Published : 29 Apr 2020 01:49 PM
Last Updated : 29 Apr 2020 01:49 PM
கரோனா பொதுமுடக்கம் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நமக்கு வெவ்வேறு பாடங்களைத் தந்திருக்கிறது. அது கரோனாவைத் துரத்துவதையும், போரிடுவதையும் தாண்டி அதனுடனே இரண்டறக் கலந்து வாழ்வதைப் பற்றிய பாடத்தையே தொடர்ந்து எடுத்துக்கொண்டிருக்கிறது. கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, இந்த நிலை நீடிக்கும் என்பதே பேருண்மை.
முடங்கிப்போன வாழ்க்கை
எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி கரோனா செலவினங்களுக்காக அறிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. அடுத்தது ரயில் பெட்டிகள் கரோனா தனிமை வார்டுகளுக்கான படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி பூட்டப்பட்டுவிட்டன. இதையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் குறைந்தபட்சம் இங்கே ரயில்கள், பேருந்துகள் மூன்று முதல் ஆறு மாத காலத்திற்கு சாத்தியமில்லை. அது சாத்தியமில்லாதபோது கரோனா இறக்குமதியாகும் வாய்ப்புகள் நிறைந்துபோன விமான சேவைகளுக்கு இடமே இல்லை. ஆக ஆறு மாத காலத்திற்கு அதிக தூரம் மக்கள் புலம்பெயர்வதற்குச் சாத்தியமில்லை.
இருசக்கர வாகனம் மட்டுமே போக்குவரத்துக்கு ஒரே வழி எனும் பட்சத்தில்கூட, எங்கே தடுக்கப்படுவோம் என்பதற்கு உத்தரவாதமில்லை. மாவட்ட எல்லைகளிலேயே தடைச்சுவர்கள் இருக்கும்போது, மாநிலத்திற்கு மாநிலமோ தடை என்பது பெருஞ்சுவர்கள் ஆகிவிட்டன. ரயில், வெளியூர் பஸ் போக்குவரத்துகள் திரும்பவும் தொடங்கப்படாமல் கோயம்புத்தூரில் உள்ளவர் பெங்களூருக்கோ, சென்னையில் உள்ளவர் டெல்லிக்கோ சென்று பணியாற்றவும், டெல்லியிலும், மும்பையிலும், பெங்களூருவிலும் அகப்பட்டுக்கொண்டிருப்பவர் தன் சொந்த மாநிலம் தமிழ்நாட்டுக்கு வரவும் வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு கட்டுகள் இறுகிப் போய்விட்டன.
இப்படியிருக்க, நம் மக்கள் மே 3-ம் தேதி பொதுமுடக்கம் தளர்த்தப்படுமா என எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள். ‘கரோனா ஏறுமுகத்தில் இருக்கிறது. எனவே பொதுமுடக்கத்தில் தளர்வு வரக் கண்டிப்பாக வாய்ப்பில்லை’ என்று அவர்களின் அறிவு சொன்னாலும், உணர்வுகளுக்கு அதை ஏற்றுக்கொள்ளும் சக்தியில்லை. அதன் மையப் புள்ளியில்தான் ‘அரசு பொதுமுடக்கத்தைத் தளர்த்தவே கூடாது. இன்னும் ஒரு மாத காலமேனும் இதைத் தொடராவிட்டால் கரோனா நம்மை ஒரு வழி பண்ணாமல் விடாது!’ என்ற குரல்கள் ஒலிக்கின்றன. அதே சமயம், ‘அதுவரை வேலை, வருமானம், உண்ண உணவு எதுவும் இல்லாமல் பட்டினி கிடக்க முடியுமா? என ஹீனஸ்வரக் குரல்களும் நிறையவே ஒலிக்கின்றன. எப்படியான குரல்கள் ஆயினும், ‘எத்தனை காலத்திற்கு பட்டினி கிடப்பது?’ என்ற குரல்களே பெரும்பான்மையாய் ஒலிக்கும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. எப்படி?
முதல் ஓலம்
ஒரு மாதத்துக்கு முன்பு பொதுமுடக்கம் அமலுக்கு வந்தபோது ரொம்பவும் பாதிக்கப்பட்டது அன்றாடக் கூலிகள்தான். இன்று உழைத்தால்தான் நாளைக்குச் சோறு என்ற நிலையில் இருப்பவர்கள் அவர்கள். ஆட்டோ, கார் ஓட்டுநர்கள், கடைத்தெருவில் சில்லறை வியாபாரிகள், கை வண்டி இழுப்பவர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், பெயிண்ட் வேலை செய்பவர்கள் இப்படியானவர்களின் பிழைப்பில் எடுத்த எடுப்பிலேயே மண் விழுந்துவிட்டது. அதிலும் கொஞ்ச நஞ்ச சேமிப்பு என்றிருந்தவர்கள் கையில் இருந்த இருப்பெல்லாம் ஒரு வார காலத்தில் கரைந்திருக்கும். அதுதான் இங்கே எழும்பிய முதல் குரல்.
அடுத்த ஹீனஸ்வரக் குரல் வாரக் கூலிக்காரருடையது. பட்டறைக் கூலி, பனியன் கம்பெனிக் கூலி, பட்டாசுத் தொழிற்சாலைக் கூலி இப்படியானவர்களுக்கு பொதுமுடக்கத்தின் போது கொடுக்கப்பட்ட கூலி, அடுத்த வாரப் பசிக்கு ஈடு கொடுத்துவிட்டது. அதற்குப் பிறகு, வறுமைதான், பசிதான், கடன்தான். இப்படி பார்த்துப் பார்த்து செலவு செய்து எப்படியோ அவர்களுக்கும் ஒரு மாத காலம் உருண்டுவிட்டது. அவர்கள் குரல் ஓரிரு வாரங்களாகவே ஹீனஸ்வரம் தாங்கியே ஒலிக்கிறது.
அடுத்து மிச்சமிருப்பவர்கள் மாதச் சம்பளக்காரர்கள். இதில் பல வகைகள். மாதம் ரூ.8 ஆயிரம் முதல் பல லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் வரை இதில் உண்டு. அதில் முதல் அடி வாங்குபவர்கள் 8 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்குபவர்கள்தான். மாதச் சம்பளக்காரர்களில் இவர்கள்தான் பெரும்பான்மை. இவர்கள் மாதந்தோறும் இழுத்துக்கோ பிடித்துக்கோ செலவுக்காரர்கள். வீட்டில் தன்னுடன் மனைவியும் வேலைக்குச் சென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள். மாதக் கடைசியில் சக ஆட்களிடம் அஞ்சு, பத்து கடன் வாங்குபவர்கள். இவர்கள் எப்படியே பொதுமுடக்கத்தின் இந்த 30 நாட்களை பல்லைக் கடித்துக்கொண்டு ஓட்டிவிட்டார்கள்.
அடுத்த மாதம் வந்துவிட்டது. எப்படியும் ஒரு மாதத்தில் இந்த பொதுமுடக்கம் தளர்ந்துவிடும் என நம்பிக்கையோடு இருந்த இவர்களுக்கும் இப்போது சிக்கல். அடுத்து வருபவர்கள் மாதம் 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்குபவர்கள். இதுவரை தொலைக்காட்சித் தொடர் பார்த்தவர்கள். கதை படித்தவன், கவிதை எழுதியவன், ஃபேஸ்புக்கில் பிடில் வாசித்தவர்களில் பாதிப் பேர் இதற்குள்தான் அடங்கப் போகிறார்கள். இதுவரை வந்த இவர்களின் ஜபர்தஸ் தாளங்கள் எல்லாம் இனி வறுமை, பசி கோரம் குறித்தே பேசும் என்பதில் ஐயமில்லை.
பிரச்சினை அதிகரிக்கும் ஊரடங்கு இவர்களின் குரலையும் மீறி மூன்று மாதம், நான்கு மாதம் நீடித்தால் ரூ. 50 ஆயிரம் வரை மாத சம்பளம் வாங்குகிறவர்கள் தனது சேமிப்பையெல்லாம் கரைத்திருப்பார்கள். அதற்குள் 30 ஆயிரம் வரை சம்பளக்காரர்கள் வறுமையின் விளிம்பில் கதறிக் கொண்டிருப்பார்கள். அதற்கு முந்தைய லிஸ்ட்டில் இருப்பவர்களை பசி, பட்டினி நோய்கள் கொள்ளைகொள்ள ஆரம்பித்திருக்கும். இப்போது அரிசி, பருப்பு, சோறு கொடுக்கும் புரவலர்கள் எல்லாம் அப்போது வீதி, வீதியாக வலம் வருவார்களா என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. இவர்கள் எல்லாம் ரேஷன் கடையில் போடப்படும் அரிசிக்கும், பருப்புக்கும் கையேந்தி வரிசை கட்டி நிற்கும் சூழல்கூட உருவாகலாம்.
இதைவிடக் கொடுமை இவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள், கம்பெனிகளின் நிலைமை. அவர்களே வங்கிக் கடன், வெளிக்கடன் என வாங்கிக் கடனாளியாகி முதலாளியாக வாழ்ந்தவர்கள். அடுத்தடுத்த மாதங்களில் இவர்களின் குரலும்கூட ஹீனஸ்வர அபாயத்தை எழுப்பத் தொடங்கியிருக்கும். இதில் மிக முக்கியமாக ஐ.டி. கம்பெனிகளின் நிலை. நம் ஐ.டி. கம்பெனிகள் அமெரிக்காவையே 90 சதவீதம் சார்ந்து நிற்பவை. அங்கேயே அஸ்திவாரம் ஆடிக்கிடப்பதால் இங்கே என்னவாகும் என்பதைச் சொல்ல முடியாது.
அரசின் உதவி தேவை
அதேசமயம் ஏதாவது ஒரு வகையில் இந்தக் காலகட்டங்களில் பொருளாதார வீழ்ச்சியைச் சமப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய காலகட்டம். அரசு என்ன செய்யும்? ‘சில சங்கடங்களோடு அவரவர், அவரவர் பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு இயங்குங்கள்’ என்று உத்தரவிடும் நெருக்கடிக்கு அது சென்றேயாக வேண்டிய கட்டாயம் இருக்கும். அப்படியென்றால்?
இங்கே கரோனாவை எதிர்த்துப் போரிட்டுவிட்டோம். அது கொல்லப்பட வேண்டிய கிருமிதான். ஆனால், அதனிடம் இப்படிப் போரிட்டு பொருளாதாரத்தை இழந்து, பட்டினிச் சாவில் தோற்பதை விட அதனுடன் இருந்தே வெற்றிகொள்வதே சரி என்ற நிலைக்கு நாம் மட்டுமல்ல, உலக நாடுகளும் வந்திருக்கும். அதற்குக் குறைந்தபட்ச பொதுமுடக்கத்தை அறிவித்து தொழில் மற்றும் இயல்பு வாழ்க்கை பாதிக்காதவாறு கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வேண்டியது வரும். அதற்காக வெளியூர் பேருந்துகள், நகரப் பேருந்துகள் இயங்குவது அந்தந்த மாநில, மாவட்ட கரோனா நிலையை ஒட்டியே எடுக்கப்படும்.
இனி வேறு வழியில்லை
''எக்காரணம் கொண்டும் ரயில்கள் போக்குவரத்து இராது. இப்படியான சூழலில் மனிதனுக்குக் கரோனா மாபெரும் விழிப்புணர்வைக் கொடுத்திருக்கும். அதனுடன் இயைந்து வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணரவும் வைத்திருக்கும்'' என்கிறார் சுகாதாரத் துறையில் பொறுப்பு வகிக்கும் மூத்த அதிகாரி.
“ஓர் இடத்தில் ஒருவனுக்கு அடிபட்டுவிடும். அதற்கு மருந்து போட்டும் குணமாகாது. காலப் போக்கிலும் அந்த வலி இருக்கும். ஆனால், அந்த வலியே சாகும் வரை அவன் வாழ்வில் ஓர் அங்கம் ஆகிவிடும். அதுபோலத்தான் இந்தத் தொற்று நோய்களும். இப்படித்தான் இந்தியாவில் பிளேக் நோய் 1901 தொடங்கி 1946 வரை நம் நாட்டில் குடியிருந்தது. பெரியம்மை எனப்படும் வைசூரி 1890-களில் தொடங்கி 1980 வரையிலும் கூட மனித குலத்தோடு உறவாடி உயிர் குடித்தது” என்று சொல்லும் அவர், கரோனாவுடன் வாழ்ந்துகொண்டே நம்மை நாமே அதிலிருந்து எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பதற்கு ஒரு வழிமுறையை முன்வைத்தார்.
“தொடுதல் மூலமாகவே கரோனா வருகிறது. கரோனா வைரஸ் தொற்றைத் தொட்டுவிட்டு நீங்கள் மூக்கை, வாயை, கண், காதுகளைத் தொடுவீர்கள். அந்த அவயங்கள் மூலமே கரோனா நம்முள் நுழைந்து நுரையீரலைத் தாக்குகிறது. அதற்காக நம் கையால் மூக்கை, வாயை, காதுகளைத் தொடாமல் இருக்க முடியுமா? வெளியே போய் அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வராமல் இருக்க முடியுமா? இதற்காக ஒரு ஆய்வு மையம் ஒரு கணக்கெடுத்திருக்கிறது. ஒரு மனிதன் ஒரு நிமிஷத்திற்கு எத்தனை முறை சராசரியாகத் தன் கண்களை, மூக்கை, காதுகளை, வாயைத் தொடுகிறான் என கணக்கெடுத்தார்கள். அதை வைத்து கரோனாவுக்கு எதிராக எப்படி செயல்படலாம் என்றும் சிந்தித்தார்கள்.
அதன்படி வலது கையால் மட்டும் சாப்பிட, மூக்கு, வாய், கண்களைத் தொடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது. கதவைத் திறப்பது, கைப்பிடியைத் தொடுவது, பிறரிடம் பணத்தை வாங்குவது என மற்றவரிடமிருந்து தொற்று பரவ எந்தப் பொருளில் எல்லாம் வாய்ப்பிருக்கிறதோ அதை இடது கையால் மட்டும் செய்து பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது. தப்பித் தவறிக்கூட இடக்கையால் (எப்படி நாமெல்லாம் சாப்பிடுவதற்கு இடக்கையைப் பயன்படுத்துவதில்லையோ அது போல) வலக்கையைத் தொட்டுவிடக் கூடாது. வீட்டுக்கு வந்ததும், சோப்பு போட்டு, கிருமி நாசினி போட்டு இரண்டு கைகளையும் சுத்தமாகக் கழுவிக்கொள்வது.
இப்படியாகப் பழக்கத்தைத் தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டால் கரோனாவிலிருந்து 90 சதவீதம் தப்பிக்கலாம். இப்படித்தான் பல ஆய்வுகளை, திட்டங்களை வகுத்துக்கொண்டு நாம் கரோனாவுடன் எதிர்காலத்தில் குடித்தனம் நடத்த வேண்டியிருக்கும்” என்கிறார் அந்த சுகாதாரத் துறை அதிகாரி.
மனித குலம் சந்தித்திராத சவால்கள் இல்லை. இதுவும் கடந்து செல்லும் என்று அசிரத்தையாக இருந்துவிட முடியாது. இந்தக் கரோனா சவாலை நாம்தான் கடந்துவர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT