Published : 16 Apr 2020 03:58 PM
Last Updated : 16 Apr 2020 03:58 PM
சில கவிதைப் புத்தகங்கள் வாசித்து முடித்த பிறகும் நம்மை மீண்டும் மீண்டும் வாசிக்க அழைத்துக்கொண்டே இருக்கும். புதிதாக புத்தகம் வாங்கியிருக்கும் சிறுவன் அந்தப் புத்தகத்தின் வாசனையை அடிக்கடி நுகர்ந்து பார்த்து மகிழ்வது மாதிரி… நேற்று நான் வாசித்த ஒரு புத்தகம் எனக்குள் ஆனந்தத் திருவிழா நடத்தின.
தோழர் கோ.பாரதிமோகன் எழுதியிருக்கும் ‘காதலின் மீது மோதிக்கொண்டேன்’என்கிற கவிதைத் தொகுப்புதான் அது.
இதற்கு முன்னால் ‘மவுனத்தின் சிறகடிப்பு’என்கிற இவரது இதற்கு முந்தைய கவிதைப் புத்தகமும் - தமிழ் இலக்கிய உலகில் பரவலான கவனத்தைப் பெற்ற பெருமைமிகு படைப்பாகும்.
‘காதலின் மீது மோதுவது இனிமையான விபத்து. நாம் எதன் மீதாவது மோதினால் காயம் உண்டாகும். காதலின் மீது மோதினால் கவிதை உண்டாகும். பாரதிமோகனின் காயங்கள் ரோஜாவைப் போல அழகானவை. மணம் வீசக்கூடியவை’ என்கிற கவிக்கோ அப்துல் ரகுமானின் அழகான அணிந்துரையுடன்இப்புத்தகத்தில் ஆரம்பிக்கிறதுகவிதைகளின் திருவிழா வாசம்!
‘காதல் ஓர் அழகான காயம்
வாழ்வின் கல்லறை நிமிடங்களில்கூட
அதன் தழும்புகளைத்
தடவிப் பார்ப்பது சுகமானது’
என்கிற கவிதையில் வெய்யிலின் நிழல் யாத்திரையைத் தொடங்குகிறார் பாரதிமோகன்.
‘உன்னைப் பார்ப்பதும்
உன்னைப் பார்க்காமல் இருப்பதும்
கண்களுக்கு சாபம்’
- என்கிற கவிதையில் பட்டுத்தெறிப்பது புன்னகைத் தண்டனையல்லவா?!
பிளாங்க் செக் ஒன்றை நீட்டி, எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் இதில் நிரப்பிக்கொள்ளுங்கள் என்கிற செல்வந்த மனநிலையோடு… நிரந்தர இடைவெளியை லாவகமாக வாசிப்பவனின் மனசுக்கு கொடுத்துவிட்டு… அந்த இடைவெளியை நிரப்பிக்கொள்ளும் சுதந்திரத்தையும் வாசகருக்குக் கொடுக்கிற கவிதைகளை இந்தத் தொகுப்பு முழுவதும் வாரித் தெளித்திருக்கிறார் தோழர் பாரதிமோகன்.
‘வண்ணத்துப்பூச்சியைத்
துரத்தி வந்தேன்
உன்னைப் பிடித்துவிட்டேன்’
- என்கிறார் ஒரு கவிதையில்.
தம்பூரா ஓசை மிதக்க… காற்றில் சரிகமபதநிசவைத் தூவிச் செல்லும் கவிதை இது. இக்கவிதையை வாசித்துவிட்டு சட்டென்று மூளையைத் துடைத்துக்கொண்டு அடுத்த கவிதைக்குள் புகுந்துவிட முடியவில்லை. சற்று நேரம் இக்கவிதையின் வெளிச்சப் பிரகாரத்தில் அமர்ந்திருந்தேன்.
வண்ணத்துப்பூச்சியைப் பார்க்கிறபோதெல்லாம் இனிமேல் தோழர் பாரதிமோகனின் ஞாபகம் பூக்கும்.
‘நீ பருகிய
எச்சத்தைப் பருகி
பிழைக்கிறது காதல்’
இந்தக் கவிதை பகலுக்கு வெள்ளீயம் பூசுகிறது.
‘சாய்ந்து கிடக்கும் நாதஸ்வரம் மாதிரி… அந்த வீட்டு வாசலில் பன்னீர்ப்பூக்கள் உதிர்ந்து கிடந்தன’ என்று ஒரு கட்டுரையில் கவிஞர் மீரா எழுதியிருக்கிற அழகியலை இக்கவிதையில் நான் பார்க்கிறேன்.
பாரதிமோகனின் கவிதைகள் – பூக்கச் சொல்லி காம்புகளைக் கட்டாயப்படுத்துவது இல்லை. பல வண்ண ஒட்டுத்துணிகளால் தைக்கப்பட்ட பூம்பூம் மாட்டு அங்கியாகவும் இல்லை. தனித்த அடையாளத்துடன் மிளிர்கிறது.
அட்டைப் படம்தான் வெகு சுமார். அடுத்த பதிப்பில் அவசியம் மாற்ற வேண்டும்.
பாரதிமோகனின் எல்லா கவிதைகளுமே எனக்கு வாசலாகவே தெரிகிறது… சித்தன்ன வாசல்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT