Published : 25 Aug 2015 10:28 AM
Last Updated : 25 Aug 2015 10:28 AM

கிருபானந்த வாரியார் 10

சுவாரஸ்யமான, எளிய நடையில் ஆன்மிகக் கருத்துகளை பரப்பிய திருமுருக கிருபானந்த வாரியார் (Kirupanandha Variyar) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 25). அவரைப் பற்றிய அரிய முத்துகள் பத்து:

l வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் (1906) பிறந்தார். இசை, இலக்கியத்தில் வல்லவரான தந்தை, 3 வயதில் இருந்தே தன் குழந்தைக்கு இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தந்தார். சிறுவனுக்கு 8 வயதிலேயே கவிபாடும் ஆற்றல் சித்தித்தது.

l ஒருமுறை, தான் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்கு செல்ல இயலாத தால், மகனை அனுப்பிவைத்தார். மடைதிறந்த வெள்ளமாகப் பெருக்கெடுத்த 18 வயது இளைஞனின் சொல்லாற்றல் அவையோரை மெய்மறக்கச் செய்தது. முதல் சொற்பொழிவே பேரும் புகழும் பெற்றுத் தந்தது.

l யானைக்கவுனி தென்மடம் பிரம்ம வரதாச்சாரியாரிடம் 4 ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். சைவ சித்தாந்தத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர். அபரிமிதமான நினைவாற்றல் படைத்தவர். சிறந்த முருக பக்தர்.

l திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவருட்பா உள்ளிட்டவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாக்களை மனப்பாடமாக அறிந்தவர். சொற்பொழிவின்போது, அவற்றை இசையோடு பாடுவார்.

l ‘திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாத இதழை 37 ஆண்டுகளாக நடத்தினார். சிவனருட்செல்வர், கந்தவேல் கருணை, ராமகாவியம், மகாபாரதம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நூல்கள், 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக ‘தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்’ என்ற நூலை எழுதியுள்ளார். அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இவரது நூல்கள் தெளிவாக, எளிய நடையில், இலக்கியத்தரம் வாய்ந்தவையாக இருக்கும்.

l சொற்பொழிவுக்கு நடுவே, குழந்தைகளிடம் ஆன்மிக கேள்விகள் கேட்பார். சரியாக பதில் சொல்லும் குழந்தைகளுக்கு விபூதி, சிறிய கந்தசஷ்டி கவசம் புத்தகத்தை அன்புப் பரிசாகத் தருவார். இதற்காகவே முன்வரிசையில் இடம்பிடிக்க சிறுவர்கள் போட்டிபோடுவார்கள்.

l படித்தவர், பாமரர், முதியோர், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ரசிக்கும்படி சுவாரஸ்யமாகப் பேசுவார். பெண்மையைப் போற்றவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுவார். குழந்தைகளுக்குத் தாயின் பெயரை முதலெழுத்தாகப் போட வேண்டும் என்பதை முதன்முதலாகக் கூறியவர் இவர்தான்.

l தியாகராஜ பாகவதரின் ‘சிவகவி’ படத்துக்கு வசனம் எழுதினார். துணைவன், திருவருள், தெய்வம் போன்ற திரைப்படங்களிலும் நடித்தார். எம்ஜிஆருக்கு ‘பொன்மனச் செம்மல்’ என்ற பட்டத்தை சூட்டியது இவர்தான்.

l ஏராளமான கோயில்களில் திருப்பணி நடைபெற உதவியவர். ஆன்மிக, அறப்பணிகளுக்காக ஏராளமான விருதுகள் பெற்றவர். சென்னை தமிழிசை மன்றம் ‘இசைப் பேரறிஞர்’ பட்டம் வழங்கி சிறப்பித்தது.

l வாழ்நாள் முழுவதும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் மூலம் பக்தி, நன்னெறியை மக்களிடையே வளர்த்தார். செந்தமிழ்க் கடல், அருள்மொழி அரசு, திருப்புகழ் ஜோதி என்றெல்லாம் போற்றப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 87 வயதில் (1993) விமானப் பயணத்தின்போது மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x