Published : 24 Apr 2020 12:36 PM
Last Updated : 24 Apr 2020 12:36 PM
இன்றைக்குக் ‘கரோனா’ எனும் வார்த்தைதான் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உச்சரிக்கப்படுகிறது. அதைக் கொரானா, குரானா, சொர்ணா, குருமா என்றெல்லாம் பாமர மக்கள் பெயரிட்டு அழைப்பதைப் பார்க்கிறோம். உண்மையில் கரோனா என்ற பெயர் இப்போது உருவானதல்ல. மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலேயே உருவாகிவிட்டது.
உயர் அழுத்த மின்வடக் கம்பிகள் செல்லும்போது அதிலிருந்து கிர்ர்…கிர்ர் என்று ஒரு ஒலி எழும்பிக் கொண்டிருக்குமே, அதன் பெயர்தான் கரோனா என்கிறார்கள் மின் வாரிய ஊழியர்கள். இது குறித்து என்னிடம் பேசிய மின் வாரிய ஊழியர் ஒருவர் அதை இப்படி விளக்கினார்:
“உயர் அழுத்த மின்சாரம் போகும் மின்வடக் கம்பிகளில் காற்றில் ஈரப்பதம் நிறைந்திருக்கும்போது அதைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் உருவாகும். அதுல கொர்ர்ன்னு ஒரு சத்தம் கேட்டுட்டே இருக்கும்.
அதை அந்தக் காலத்துல கிராம மக்கள் பார்த்துட்டு, அதுல கொள்ளிவாய் பிசாசு போகுதும்பாங்க. அந்த ஒளி வட்டத்துக்கு ‘கரோனா எஃபெக்ட்’னு பேரு. எலக்ட்ரிகல் டிப்ளமோ படிக்கிற காலத்துலயிருந்தே ஒவ்வொருத்தரும் இதைப் படிச்சிருக்காங்க. அப்பப் பிரபலமடையாத கரோனா, இப்போ வைரஸுக்குப் பேர் தாங்கி வந்ததும் பேசு பொருளா ஆயிருச்சு” என்றார் அந்த மின் வாரிய ஊழியர்.
அதெல்லாம் இருக்கட்டும், இந்த வைரஸிற்கு கரோனா என்ற பெயரை ஏன் வைத்தார்கள் என்று தெரியுமா? ‘கரோனா’ என்பது லத்தீன் மொழி வார்த்தை. அதற்குக் ‘கிரீடம்’ அல்லது ‘மாலை’ என்று அர்த்தம். இந்த வார்த்தையே, கிரேக்க மொழி வார்த்தையான ‘கொரோனி’ என்பதிலிருந்து பெறப்பட்டதுதான். கரோனா வைரஸ் கோள வடிவம் கொண்டது. இதன் மேற்பரப்பில், கிரீடத்தில் இருப்பதைப் போன்ற கூர்முனைகள் இருப்பதால் ‘கரோனா’ எனும் பெயரைப் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT