Published : 23 Apr 2020 08:33 AM
Last Updated : 23 Apr 2020 08:33 AM
நாவலைப் படமாக்குவது ஒன்றும் புதிதல்ல. எத்தனையோ நாவலை எத்தனையோபேர், சினிமாவாக்கியிருக்கிறார்கள். அப்படி சினிமாவாக்கும் போது, கடுகளவேனும் அந்த நாவலுக்கோ எழுத்தாளருக்கோ கவுரவம் சேரும்படி, மரியாதை கூடும்படி படமாக்கியிருந்தால், அதுவே அந்தப் படைப்பின் வெற்றி. சினிமா எனும் செல்லுலாய்ட் மொழியைப் புரிந்ததன் அடையாளம். அப்படி நாவலை படமாக்கி, எழுத்தாளருக்கு மட்டுமின்றி, எல்லோருக்குமே பெருமையையும் மகிழ்வையும் தந்ததில், தில்லானா மோகனாம்பாளுக்கு தனியிடம் உண்டு. 1968ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி, இது... 52 வருடங்களாகின்றன.
எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு, ஆனந்தவிகடனில் தொடராக எழுதிய கதை இது. நாகஸ்வரக் கலைஞனுக்கும் பரதத்தையே மூச்சாகக் கொண்ட பெண்ணுக்கும் இடையே நடக்கிற மோதலும் காதலுமே கதை என்று ஒருவரியில் சொல்லிவிடமுடியாது. அப்படிச் சொல்வதும் அழகல்ல.
தி.ஜானகிராமனின் மோகமுள் படித்துவிட்டு, கும்பகோணம் தெருக்களில், யமுனாவின் வீடு இதுதானா, புழுதி பறக்கும் சாலை என்று எழுதியது இந்தத் தெருவைத்தானா, பாபு இங்குதான் சோகத்துடன் நடந்துவந்தானா... என்று போய்ப்பார்த்தவர்கள் பலர் உண்டு. அதற்கும் முன்னதாகவே, தில்லானா மோகனாம்பாளைப் படித்துவிட்டு, கல்யாண வீடுகளிலும் கச்சேரிகளிலும் பரத நிகழ்ச்சிகளிலும் சண்முகசுந்தரத்தையும் மோகனாம்பாளையும் தேடினார்கள் என்று சொல்லுவார்கள். அப்பேர்ப்பட்ட ஜீவ கதாபாத்திரங்களுக்கு இன்னும் இன்னும் ஜீவனைக் கொடுத்திருப்பார் இயக்குநர் ஏ.பி.நாகராஜன்.
அந்தக்காலத்தில், சிவாஜியின் நடிப்பை எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருந்த வேளையிலேயே, ‘ஆனா கொஞ்சம் ஓவர் ஆக்டிங்ப்பா’ என்றவர்களும் உண்டு. ஆனால், சிக்கல் சண்முகசுந்தரத்துக்கு என்ன கொடுக்கவேண்டும் என்று மிதமாகவும் இதமாகவுமான நடிப்பைக் கொடுத்திருப்பதுதான் சிவாஜி எனும் ஒப்பற்ற கலைஞனின் சாதுர்ய சாமர்த்திய அசாத்தியம். ’இவரே நாகஸ்வரம் வாசிக்கிறாரோ...’ என்ற சந்தேகம் சாதாரண ரசிகனுக்குள் எழுந்தது. ‘இனிமே நாகஸ்வரம் வாசிக்கும்போது, தொடையை இப்படித்தான் ஆட்டணும், புருவத்தை இப்படி இப்படியெல்லாம் உசத்தணும், தோள்பட்டைகளை அந்தந்தமாதிரி குறுக்கி நிமிர்த்திக்கணும், முதுகை நிமிர்த்திக்கணும்’ என்றெல்லாம் நாகஸ்வரக் கலைஞர்களுக்கே ஒரு பாடிலாங்வேஜை உருவாக்கித் தந்திருப்பார் சிவாஜி. சிக்கல் சண்முகசுந்தரமாகவே மாறுவதில் அவருக்கு எந்தக்காலத்திலும் சிக்கல் இருந்ததே இல்லையே!
மோகனாம்பாள் பத்மினிக்கும் அவரின் கால்களுக்கும் கண்களுக்கும் பரதத்தைச் சொல்லியா தரவேண்டும். பரதக்கலையை உண்டுபண்ணும்போதே, அதற்காக யாரையெல்லாம் படைக்கவேண்டும் என்று இறைவன் தீர்மானித்த பட்டியல்களில், பத்மினியின் பெயரும் உண்டு.
ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் கொண்ட, தன் விருப்பப்படி மட்டுமே நடக்கவேண்டும் என்று கிடுக்கிப்பிடி போடுகிற அம்மா சிகே.சரஸ்வதி, அவர் உடன் இருக்க, மோதலின் மூலமாகவே சிக்கலாருக்கு காதலைச் சொல்வதுதான், படத்தின் மைய இழை. அந்த இழையில் இருந்து ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக இன்னும் இன்னும் இழைபிரித்துச் சேர்த்திருப்பதுதான் திரைக்கதை.
சிவாஜியின் தம்பியாக ஏவிஎம்.ராஜனும் தன் இயல்பான நடிப்பைத் தந்திருப்பார். மேளக்காரராக பாலையா, வெளுத்துவாங்கியிருப்பார். ’அங்கே எனக்கொரு சோடாக்கடைக்காரனைத் தெரியும்’ என்று சொல்ல, உடனே இவர், ‘எனக்கு பீடாக்கடைக்காரனைத்தெரியும்’ என்பார். ‘என்னன்னு தெரியல தம்பி. கடைல ஜிஞ்சர் பீர் கேட்டேன். அவன் ஏதோ கொடுத்தான். பித்த உடம்பா... கப்புன்னு தூக்கிருச்சு’ என்று பாலையா வரும்போது விசில் பறக்கும். அங்கே நட்டுவனாராக தங்கவேலுவும் டி.ஆர்.ராமச்சந்திரனும் பின்னியிருப்பார்கள். சாரங்கபாணி, சகஸ்ரநாமம், நாகையா, பாலாஜி, நம்பியார் என அவரவருக்கான கதாபாத்திரங்களுக்கு அழகு சேர்த்திருப்பார்கள்.
முக்கியமாக ஜில்ஜில் ரமாமணி. ஆச்சி மனோரமாவின் லைஃப்டைம் கேரக்டர். சிவாஜி போல, பத்மினி போல, மனோரமாவைத் தவிர அந்தக் கேரக்டரை யாராலும் நிறைவு செய்துவிடமுடியாது. ’மண்டு மண்டு...’ என்று சிவாஜி சொல்லும் போது, ‘ஏன்ன்ன்ன்’ என்று ஒரு இழுவையுடன் வெள்ளந்தியாய்க் கேட்கும் போது கைத்தட்டலால் மனம் அள்ளியிருப்பதை பறைசாற்றியிருப்பார் மனோரமா.
ஒருபக்கம் அம்மாவின் உத்தரவையும் இன்னொரு பக்கம் தன் சொந்த ஆசையையும் வைத்துக்கொண்டு தவித்து மருகுவார் பத்மினி. பார்க்கிறவர்கள் கலங்கிப் போவார்கள்.
கலைத்துறையில் இருக்கிறவர்களுக்கான பாலியல் அத்துமீறல்களையும் அதற்காக அவர்கள் செய்யும் மோசமான நடவடிக்கைகளையும் நாகலிங்கம், சிங்கபுரம் மைனர், மதன்பூர் மகாராஜா என்று ஒவ்வொருவர் மூலமாகவும் காட்டிக் கொண்டே வந்த கதையே ஓர் அழகிய திரைக்கதையைத் தந்திருக்கும். அந்தச் சம்பவங்களும் அது தொடர்பான நிகழ்வுகளுமே சிவாஜிக்குள் முளைக்கிற சந்தேகத்துக்கான ஆரம்பப் புள்ளியாகவும் அமைந்திருப்பது, தில்லானா மோகனாம்பாளை தானே வந்து ஒட்டிக்கொண்ட வெற்றிசூட்சுமம்.
’நேத்துவரை நீ பாத்த சிங்கபுரம் மைனர் செத்துட்டான்னே நினைச்சுக்க. என் மனைவியோட பொறுமைதான் நான் திருந்தினதுக்குக் காரணம்’ என்று பாலாஜி சொல்லுவார். ‘அந்த உத்தமியைக் கூட்டிட்டு வந்திருக்கலாமேய்யா’ என்பார் பத்மினி. ‘நீயும் சண்முகசுந்தரம் கலந்துக்கற போட்டில, முன்வரிசைல என் மனைவியோட வந்து உக்கார்றேன்’ என்பார் பாலாஜி. அதேபோல் நடக்கிற போது, கையெடுத்து பத்மினி கும்பிடுவது போல் ஒரு க்ளோஸப், பாலாஜியின் மனைவி சிரித்தபடி கும்பிடுவது போல் இன்னொரு க்ளோஸப் என்று அழகாகப் படம்பிடித்திருப்பார்கள்.
திருவாரூர்க் கோயிலில் போட்டி முடியும்போது, சிவாஜிக்குக் விஷம் தோய்ந்த கத்திக்குத்து. அடுத்த காட்சியில், படுத்தபடுக்கையாகிக் கிடப்பார் சிவாஜி. படம் முழுக்க பளிச்சென்ற புடவையிலும் அலங்காரத்திலும் இருக்கிற பத்மினி, அப்போது சாயம் போனது போல் வெளுத்த நிறத்திலான புடவை அணிந்திருப்பார். மனித உணர்வுகளையே அங்கே பளிச்சென்று காட்டியிருப்பார் இயக்குநர் ஏபி.நாகராஜன்.
சென்னை ஆஸ்பத்திரியில் சிவாஜி சிகிச்சையில் இருப்பார். அங்கே நர்ஸ் மேரியின் செயல்பாடுகள் சிவாஜிக்கு, ‘இவள் காதலிக்கிறாரோ’ என்கிற கலக்கத்தையும் நடுக்கத்தையும் கொடுத்திருக்கும். ’நீங்க முடியாம இருந்தபோது செஞ்ச பணிவிடைகள் தப்பாத் தெரியல. இப்ப நான் செய்றது எல்லாமே உங்களுக்கு வெறுப்பா இருக்குதே...’ என்று கேட்பார் நர்ஸ். ’எங்க அப்பா சர்ச்சுல பியானோ வாசிக்கிறாரு. அவர்கிட்ட உங்க பேரைச் சொல்லி விவரம் சொன்னேன். உடனே அவரு எழுந்து உக்கார்ந்துட்டாரு. ‘அவர் மிகப்பெரிய மகான். இசைமேதை. வாழ்க்கைல உங்க அப்பாவுக்கு எதுனா செய்யணும்னு நெனைச்சா, அதை அந்த மகானுக்குச் செய்யும்மா’ன்னு சொன்னாரு. நீங்க என்னடான்னா நான் உங்களைக் காதலிக்கிறேன்னு நெனைச்சிட்டீங்க. ஏய்யா... உங்களுக்கு நாகஸ்வரத்தைத் தவிர வேற எதுவுமே தெரியாதா’ என்று கேட்பார். ‘ஆமாம்மா, நாகஸ்வரத்தைத் தவிர எனக்கு வேற எதுவுமே தெரியாது’ என்பார் சிவாஜி. கிட்டத்தட்ட அதுதான் அவர் கேரக்டர். அதுதான் இசைக்கலைஞனின் குணமும் கூட! நர்ஸாக நடித்திருக்கும் எம்.எல்.பானுமதிக்கு அந்த ஒருகாட்சிதான். ஆனால் இன்றைக்கும் நம் மனதில் நிற்கிறார் அவர்.
சிவாஜி, பத்மினியின் வாழ்நாள் நடிப்புக்கு, ‘நலம்தானா’ பாட்டு ஒன்றே போதும். இந்தப் பாடலையொட்டி ஒரு சம்பவமும் நினைவுக்கு வருகிறது. நலம்தானா, உடலும் உள்ளமும் நலம்தானா என்று எழுதியிருப்பார் கண்ணதாசன். அறிஞர் அண்ணா உடல்நலமில்லாமல் இருந்த சமயம் அது. பாடலைக் கேட்டுவிட்டு, கண்ணதாசனுக்கு போன் செய்து, ’அதெப்படிய்யா எழுதினே. உடலும் உள்ளமும் நலம்தானானு நல்லா வார்த்தையைப் போட்டிருக்கே’ என்று புகழ்ந்தாராம். அந்தப் பாடலும் பாடலில் பத்மினியின் கண்கள் வழியேயான நல விசாரிப்புகளும் அதற்கு நாகஸ்வரம் வாசித்தபடியே கண்ணடித்தும் சிரித்துக்கொண்டும் புருவம் உயர்த்தியபடியும் சிவாஜியின் பதில்கள், என பசுமையான காட்சிகள்.
அந்த வைத்தி? வைத்தியைச் சொல்லாவிட்டால் நீங்கள் அடிப்பீர்கள். ஆனால் படம் வந்த போது, வைத்தி நேரில் மாட்டியிருந்தால், அடிபின்னியிருப்பார்கள் ரசிகர்கள். காமெடியில் சக்கைப்போடு போடும் நாகேஷ், நெகடீவான, வில்லத்தனமான, குள்ளநரித்தனமான வைத்தி கேரக்டரை எப்படி ஒத்துக்கொண்டார், எப்படி தூள் கிளப்பினார், அதேபோல வைத்தியைத் திட்டியவர்கள் கடைசியாக, ‘நாகேஷ் பிரமாதம் பண்ணிட்டாருடா’ என்று சொன்னார்கள். அந்த ரசாயன மாற்றம்தான் நாகேஷ்.
கலர்படம். அதையொட்டி நிகழ்ந்திருக்கும் உழைப்பு அபாரம். ஆர்ட் டைரக்ஷன் ஒர்க் அமர்க்களப்படும். சிறந்தபடமாக ஜனாதிபதி வெள்ளிப்பதக்கம், தமிழக அரசின் சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை பத்மினி, மனோரமாவுக்கு விருதுகள், எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக மக்களின் மனங்களில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்தது எனும் வகையில் காவியம் படைத்திருக்கிறார் ஏபி.நாகராஜன்.
காலமும் சூழலும் எண்ணமும் செயலும்தான் அவ்வப்போது ஒரு மனிதனை நல்லவனாக்கிவிடுகிறது. கெட்டவனாக்கிவிடுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு, படத்தில் வருகிற வில்லன்கள் ஒரு சந்தர்ப்பத்தில் திருந்துவது, அதுவும் உணர்ந்து திருந்துவது... உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்குமான சண்டை. அதை அழகுறச் செய்திருப்பார்கள் அவர்களும்!
தில்லானா மோகனாம்பாளும் சிக்கல் சண்முகசுந்தரமும் ஜில்ஜில் ரமாமணியும் வைத்தியும் சினிமா உள்ளவரை வாழ்வார்கள். வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். அவர்கள் சாகாவரம் பெற்றவர்கள்! அந்தப் படமும் அப்படித்தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT