Last Updated : 18 Apr, 2020 08:22 PM

1  

Published : 18 Apr 2020 08:22 PM
Last Updated : 18 Apr 2020 08:22 PM

பெண்களுக்குப் பிரசவம்னா என்னன்னு தெரியலை: ஊரடங்கில் ஒடிசா பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த ஆட்டோ சந்திரன்

கரோனா பீதியில் சில மருத்துவர்கள்கூட நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய பயந்திருக்க, கோவையில் ஒடிசாவைச் சேர்ந்த ஏழைப் பெண்ணுக்கு சாலையிலேயே பிரசவம் பார்த்திருக்கிறார் ஆட்டோ டிரைவரும், ‘லாக்கப்’ (வெற்றிமாறனால் ‘விசாரணை’ எனும் பெயரில் திரைவடிவில் வந்தது) , ‘எரியும் பட்டத்தரசி’ போன்ற நாவல்களை எழுதிய எழுத்தாளருமான மு.சந்திரகுமார் (ஆட்டோ சந்திரன்).

வயிற்றிலிருந்து வெளியே வரும் சிசுவை அவர் தன் கைகளில் ஏந்தி நிற்கும் வீடியோக்கள் தற்போது உலகெங்கும் வைரலாகி வரும் நிலையில், ‘இந்து தமிழ் திசை’க்கு அவர் அளித்த பேட்டி:

செயற்கரிய செயலைச் செய்திருக்கிறீங்க, வாழ்த்துக்கள்...
இப்பத்தான் நண்பர்கள்கிட்ட இதைப் பற்றிப் பேசிட்டு இருந்தேன். இது அவ்வளவு பெரிய விஷயமாவே தெரியலை. ஆனா, ஏன் உலகம் இப்படி கொண்டாடுதுன்னு நண்பர்கள்கிட்ட கேட்டேன்.

இதுக்கு முன்பு ஏதும் பிரசவம் பார்த்திருக்கீ்ங்களா?
என் ஆட்டோவுல 1990-ல் ஒரு சுகப்பிரசவம் நடந்திருக்கு. அப்ப ஒரு மூதாட்டியும் கூட இருந்தாங்க. அந்தம்மா சொல்லிக் கொடுத்ததை செஞ்சேன். குழந்தை தலை வெளியே வந்ததெல்லாம் பார்த்தேன். அதை ‘அழகு’ன்னு கதையா எழுதினேன். அது அப்ப சரஸ்வதி ராமசாமி அறக்கட்டளையின் மூலமா சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தவிர, விபத்துல அடிபட்ட பலரைப் பார்த்திருக்கேன். கை கால் அடிபட்டவங்க, ரயில்ல அடிபட்டு இறந்தவங்க, தலையில்லாத முண்டம் எல்லாம் கொண்டு போய் புதைச்சுட்டு வந்திருக்கேன். அதனால ரத்தமெல்லாம் என்னை ஒண்ணும் பண்ணாது. போன வாரம்கூட குறைப் பிரசவத்துல பிறந்து இறந்த குழந்தையப் புதைக்கக் கூப்பிட்டாங்க. போனேன். அதுக்கு வரமுள்ளு உடைச்சு காது குத்தி, பால் நெய் குழியில ஊத்தி, சீர் சடங்கு எல்லாம் செஞ்சது நான்தான்.

ஒடிசா பெண் பற்றிய தகவல் எப்படி உங்ககிட்ட வந்தது?
என் வீட்டுப் பக்கத்துலதான் கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸ். தோழர் பழனிசாமி என்னை போனில் அழைத்து, “பக்கத்துல உள்ள புறம்போக்கு நிலத்துல தங்கியிருந்த பெண்ணுக்குப் பிரசவ வலி. கூட்டீட்டு வர்ற வழியிலயே பனிக்குடம் உடைஞ்சுடுச்சு. ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணியும் இன்னும் வரலை. நீ ஆட்டோ எடுத்துட்டு வா”ன்னார். ரெண்டு நிமிஷத்துல அங்கே போயிட்டேன்.

அதுக்குள்ள அந்தப் பெண்ணைக் கட்சி ஆபீஸ் முன்னாடி வாசல்லயே படுக்க வச்சுட்டாங்க. நான், “யாராச்சும் உதவி பண்ணுங்க”ன்னு கேட்டேன். யாரும் கிட்டப் போகலை. அப்புறம் நானே அந்தப் பெண்ணோட கால்மாட்டுல உக்காந்தேன். பொண்ணு கூச்சத்துல துணிய மூட, நான் இந்தியில அதுகிட்ட துணிய விடச் சொன்னேன். கொஞ்ச நேரத்துல எந்தச் சிரமமும் இல்லாம குழந்தைய கையில ஏந்தீட்டேன்.

அந்த இடத்துல பெண்கள் இருந்திருப்பாங்களே. ஒருத்தரும் உதவிக்கு வரலையா?
நிறைய பெண்கள் இருந்தாங்கதான். “என்ன இப்படி நிக்கிறீங்க... பொண்ணைப் புடிங்க. குழந்தைய எடுங்க”ன்னு சொன்னேன். யாரும் பேசலை. அத்தனை பேரும் உறைஞ்சுபோய் நின்னிருந்தாங்க. ஆம்புலன்ஸ், டாக்டர் வந்து தொப்புள் கொடி அறுத்து ‘கிளிப்’ போட்டு தாயையும் சேயையும் அனுப்பிய பிறகு “ஏன் இப்படி இருக்கீங்க... அவசர ஆத்திரத்துக்கு உதவ மாட்டீங்களா?”ன்னு அவங்களைக் கேட்டேன்.

அதுக்குத் தெளிவா ஒரு பதில் சொன்னாங்க. “நாங்க ரெண்டு மூணு குழந்தைகள் பெத்திருக்கலாம். ஆனா, எங்களையே அரை மயக்கத்துலதான் ஆஸ்பத்திரிக்குள்ளே கொண்டுபோனாங்க. அரை மயக்கத்துல வெளியே வந்தோம். உள்ளே என்ன நடந்ததுன்னு எங்களுக்கே தெரியாது. புள்ளை பொறந்ததுன்னு காட்டீனாங்க. அவ்வளவுதான். இப்படி இவ்வளவு ரத்தமா இருந்துதுன்னா நாங்க எப்படி கிட்ட வருவோம்?”னாங்க.

அதுல ஒரு எழுபது வயசு மூதாட்டியும் இருந்தாங்க. “ஏம்மா உன் வயசுக்கு எத்தனை பார்த்திருப்பே... இதுக்குக் கூடவா வர முடியாது?”ன்னு கேட்டேன். “நானெல்லாம் சாளரத்துல கயித்தைக் கட்டி அதைப் புடிச்சுகிட்டு நின்னுட்டு குழந்தை பெத்தவ. ஆனா, அடுத்தவ குழந்தை பெத்ததைப் பார்க்கலையே”ன்னு அவங்க சொன்னாங்க.

ஆக, கடந்த 30 வருஷமா பாரம்பரியமாக மகள், மகள் வழிப் பேத்தின்னு சக பெண்களுக்குப் பெண்கள் கொடுக்க வேண்டிய பேரறிவு கொடுக்கப்படாமல் இருக்கு. பெரிய இடைவெளி விழுந்திருக்கு. பெண்கள் தங்கள் உடல் குறித்தும் மிகவும் அந்நியப்பட்டுட்டாங்க. அவங்களுக்கு என்ன நடக்குதுன்னு அவங்களே தெரிஞ்சுக்காம இருக்காங்க. அதனாலதான் அவங்களால ஆபத்து காலத்துல உதவி செய்ய முடியலை.

தொப்புள் கொடி அறுத்தது யாரு? டாக்டரே வந்துட்டாங்களா?
அது ரொம்ப ஜாக்கிரதையா பண்ண வேண்டிய வேலை. தொப்புள் குழாயை நசுக்கிட்டு குழந்தையின் வயித்தைப் பார்த்து நசுக்கீட்டு வரணும். ஏன்னா அதுல குழந்தைக்கான உயிர்ச்சத்து இருக்கும். தொப்புள் கொடியை அறுக்க யாராச்சும் கத்தி கொண்டுவாங்கன்னு கேட்டுட்டு இருந்தேன். இது எல்லாம் பத்து நிமிஷம்தான். அதுக்குள்ளே ஆம்புலன்ஸ் வந்தது. டாக்டரும் வந்தார். ரெண்டு பக்கமும் கிளிப் போட்டார். கட் பண்ணிட்டார்.

இந்த ஊரடங்கு காலத்துலயும் சேவை செய்றீங்களே எப்படி?
யாரும் வரலைன்னா நம்பிக்கையோட என்னைக் கூப்பிடறாங்க. அவங்களுக்காக சேவை செய்ய நான் உடனே ஓடறேன். தினமும் சாயங்காலம் நேரம் 2 கிலோ அரிசி, 50 ரூபாய்க்குக் கோழிக் கறி போட்டு சமைச்சு தெரு நாய்களுக்குச் சோறு போட்டுட்டிருக்கேன். இந்த ஊரடங்கு காலத்துல மூணு மரணங்களைப் பார்த்தாச்சு. ஒண்ணு அந்தக் குழந்தை. அப்புறம் 70 வயசு ஆட்டோ ஓட்டுநரோட மரணம். அவரோட பொண்ணு தனியா நின்னுது. 3-4 பேர்தான் இருந்தாங்க. பயப்படல. போனோம். மின் மயானத்துல அடக்கம் பண்ணினோம். காமாட்சிபுரத்துல 95 வயசு ஹோமியோபதி டாக்டர். அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் இறந்துட்டார். போன் பண்ணினாங்க. போய் இறுதி அஞ்சலி செலுத்திட்டுத்தான் வந்தேன்.

நீங்க பிரசவம் பார்த்ததைப் பற்றி ஃபேஸ்புக்ல உங்க பொண்ணு எழுதிய பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கே..?
தகவல் கேள்விப்பட்டதும் எம் பொண்ணு ஜீவாவுக்கு போன் பண்ணீட்டேன். ஏன்னா இந்த டைம்ல யாரும் உதவிக்கு வரமாட்டாங்க. அடுத்த வீட்டுப் பொண்ணுகளைக் கூப்பிடறதும் தப்பு. அதுதான் அவளுக்கு போன் பண்ணினேன். அவளும் வந்துட்டா. குழந்தைய முதல்ல ரத்தத்தோடு கையில வாங்கினப்போ என் பொண்ணு முகத்துல அவ்ளோ சந்தோஷம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x