Published : 28 Apr 2020 11:59 AM
Last Updated : 28 Apr 2020 11:59 AM
கரோனா தொற்றையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றிவரும் போலீஸாருக்கு மத்தியில், சில கறுப்பு ஆடுகளும் தென்படவே செய்கின்றன. வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ.100, ரூ.200 வாங்கும் போலீஸார் பற்றியும், கள் இறக்குபவர்கள், கள்ளச்சாராய வியாபாரிகள், டாஸ்மாக் சரக்கு பதுக்கல் பேர்வழிகள் போன்றோருக்குத் துணை போகும் காவலர்கள் குறித்தும் தகவல்கள் வந்தபடிதான் உள்ளன. இதில் கையூட்டு வாங்கிய காவலர்கள் சிசிடிவியால் சிக்கிய கதைகள் வலம் வரத் தொடங்கியிருக்கின்றன.
கோவையில் நடந்த இரண்டு சம்பவங்கள்தான் இப்போது செம வைரல்.
சில நாட்களுக்கு முன்னர், கோவை சரவணம்பட்டி அருகே இரவு நேரத்தில் மொபட் ஒன்று சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்ததை ஏட்டைய்யா ஒருவர் கண்டிருக்கிறார். மொபட்டைச் சொந்தம் கொண்டாட யாரும் வரவில்லை என்பதை உணர்ந்துகொண்ட அவர், அதை எடுத்துக்கொண்டு போய் ஊர் எல்லையில் நிறுத்தி பூட்டிவிட்டு சாவியை எடுத்துச் சென்றுவிட்டார்.
அடுத்த நாள் ரோந்து வரும்போது, மொபட்டை அவர் எடுத்த பகுதியில் இருந்தவர்களிடம், “இங்கே யாருடைய டூவீலராவது காணாமல் போனதா?” என ஏட்டைய்யா விசாரித்திருக்கிறார். ஒரு பெரியவர், “ஐயா என் மொபட் ஒண்ணு நேத்து இங்கேதான் நிறுத்தியிருந்தேன். காணோம்ங்க” என்று முன்வந்திருக்கிறார். உடனே, அவரைத் தன் வண்டியிலேயே ஏற்றிக்கொண்டு, ஊர்க்கோடியில் மொபட் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்திற்கு அழைத்துப்போன ஏட்டைய்யா, “உன் வண்டி இதுவா பாரு” எனக் கேட்டிருக்கிறார். வண்டி கிடைத்த சந்தோஷத்தில், “ஐயா இதேதானுங்க… ரொம்ப நன்றிங்க” மகிழ்ந்திருக்கிறார் அந்தப் பெரியவர்.
என்றாலும் ஏட்டைய்யா விடவில்லை. “இந்த வண்டியை ஒருத்தன் சந்தேகத்துக்கிடமாக இங்கே ஓட்டிட்டு வந்தான். அவனைப் புடிச்சு விசாரிச்சதுல முன்னுக்குப் பின்னா பதில் சொன்னான். அப்புறம்தான் இது திருடப்பட்ட வண்டின்னு தெரிய வந்துச்சு. அவன் வண்டிய நிறுத்திட்டு ஓடிட்டான்” என்று சொன்னவர், “சரி, சரி வண்டிக்கு ஒரு ஆயிரம் ரூபா கொடுத்துட்டு எடுத்துட்டுப் போ” என்றிருக்கிறார். பெரியவரும் பணத்தைக் கொடுத்துவிட்டு, வண்டியை மீட்டுச் சென்றுவிட்டார்.
அதன் பிறகுதான் அந்தப் பெரியவருக்குத் தன் வண்டியைத் திருடியவன் எவன் என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டிருக்கிறது. தன் வண்டி நிறுத்தப்பட்ட வீட்டருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தவர் தன் வண்டியைத் தள்ளிக்கொண்டு போனது சாட்சாத் ஏட்டைய்யாதான் என்பதை அறிந்து அதிர்ந்திருக்கிறார். போலீஸ் உயர் அதிகாரிக்கு அவர் பிராது கொண்டுபோக, சம்பந்தப்பட்ட ஏட்டைய்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அடுத்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் ஒரு பெண் இன்ஸ்பெக்டர். அவர் பெற்ற லஞ்சம் ஒரு மூட்டை வெங்காயம் என்பதுதான் இதில் சுவாரசியம்.
கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு வழியாகப் பாலக்காடு நோக்கி கடந்த 25-ம் தேதி இரவு சரக்கு லாரி ஒன்று சென்றது. சேலத்தைச் சேர்ந்த டிரைவர் ஒருவர் ஓட்டிச் சென்ற அந்த லாரியை வாளையார் செக்போஸ்ட் பகுதியில் போலீஸார் வாகனத் தணிக்கைக்காக நிறுத்தியுள்ளனர்.
“லாரியில் பெரிய வெங்காயம் உள்ளது. பெல்லாரியிலிருந்து ஏற்றிவருகிறேன். பாலக்காட்டில் டெலிவரி செய்ய வேண்டும்” என்று சொன்ன டிரைவர், அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். ஆவணங்களைச் சரிபார்த்த போலீஸார், லாரியைப் பின்னோக்கி நகர்த்தி, பழைய ரோடு வழியாகச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர். டிரைவரும் அதன்படியே செய்திருக்கிறார். வண்டியைத் திருப்ப முயன்றபோது, அங்கிருந்த போலீஸாரின் இரும்புத் தடுப்பு மீது பட்டு அது கீழே விழுந்துவிட்டது. சோதனைச் சாவடி பணியில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் அதைப் பார்த்துவிட்டு, தடுப்பு மீது மோதியதற்கு வழக்குப் போடப்போவதாகச் சொல்ல, டிரைவர் அஞ்சி நடுங்கியுள்ளார். “நான் வெறும் வெங்காய லோடு ஏற்றி வருபவன், பணம் கொடுக்கவும் கையில் பைசா இல்லை” என்று கெஞ்சியிருக்கிறார்.
அப்படியும் விடாத அந்தப் பெண் இன்ஸ்பெக்டர், வழக்குப் போடாமல் இருக்க ஒரு மூட்டை வெங்காயத்தைத் தரச்சொல்லி வாங்கிக்கொண்டார். ஒரு கிலோ வெங்காயம் 60 கிலோ. எப்படிப் பார்த்தாலும் மூட்டை ரூ. 1,600-க்குக் குறையாது. நொந்துபோன டிரைவர், லாரி உரிமையாளருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். உரிமையாளரோ போலீஸ் பறித்த மூட்டைக்கு உரிய பணத்தை டிரைவரின் சம்பளத்தில் பிடித்துவிடுவதாகக் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த லாரி டிரைவர் “அஞ்சு நாள் தூக்கமில்லாமல் லாரி ஓட்டி வந்திருக்கேன். அதுக்குப் பரிசு இதுவா?” என்று தனக்குத் தெரிந்தவர்களிடம் புலம்பியிருக்கிறார். அத்துடன், “இன்ஸ்பெக்டர் என்னை மிரட்டி வெங்காய மூட்டையைப் பறித்துக்கொண்டார்” என உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அதிகாரிகள் பெண் இன்ஸ்பெக்டரை அழைத்து விசாரணை நடத்தினார். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று அந்த இன்ஸ்பெக்டர் சத்தியம் செய்யாத குறையாகக் கூறியிருக்கிறார். ஆனால், அவர் வெங்காய மூட்டையைத் தனது காரில் ஏற்றிச்சென்ற காட்சி அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உயர் அதிகாரிகள் உடனடியாக வெங்காய மூட்டையை லாரி டிரைவரிடம் ஒப்படைக்குமாறு இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டனர்.
அப்போதும் அவர் அந்த மூட்டையை நேரடியாக டிரைவரிடம் ஒப்படைக்காமல், ஆயுதப் படையில் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் மூலமாகக் கொடுத்து அனுப்பினார். ‘சம்பவம்’ நடந்த இடத்துக்குச் சென்ற அந்தப் போலீஸ்காரர், மூட்டையை அங்கேயே போட்டுவிட்டு வந்துவிட்டாராம். வெங்காய மூட்டை கிடைக்கப் பெற்ற பின்னர் லாரி டிரைவர் பாலக்காட்டுக்குப் புறப்பட்டுச் செல்ல, இப்போது பெண் இன்ஸ்பெக்டரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைப் பற்றி நம்மிடம் பேசிய வாளையாறு பகுதி போலீஸார், “அந்த இன்ஸ்பெக்டர் வெங்காய மூட்டையை வாங்கியதுகூடப் பரவாயில்லை. அதை அந்த டிரைவர் புகார் சொன்ன பின்பு அவரைச் சமாதானப்படுத்தி அதற்குரிய விலையையாவது கொடுத்திருக்கலாம். வெங்காய மூட்டையை ஒரு போலீஸ்காரரையே பயன்படுத்தி மொபட்டில் வச்சு கொண்டு அதே இடத்தில் போட்டதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இப்போது எங்கப்பன் குதிருக்குள் இல்லைங்கிற கதையாக இவர் மாட்டியதோடு, ஒரு போலீஸ்காரரையும் சேர்த்து மாட்ட வச்சிருக்கார்னா என்ன சொல்றது” என்று சொல்லிச் சிரித்தனர்.
நெருக்கடி நேரத்தில் போலீஸ்காரர்கள் இப்படி நடந்துகொள்வது நியாயமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT