர்கொள்ளத் தெரியணும். அதைப் பற்றியெல்லாம் டிரெயின் பண்ணிக்கணும். டான்ஸ், ஃபைட் என கற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் அமெரிக்கா போகும் முயற்சியில் இருந்தேன். அப்போதுதான் ஒருநாள், சபையர் தியேட்டர் அருகில் இயக்குநர் பாரதிராஜா என்னைப் பார்த்தார். ‘16 வயதினிலே’ படம் வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சமயம் அது. என்னை அழைத்தார். ‘தம்பீ... சிவசந்திரன். ‘கிழக்கே போகும் ரயில்’ என்று ஒரு படமெடுக்கப் போகிறேன். அதில் ஹீரோவாக நடிக்கிறாயா?’ என்று கேட்டார். அடுத்த நிமிஷமே... ‘ஸாரி சார்’ என்று சொல்லிவிட்டேன். ‘யோசிச்சு முடிவெடு’ என்றார். அமெரிக்கா போகப்போவதைச் சொன்னேன்.


‘16 வயதினிலே’ வெற்றியும் பாரதிராஜாவும் என அனலைஸ் பண்ணுகிற அறிவு எனக்கில்லை. ‘இது நல்லது இது கெட்டது’ என்று சொல்லித்தருகிற கைடென்ஸும் இல்லை. நடிச்சு முடிச்சிட்டு, ரூமிற்கு வந்து புத்தகங்கள் படிக்கறதுதான் என் வேலை. சினிமாக்காரர்களுடன் தொடர்பே இல்லை. விஜயகாந்துக்கெல்லாம் சினிமா தொடர்பு அவ்வளவு இருந்தது. அப்படி இருந்தால், நல்லதுகெட்டதை எடுத்துச் சொல்லும் நண்பர்கள் இருப்பார்கள். எனக்கு அப்படி யாருமில்லை.


ரஜினிக்கு பாலசந்தர் சார், ஆர்.எம்.வீரப்பன், ஏவிஎம்.சரவணன் என பலர் இருந்தார்கள். நமக்கு யாருமில்லை. சினிமாதான் வாழ்க்கை என்பதில் ரஜினி தெளிவாக இருந்தார். ஆனால் நான் ‘ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்’ என்றிருந்துவிட்டேன். இதெல்லாம்தான் என் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததோ என்று உணருகிறேன்.
அடுத்து, ‘கிழக்கே போகும் ரயில்’ படம் வெளியாகி, ஒருவருடம் ஓடியது. ‘பேசாமல், நடிக்க ஒத்துக்கொண்டிருக்கலாமோ’ என்று நினைத்தேன். ஆக, நமக்குக் கிடைக்கக் கூடிய நல்லதுக்கும் கெட்டதுக்கும் நாமளேதான் காரணம்’’ என்று சொன்ன சிவசந்திரன், சகல கோணத்திலும் உணர்ந்து தெளிந்தவராகத் தெரிந்தார்.

- நினைவுகள் தொடரும்


சிவசந்திரனின் வீடியோ பேட்டியை முழுமையாகக் காண :

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x