Published : 04 Aug 2015 11:24 AM
Last Updated : 04 Aug 2015 11:24 AM
பிரபல இந்தி பின்னணிப் பாடகர்
# இந்தி திரையுலகின் பின்னணிப் பாடகராகத் திகழ்ந்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட கிஷோர் குமார் (Kishore Kumar) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வா நகரில் (1929) பிறந்தார். இவரது அண்ணன் கள் அசோக் குமார், அனூப் குமார் பாலிவுட் நடிகர்கள் என்பதால் இவருக்கும் நடிப்பு, இசையில் ஆர்வம் ஏற்பட்டது.
# மும்பை டாக்கீஸில் கோரஸ் பாடகராக இசைப் பயணத்தைத் தொடங்கிய கிஷோர், 1946-ல் அசோக் குமார் கதாநாயகனாக நடித்த ‘ஷிகாரி’ திரைப்படத்தில் நடித்தார். 1948-ல் ‘ஜித்தி’ திரைப்படத்தில் முதன்முதலாகப் பாடினார். 1951-ல் ‘ஆந்தோலன்’ படத்தில் நாயகனாக நடித்தார்.
# ‘நவுக்ரி’, ‘முஸாஃபிர்’, ‘ஆஷா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், சிறந்த பாடகராக பிரகாசிக்க வேண்டும் என்பதில்தான் இவருக்கு அதிக ஆர்வம். எஸ்.டி.பர்மன் இசையமைக்கும் அனைத்து படங்களிலும் பாடிவந்தார். ‘கிஷோரின் குரல் ஒரு அருட்கொடை’ என்பார் பர்மன்.
# ‘முனிம்ஜி’, ‘டாக்ஸி டிரைவர்’, ‘பன்தூஷ்’ ஆகிய படங்களில் இவரது பாடல்கள் பிரபலமடைந்தன. 1961-ல் ‘ஜும்ரூ’ திரைப்படத்தை தயாரித்து, இசை அமைத்து, பாடல்கள் எழுதி, முக்கிய வேடத்திலும் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் இசையமைத்தார். எவ்வித இசைப் பயிற்சியும் இல்லாமலே திரை இசை உலகில் சாதனை படைத்தார்.
# 1970-களில் பல சூப்பர்ஹிட் பாடல்களை வழங்கி இந்தி திரையுலகில் கோலோச்சினார். ‘ஆராதனா’ படத்தில் இவர் பாடிய ‘ரூப் தேரா மஸ்தானா’, ‘மேரே சப்னோ கி ராணி கப்’, ‘கோரா காகஸ் தா யே மன் மேரா’ ஆகிய பாடல்கள் மக்கள் மனதில் இன்றும் எதிரொலிக்கும் அமர கீதங்கள்.
# ‘காதா ரஹே மேரா தில்’, ‘சல்தே சல்தே மேரா யே கீத்’ ஆகிய பாடல்கள் இவரது பெருமையை என்றென்றும் பறைசாற்றக்கூடியவை. அவரது பாடல்களுக்காகவே பல படங்கள் ஓடின.
# ராஜேஷ் கன்னா, அமிதாப் பச்சன், சஞ்சீவ் குமார், தர்மேந்திரா, ஜிதேந்திரா, தேவ் ஆனந்த் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் பின்னணி பாடியுள்ளார். ஆர்.டி.பர்மன் ராஜேஷ் கன்னா கிஷோர் குமார் கூட்டணி பாலிவுட்டில் தொடர்ந்து 10 ஆண்டுகள் வெற்றிக் கூட்டணியாக கொடிகட்டிப் பறந்தது. 33 படங்களில் இணைந்து பணியாற்றினர்.
# மூவரும் தனிப்பட்ட முறையிலும் நெருங்கிய நண்பர்களாகத் திகழ்ந்தனர். கிஷோர் குமார் மறைந்த பிறகு அவரது குடும்பத்துக்கு தொடர்ந்து உதவிவந்தார் ராஜேஷ் கன்னா.
# கிஷோர் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவர். மனதில் பட்டதை துணிச்சலாக கூறுவார். பிலிம்ஃபேர் விருதை 8 முறையும், வங்கத் திரைப்படப் பத்திரிகையாளர் கழக விருதை பலமுறையும் பெற்றார்.
# காலத்தை வென்ற இசை மேதை கிஷோர் குமார், புகழேணியின் உச்சத்தில் இருக்கும்போதே 58 வயதில் மாரடைப்பால் (1987) காலமானார். மத்தியப் பிரதேச அரசு இவர் பெயரில் விருதை நிறுவி, கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT