Published : 15 Apr 2020 04:58 PM
Last Updated : 15 Apr 2020 04:58 PM
இலங்கை வானொலியின் மற்றுமொரு மறக்க முடியாத நிகழ்ச்சி 'பாட்டுக்குப் பாட்டு'. அந்த நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. இது ஒரு போட்டி நிகழ்ச்சியாகும். பாடல் தொடங்கும் முதல் எழுத்தை பி.எஸ்.அப்துல் ஹமீத் கூற, போட்டியாளர் அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் பாடலைப் பாட வேண்டும். இது உலகம் முழுக்க அறிந்த நிகழ்ச்சியாக தொலைக்காட்சி மூலம் மறு வடிவம் பெற்றது.
பலருக்கும் பாடல் பல்லவிகள் தெரியலாம். முழுப் பாடல் தெரியாது. ஆனால் ஹமீத் ஆயிரக்கணக்கான பாடல்களை மனதில் பதிய வைத்துக்கொண்டு போட்டியாளர் பாடும்போது திணறினால் வரிகளைக் கூறி சரிசெய்வார். அவரது நினைவாற்றல் வியக்கவைக்கும். இந்த அனுபவமும் ஞானமும்தான் பிற்காலத்தில் தொலைக்காட்சியிலும் அவரை ஒளிர வைத்தது.
உமாவின் 'வினோத வேளை' என்றொரு நிகழ்ச்சி. அறிவிப்பாளர் கே எஸ் .ராஜா தொகுத்து வழங்குவார். இது மேடையில் நடக்கும் நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். பார்வையாளர்களின் ஆரவாரக் கைதட்டல் ஒலியுடன் நிகழ்ச்சி இருக்கும். போட்டியாளர், அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவுடன் தொடர்ச்சியாக இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும். ஆம் ,இல்லை என்று பதில் அளிக்கக் கூடாது.
வார்த்தைகளுக்கு இடையே ஐந்து வினாடிகள் மௌனம் சாதிக்கக் கூடாது. ஒரே வார்த்தையை மூன்று முறைக்கு மேல் கூறக்கூடாது. சுற்றிவளைத்துப் பேசக்கூடாது. இப்படிப்பட்ட நிபந்தனைகளோடு பேசவேண்டும். பார்க்க சாதாரணம் போல் தோன்றும். ஆனால், பலரும் தோற்றுப் போய் விடுவார்கள். யாராவதுதான் சாமர்த்தியமாகப் பேசி ஜெயிப்பார்கள். மிகவும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி இது. மேடையில் நடக்கும்போது அந்தக் கூட்டத்தில் பார்வையாளர்களாக நாமும் அமர்ந்து பார்த்த அனுபவத்தைத் தரும். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தனது தனித்தன்மையால் ஒளிரச் செய்பவர் கே.எஸ்.ராஜா.
தான் வழங்கும் நிகழ்ச்சிகளிலும் பார்வையாளரைப் பங்கேற்க வைக்கும் நிகழ்ச்சிகளிலும் தன் திறமையால் அதை சுவாரஸ்யப்படுத்திவிடுவார். விறுவிறுப்பான வேகமான பேச்சும், உச்சரிப்பும், உரையாடும்போது அவரது சொல்லாடலும் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தன. 'மதுரக் குரல் மன்னன்' என்று அழைக்கப்பட்டார். கே.எஸ்.ராஜா வந்துவிட்டாலே நிகழ்ச்சியில் தனது முத்திரையைப் பதிக்காமல் போகமாட்டார். அவர் தொகுத்தளிக்கும் திரைப்படம் சம்பந்தப்பட்ட 'திரைவிருந்து', தமிழ்த் திரைப்படம் சார்ந்த விளம்பரங்கள் என ஒவ்வொன்றிலும் தெரிவார். 'உங்கள் விருப்பம்' நிகழ்ச்சியில் மற்றவர்களைவிட அதிகமான நேயர்களின் பெயர்களை இடம்பெறச் செய்வார். அவ்வளவு வேகமாக வாசிப்பார்.
'பூவும் பொட்டும்' மங்கையர் மஞ்சரி பெண்கள் நிகழ்ச்சியை ராஜேஸ்வரி சண்முகம் தொகுத்து வழங்குவார். கலகலப்பாகவும் கம்பீரமாகவும் பேசுவார். அவர் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் கூட வருவார். அப்போது சிறுவர்களிடம் ‘வாங்க போங்க’ என்று மரியாதையுடன் பேசிக் கவர்வார். தமிழகத்திலிருந்த இலங்கை வானொலி ரசிகர்கள் இவரை அழைத்துப் பாராட்டு விழாவெல்லாம் அந்தக் காலத்தில் நடத்தி இருக்கிறார்கள்.
புவன லோசினி துரைராஜசிங்கம் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவார். சலங்கை கட்டிய குரல் அவருக்கு. விரைவாகவும் ரிதமாகவும் பேசுவார். அது ஓர் அழகு. பல நிகழ்ச்சிகளில் வருவார், பேசுவார், பாடுவார், நடிப்பார். அனைத்தும் செய்வார்.
அருள்செல்வன்.
தொடர்புக்கு: arulselvanrk@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT