Published : 22 Apr 2020 04:35 PM
Last Updated : 22 Apr 2020 04:35 PM
கோவை மாவட்டத்தில் மதுக் கடைகள் ஆய்வு நடத்தப்பட்டு போலி அறிக்கைகள் வழங்கப்படுவதாகவும், பல கோடி ரூபாய் மது பாட்டில்கள் கடத்தப்பட்டு விற்கப்படுவதாகவும் புகார்கள் வரும் நிலையில், ‘ஊரடங்கு உத்தரவுகளைத் தளர்த்தும்போது டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையை நடத்தினால் அது மாபெரும் ஊழலுக்கே வித்திடும்’ என்கிறார்கள்.
கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை, கோவை வடக்கு, கோவை தெற்கு என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையத்தைத் தலைமையாகக் கொண்ட கோவை வடக்கில் 144 கடைகளும், பொள்ளாச்சியைத் தலைமையாகக் கொண்ட கோவை தெற்கில் 167 கடைகளும் உள்ளன. 144 தடை உத்தரவு காரணமாக மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுக் கிடக்கின்றன. பாதுகாப்புக் குறைபாடு காரணமாக மாவட்ட அளவில் 81 மதுபானக் கடைகளில் இருந்த மது பாட்டில்கள் அனைத்தும் டாஸ்மாக் குடோன்கள் மற்றும் தனியார் மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, மதுபானக் கடைகளிலிருந்து, சிலர் மது பாட்டில்களை முறைகேடாக எடுத்து விற்பனை செய்வதாகப் புகார் வந்தது. இது தொடர்பாக மாவட்ட மேலாளர்கள் தலைமையில் கடை கடையாக ஆய்வுப் பணி நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மதுபானக் கடையில் உள்ள மதுபாட்டில்கள் இருப்பின் உண்மையான விவரங்கள் மறைக்கப்பட்டு போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக டாஸ்மாக் மதுபான ஊழியர் சங்கத்தினர் புகார் கூறியுள்ளனர்.
உதாரணமாகக் குனியமுத்தூர் பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகள், சுந்தராபுரம் மலுமிச்சம்பட்டி உள்பட 9 டாஸ்மாக் கடைகளிலிருந்து மது பாட்டில்கள் முறைகேடாக எடுக்கப்பட்டிருக்கின்றன. இப்படிப் பல்வேறு மதுபானக் கடைகளிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் வெளியே கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள் ஊழியர்கள்.
இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாளிலேயே முறைகேடுகள் தொடங்கிவிட்டன. அப்போதே ஒவ்வொரு கடையிலும் 50 முதல் 100 பெட்டிகள் அவசர அவசரமாக வரவழைக்கப்பட்டு அவை அத்தனையும் விற்கப்பட்டதாகக் கணக்கில் எழுதப்பட்டு, ஏற்கெனவே மதுபான பார் நடத்தும் ஆட்கள் மூலம் வெவ்வேறு இடங்களில் பதுக்கப்பட்டன. பின்னர், அதை மதுபான பார் உரிமையாளர்கள் மூன்று மடங்கு விலை வைத்து விற்றுக் கொள்ளை லாபம் பார்த்தனர். இவர்கள் அனைவரும் ஆளுங்கட்சியினர் என்பதால் மாமூல் வாங்கிக்கொண்டு போலீஸாரும் இதைக் கண்டும் காணாமல் விட்டனர்.
இதற்கிடையே சில கடைகளில் எஞ்சியுள்ள சரக்கையும் எடுக்க பல்வேறு முயற்சிகள் நடந்தன. சில கடைகளில் சமூக விரோதிகள் பெயரில் பூட்டு உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் திருடப்பட்டன. இப்படித் திருடப்பட்ட மதுபாட்டில்களும் அந்தந்தப் பகுதியில் உள்ள மதுபான பார் உரிமையாளருக்கே வந்து சேர, கமிஷனும் மாமூலும், கொள்ளை லாப விற்பனையும் கொடி கட்டிப் பறந்தன. அத்துடன், ‘கடையில் உள்ள சரக்குக்குப் பாதுகாப்பு இல்லை. அவற்றைத் திரும்பக் கொண்டுவந்து குடோனிலேயே அடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையும் டாஸ்மாக் மதுபானக் கடை ஊழியர் மூலமே மேலாளருக்கு வைக்கப்பட்டது.
அவர்களும் வேறு வழியில்லாது அனுமதியளிக்க, இந்தக் கடைகளிலிருந்து சரக்குகள் எடுக்கப்பட்டு குடோனில் அடுக்கப்பட்ட படலமும் நடந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் இப்படி கடையிலிருந்து குடோனுக்குக் கொண்டுபோகும் வழியிலேயே மது பாட்டில் கள்ள மார்க்கெட்டிற்குக் கைமாற்றப்பட்டிருப்பது தான். கடைகளில் 40 பெட்டிகள் எடுக்கப்பட்டால், குடோனுக்கு வரும்போது நான்கைந்து பெட்டிகள் மிஞ்சும். அதற்கேற்ப ஒப்படைப்பு ரசீதும் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆக, சரக்கை எடுப்பது, வைப்பது, திரும்ப குடோனுக்குக் கொண்டுபோய் அடுக்குவது என எல்லாவற்றிலும் முறைகேடு நடந்திருக்கிறது” என்றனர்.
மேலும், “ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் மேற்பார்வையில் தனிக்குழு அமைத்து, டாஸ்மாக் கடைகளில் சோதனை நடத்த வேண்டும். மதுக் கடைகளின் சாவிகள் மேற்பார்வையாளர்கள் வசம் உள்ளன. மேற்பார்வையாளர்கள் சிலர், சீல் வைக்கப்பட்ட கடையின் பூட்டைத் திறந்து மது பாட்டில்களைப் பெட்டி பெட்டியாக வெளியே எடுத்து பதுக்கி வைத்துள்ளனர்.
அரசியல் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மதுபான பாட்டில்களை வாங்கி வைத்துள்ளனர். போலீஸார் சிலரும் மது பாட்டில்களை மிரட்டி வாங்கிச் செல்கின்றனர். கடந்த மாதம் டாஸ்மாக் கடைகளை மூடும்போது எவ்வளவு பாட்டில்களில் இருப்பில் இருந்தன; இப்போது எவ்வளவு பாட்டில்கள் உள்ளன எனக் கண்டறிய வேண்டும். முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதில் முக்கியமான இன்னொரு சங்கதியும் உண்டு. இன்றைக்கு அரசியல்வாதிகள், குறிப்பாக ஆளுங்கட்சியினர் மதுபானக் கடைகளைத் திறப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.
‘ஊரடங்கு உத்தரவில் எது தளர்த்தப்படுகிறேதோ இல்லையோ, இந்த டாஸ்மாக் கடைகள் 2 மணிநேரமே ஆனாலும் திறந்தே தீர வேண்டும்’ என்று அமைச்சர்கள் முதல் முதல்வர் வரை பலரிடம் ஆளுங்கட்சியினர் மறைமுகமாக வலியுறுத்தி வருகின்றனர். இருக்கும் நிலவரத்தைப் பார்க்கும்போது, ஒரு மணி நேரம் மதுபானக் கடையைத் திறந்துவைத்தால்கூட பெட்டி, பெட்டியாய் பாட்டில்களைக் கள்ள மார்க்கெட்டுக்குக் கொண்டு சென்று அடுக்கிவிடுவார்கள் கள்ள மது விற்பனையாளர்கள். அதற்கு உள்ளூர் அரசியல்வாதிகள், அதிகாரிகள், கடை சிப்பந்திகள் முதற்கொண்டு உள்ளூர் போலீஸார் வரை பலரும் தயாராக உள்ளனர் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT