Published : 01 May 2020 09:19 AM
Last Updated : 01 May 2020 09:19 AM
குழந்தைகளுடன் நாம் பேசும் கதைகள் நிச்சயமாக உலக சுழற்சியை நிறுத்தாது. ஆனால் நம் வேகமான வாழ்க்கை சுழற்சியினை இலகுவாக்கும். ரசிக்க வைக்கும். குழந்தைகளுடைய வாழ்வினை மட்டுமல்ல பெற்றோர்களுடைய வாழ்வினையும் தான்.
குழந்தை வளர்ப்பில் கதை பேசுதல் பேராயுதம். அந்த ஆயுதத்தை கையில் எடுத்து நெருங்க நெருங்க அது நம்மை ஆட்கொண்டுவிடும். புதிய வாசல்களைத் திறக்கும்.
பல சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் கொடுக்கும். வீட்டில் மகிழ்ச்சியை உண்டாக்கும். குழந்தைகளுக்கு செல்லும் கதைகள் ஒவ்வொன்றுமே அவர்களின் கனவுகளுக்கான விதைகள்.
ஒரு கலந்துரையாடலில் கதைகள் என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்தது. எனக்கு இரண்டு சம்பவங்கள் நினைவிற்கு வந்தன. எனது ஐரோப்பிய பயணத்தின் போது லக்சம்பர்கில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் செய்திருந்தேன். அவரும் கதைகள் மூலம் அறிமுகமான நண்பர் தான். முதல் முறை நேரில் அவர்களின் குடும்பத்தினரை அன்று தான் சந்திக்கின்றேன். அவர்களுக்கு பத்து வயதில் ஒர்ரு மகளும் நான்கு வயதில் ஒரு மகனும் இருந்தனர். நான் அங்கு சென்றதில் இருந்து அவர்களின் மகன் என்னிடம் பிரியமாக ஒட்டிக்கொண்டான். கதைகள் சொல்லிக்கொண்டே பேசிக்கொண்டே இருந்தோம். இரண்டடுக்கு கொண்ட வீட்டின் முதல் மாடியில் அவன் காலைக்கடன்களை முடிக்கச் சென்றான். டாய்லெட்டில் இருந்து ஒரு சத்தம். “விழியன் மாமா வந்து தான் கழுவணும்”. நண்பர் சங்கடப்பட்டார். இந்த நெருக்கத்திற்கு காரணம் கதைகள் தான்.
அதேபோல், அரசுப்பள்ளி ஒன்றிற்கு கதைகள் சொல்லவும் புத்தக வாசிப்பு நிகழ்ச்சியை ஒட்டியும் சென்றிருந்தோம், நான், நண்பர் விஷ்ணுபுரம் சரவணன் மற்றும் வித்யா (மனைவி) குழந்தைகளுடன் கதை பேசிக் கொண்டிருந்தோம். அன்றைய தினம் காலையில் இருந்து கதைகள், பாடல்கள் விளையாட்டுகள், கொஞ்சம் வாசிப்பு என சென்று கொண்டிருந்தது.
வளரிளம் மாணவிகளிடம் மனைவி பேசிக் கொண்டிருந்தார். நிகழ்வுகள் முடிந்தது ஒரு மாணவி மனைவியிடம் வந்து தன் வீட்டில் இருந்து வரும்போது சிலர் தன்னை சீண்டுவதாகக் கூறியுள்ளார். உடனே அத்தகவல் ஆசிரியரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியருக்கோ ஆச்சர்யம், அவரும் மாணவர்களுடன் நெருக்கமாக பேசுபவர், பழகுபவர் தான். அப்படியிருந்தும் அந்த மாணவி இதை அவரிடம் சொல்லாதது அவருக்கு ஆச்சர்யமாகவே இருந்தது. என்னிடம் முன்னவே சொல்லி இருக்கலாமே என்று கேட்டேவிட்டார்.
மாணவியின் நம்பிக்கையை என் மனைவி வென்றதற்குக் காரணமும் கதை தான். கதைகள் முதன்முதலில் இதனைத்தான் செய்யும். ஒரு நெருக்கத்தினை ஏற்படுத்தும். ஒரு நம்பிக்கையினை கொடுக்கும். குழந்தைகள் எப்போதுமே ஒரு சுதந்திரமான குரலினை விரும்புவார்கள் அது கதைகளின் குரல் வழியே பூர்த்தியாவதை அவர்களே உணரமாட்டார்கள். ஒரு வெளி நபரிடமே இத்தனை நெருக்கம் கொள்ளும்போது பெற்றோரிடமும் இந்த நெருக்கம் மிக இயல்பாக நிகழும்.
மேலை நாடுகளில் ஒரு வழக்கம் உள்ளது. குழந்தைகளுக்கு இரவு நேரக்கதைகளைச் சொல்வது. அங்க மிகவும் சின்ன வயதில் இருந்தே இந்த பழக்கத்தினை ஆரம்பித்துவிடுகின்றனர்.
புத்தக வாசிப்பும் அப்போதே ஆரம்பித்துவிடும். மிகவும் குறிப்பாக இரவு நேரத்தில் இதனை செய்கின்றனர். உளவியல் ரீதியாக பார்க்கும்போது ஒரு நாளின் முடிவு இனிமையாக இருந்தால் நிம்மதியான உறக்கம் ஏற்படும், மேலும் பேசப்படும் விஷயமும் இலகுவாக இருக்கும்போது கதை சொல்லும் நமக்கும் இனிமையான நாளாக முடியும். மேலை நாடுகளில் இதனை செய்கின்றனர். அதையே பின்பற்றுவதா என்ற கேள்வி எழலாம். அவற்றில் இருக்கும் சாதக பாதகங்களைப் பார்த்து எடுத்துக்கொள்வதில் தவறில்லை.
முன்னர் ஒரே வீட்டில் இருக்கும் கூட்டுக்குடும்பத்தில் பாட்டியோ தாத்தாவோ கதைகள் சொல்லிக்கொண்டு இருப்பார்கள். ஆனால் கால சுழற்சியில் தனி குடும்பமாகிவிட்ட நிலையில் கதைகள் எந்த வழியிலும் அவர்களைச் சென்றடைவதில்லை.
பள்ளி பாடப்புத்தத்திலும் அவை துணைப்பாடம் என்று வந்தாலும் அவற்றை தேர்வுகளுக்கானவையாகவே குழந்தைகள் பார்க்கின்றார்கள். கதைகள் பல நிலப்பரப்புகளை அறிமுகம் செய்கின்றன. பல உணர்வுகளைக் கடத்துகின்றன. கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் இன்னும் ஏராளமான விஷயங்கள் செல்கின்றன.
நெருக்கம் ஏன் ஏற்படுகின்றது?
கதைகளைக் கேட்டது இயல்பாகவே குழந்தைகளுக்கு மகிழ்ச்சியை உண்டாகின்றது. அந்த மகிழ்ச்சி கொடுக்கும் குரல் இயல்பாக நெருக்கமாகின்றது. ஒவ்வொரு வீட்டிலும் எப்போதும் அதிகாரக் குரலும் கட்டளைக் குரலும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். இதைச் செய், அதை செய், எழுந்திடு, சாப்பிடு, ஹோம்வர்க் செய், டிரஸ் போடு, க்ளாசுக்கு என்ற அதிகாரமான கட்டளையிடும் குரல்களை மட்டுமே கேட்டு பழக்கப்படுகின்றார்கள். பள்ளிகளிலும் இதே நிலை தான். ஆசிரியருக்கு தன் பாடங்களை முடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம். வேகம் வேகம் அதிவேகம்.
கதைகள் இவை அனைத்தையும் மாற்ற முயற்சி செய்யும். வேகமான உலக சுழற்சியை நிறுத்தாது ஆனால் நம் வேகமான வாழ்க்கை சுழற்சியினை இலகுவாக்கும். ரசிக்க வைக்கும். குழந்தைகளுடைய வாழ்வினை மட்டுமல்ல பெற்றோர்களுடைய வாழ்வினையும் தான். மிக மிக முக்கியமாக கண்ணுக்கு தெரியாத ஓர் அடர் நெருக்கத்தினை குடும்பத்திற்குள் ஏற்படுத்தும்.
- விழியன் (சிறார்களுக்கான எழுத்தாளர்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT