Published : 16 Apr 2020 06:30 PM
Last Updated : 16 Apr 2020 06:30 PM
இன்று தொலைக்காட்சிகளில் கூட இப்படிப்பட்ட யோசனைகளைச் செயல்படுத்தி நிகழ்ச்சிகள் அமைந்ததில்லை என்று கூறிவிடலாம். அப்படியொரு அபூர்வ நிகழ்ச்சி 'இசையும் கதையும்' என்ற நிகழ்ச்சி. அது மாலை நேரங்களில் ஒலிக்கும். அனேகமாக அது ஒரு வாராந்திர நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். சரா இமானுவேல் என்பவர் தொகுத்து வழங்குவார். தொகுத்து வழங்குவார் என்பதை விட நடித்து வழங்குவார் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு கதையை எழுதி வாசிப்பார். அதன் சூழலுக்கேற்ற பாடல்கள் இடையிடையே ஒலிக்கும். அது வேடிக்கை வினோதக் கதையாக இருக்காது. ஆழமான சோகமான துயரமான வகையில் இருக்கும். கதையை வாசிக்கும்போது நவரசங்களையும் காட்டி வாசிப்பார். அந்தக் கதைகளைக் கேட்டு உருகிக் கரைந்திருக்கிறேன். என் சின்னம்மா வானொலிப் பெட்டியின் அருகே நின்றுகொண்டு இந்தக் கதையைக் கேட்டுத் தாரை தாரையாகக் கண்ணீர் விடுவார். முப்பது நிமிட நேரத்தில் காதுகள் வழியே சிவாஜியை உணர வைப்பார் சரா இமானுவேல்.
'மலர்ந்தும் மலராதவை' என்றொரு நிகழ்ச்சி வரும். பாடல் ஒலிப்பதிவு செய்து படத்தில் இடம்பெறாத பாடல்கள் இந்தத் தலைப்பில் ஒலிபரப்பாகும். எப்படி இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுகிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அதேபோல் 'ஜோடி மாற்றம் 'என்றொரு நிகழ்ச்சி. ஒரு பாடகர் அல்லது பாடகி மற்ற பாடகர் அல்லது பாடகியோடு இணைந்து பாடிய பாடல்களின் அணிவகுப்பு அது.
'இன்றைய நேயர்' என்றொரு பகுதியில் தினமும் ஒரு நட்சத்திர நேயரை அழைத்து அவருடன் கலந்துரையாடி அவருக்குப் பிடித்த பாடல்களைப் போடுவார்கள். வானொலியைத் தொடர்ந்து கேட்கும் நேயர்களுக்கான கெளரவம் அது.
திரைப்படப் பாடல்களை மட்டும் வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும்? அத்தனை பரிமாணங்களையும் இலங்கை வானொலி எங்களுக்குத் தரிசிக்கக் கொடுத்தது. எங்கள் ரசனையை விரிவு செய்து விசாலமாக்கியது.
சினிமா பாட்டை வைத்துக்கொண்டு 'குறுக்கெழுத்து போட்டி' என்று யோசிக்க முடியுமா? அவர்கள் யோசித்தார்கள். செய்தார்கள். குறுக்கெழுத்துப் போட்டி நடத்தினார்கள்.
அந்த வயதில் முதலில் எனக்குப் புரியவில்லை. 'இடமிருந்து வலம், மேலிருந்து கீழ் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். என்னடா இது ? என்று நினைப்பேன். ஆரம்பத்தில் எனக்குப் புரியவில்லை. உள்ளே நுழைந்து பார்த்தபோதுதான் புரிந்தது. தாளில் கட்டங்கள் போட்டுக் கொண்டு கவனிக்க வேண்டும். விடைக்கான குறிப்புகளாகப் பாடல்களை ஒலிபரப்புவார்கள். அதிலிருந்து விடைகளைக் கண்டுபிடித்து எழுத வேண்டும். இதைச் சில பாமரர்கள் 'என்ன இடமிருந்து வலம் மேலிருந்து கீழ் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்' என்று புரியாமல் நினைத்து இருந்தாலும் இடையில் ஒலிக்கும் பாடல்களுக்காக ரசிப்பார்கள். வானொலியில் விதவிதமான சோதனை முயற்சிகளைச் செய்து வெற்றி கண்டார்கள்.
விளையாட்டு நிகழ்ச்சிகளை (Sports ) ஒருவர் பரபரப்பாக வழங்குவார். அவர் பெயர் எஸ்.எழில்வேந்தன்.
ஒரு காலத்தில் மனதில் பதிந்தவை நிகழ்ச்சிகளின் பெயர்கள் மட்டுமல்ல ஒலிக்கும் விளம்பரங்களும் அப்படியே மனதில் பதிந்திருக்கும். ராணி சந்தன சோப், இந்தியன் வங்கி, உமா கோல்டு ஹவுஸ், நுலம்புத் தொல்லையா?, விவா, ஹார்லிக்ஸ், வுட்வார்ட்ஸ் க்ரைப் வாட்டர் போன்றவை. 'உங்கள் விருப்பம்' நிகழ்ச்சியில் இடம்பெறும். நட்சத்திர வாசகர்களாக மட்டக்களப்பு மங்களா, தங்களா, தேவிபுரம் விமலா, கமலா என்ற நேயர்கள் பெயர்கள்கூட ஞாபகமிருக்கிறது.
ஒரு நிகழ்ச்சி முடிந்து அடுத்த நிகழ்ச்சி தொடங்கும்போது ஒரு அறிவிப்பாளர் விடைபெற்றுக்கொண்டு போகும்போதும் அடுத்துப் பொறுப்பேற்பவர் வரும்போதும் அதைச் சொல்லிவிட்டுத்தான் விடைபெற்றுச் செல்வார்கள். அது நமக்கு Live - ஆன நேரலையாக உணரவைக்கும். நேரடி அனுபவத்தைத் தரும். இந்த இடத்தில்தான் நமது வானொலிகள் ஏன் பெரிதாகக் கவராமல் போய்விட்டன என்ற கேள்வி எனக்கு எழுந்தது.
அருள்செல்வன்.
தொடர்புக்கு: arulselvanrk@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT