Published : 14 Apr 2020 01:01 PM
Last Updated : 14 Apr 2020 01:01 PM
அந்த அரசு மருத்துவர், காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ள வந்த ஒரு பெண்ணைப் பற்றிச் சொன்னார். அந்தப் பெண்ணின் பெயர், முகவரி முதல் அவர் பயணம் செய்த ஊர்கள் வரை எல்லா விவரங்களையும் விசாரித்த பின்னர்தான் மருந்துகளை அந்த மருத்துவர் பரிந்துரைத்திருக்கிறார். வீட்டுக்குச் சென்றுவிட்ட பின்னரும் அந்தப் பெண், தனக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ எனும் சந்தேகத்துடனேயே இருந்திருக்கிறார்.
அந்த பயத்துடனேயே அடுத்து ஒரு தனியார் மருத்துவமனைக்கும் சென்றிருக்கிறார். தனியார் மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள், அவரிடம் இயன்றவரை பணம் கறந்துவிட்டு (இப்போதெல்லாம் கரோனா அறிகுறி என்று சொன்னாலே தனியார் மருத்துவமனைகள் பெருந்தொகையைக் கறந்து விடுகின்றனவாம்) கரோனா மையத்திற்குப் பரிந்துரைத்துவிட்டார்கள். அங்கு சென்றதும் அரசு மருத்துவரைச் சந்தித்தது, தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவந்தது என்பன போன்ற விவரங்களை அந்தப் பெண் சொல்லியிருக்கிறார்.
மறைக்கப்பட்ட உண்மைகள்
இதையடுத்து, அனைவரையும் அழைத்துப் பேசியிருக்கிறார்கள். அப்போதுதான் அதிர்ச்சிகரமான பல விஷயங்கள் தெரியவந்திருக்கின்றன. அந்தப் பெண் சென்னையில் ஐடி துறையில் பணிபுரிபவர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயம் சென்னையிலிருந்து கூட்ட நெரிசலில் ரயிலில் கோவைக்கு வந்திருக்கிறார். கிளினிக் மருத்துவரிடமோ, அரசு மருத்துவரிடமோ அதைப் பற்றி சொல்லவில்லை. அது மட்டுமல்ல, அவர்களிடம் தனது முகவரியையும் மாற்றிக் கொடுத்திருக்கிறார். தொடர்பு எண்ணாகத் தனது தாயின் செல்போன் எண்ணைக் கொடுத்திருக்கிறார்.
“ஏன் இப்படியெல்லாம் தகவல்களை மறைத்தீர்கள்?” என்று கேட்டதும், “எனக்கு கரோனா தொற்று என்று ஈஎஸ்ஐக்கு அனுப்பிடுவீங்களோன்னு பயந்துட்டு சொல்லலை” என்றிருக்கிறார். இப்போது அவர் சஸ்பெக்ட் வார்டில் அனுமதிக்கப்பட்டு, அவரின் சளி மாதிரியையும், அவர் குடும்பத்தார் சளி மாதிரியையும் எடுத்து டெஸ்ட்டுக்கு அனுப்பிவிட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்களாம் மருத்துவர்கள்.
“அந்தப் பெண்ணுக்கு நெகட்டிவ் வந்தால் நாங்கள் தப்பித்தோம். பாசிட்டிவ் வந்தால் நாங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவோம். ஹவுஸ் குவாரன்டைனில் வைக்கப்படுவோம். எங்கள் மனைவி, பிள்ளைகள், நாங்கள் சந்தித்த நண்பர்கள் எல்லோருமே பிறகு சோதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டியிருக்கலாம். என்ன செய்வது… இதைத் தவிர்க்க முடியாதே!” என வேதனைச் சிரிப்புடன் சொன்னார் அந்த அரசு மருத்துவர்.
மருந்தகங்களுக்கும் பொறுப்புணர்வு தேவை
கிளினிக் மருத்துவர் ஒருவர் சொன்ன தகவல் முக்கியமானது. “கரோனாவுக்கு முதல் அறிகுறி காய்ச்சல்தான். எனவே, காய்ச்சல் இருப்பவர்கள் மருந்துக் கடைகளுக்குச் சென்று ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கேட்டுவாங்கிப் போட்டுக்கொண்டு காய்ச்சலைத் தணித்துக்கொள்கிறார்கள். அத்துடன், மாநிலம் விட்டு மாநிலம் மட்டுமல்ல, தேசம் விட்டு தேசம்கூட வந்துவிடுகிறார்கள். அப்படி மாத்திரைகளைப் போட்டுவிட்டு வருபவர்களைச் சோதனைச் சாவடிகளில் வைத்து சோதிப்பதால் எந்தப் பயனுமில்லை. அவர்கள்தான் கரோனா பரப்பிகளாக மாறுகிறார்கள். மருந்துக் கடைகள் திறந்திருப்பதில் தவறில்லை. ஆனால், காய்ச்சல், சளிக்கு மருந்துகள் கேட்டு வருபவர்களுக்கு, மருந்தகங்களில் இருப்பவர்கள் தன்னிச்சையாக மருந்து கொடுக்கக் கூடாது. மருத்துவர்களின் பரிந்துரைப்படி மருந்துகள் கொடுப்பதுதான் நல்லது” என்று அந்தக் கிளினிக் மருத்துவர் குறிப்பிட்டார்.
மருத்துவர்களின் சிரமங்கள்
கோவை ஈஎஸ்ஐ கரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றி நிறைய எழுதலாம்.
இங்குள்ள வார்டுகளில் மூன்று ஷிப்ட் முறையில் தலா ஒரு மருத்துவரைப் பணி அமர்த்தியிருக்கிறார்கள். இவர்களின் பணி நேரம், காலை 8 முதல் மதியம் 1 மணி, மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி, இரவு 8 மணி முதல் காலை 8 மணி. இதில் பணிபுரிபவர்கள் முகக்கவசம் உட்பட முழுமையான பாதுகாப்பு உடையை அணிந்துகொண்டே வார்டுக்குள் செல்ல வேண்டும். ஷிப்ட் முடியும் வரை அவற்றைக் கழற்றக் கூடாது.
இதனால் இயற்கை உபாதைக்காக கழிப்பறைக சென்றுவருவதும் கஷ்டம். தவிர, முதல் ஷிப்ட்டில் உள்ளவருக்கு 5 மணி நேரம் பணி வழங்கப்படுகிறது. அடுத்த ஷிப்ட்டில் வருபவருக்கு 7 மணி நேரம் பணி. நள்ளிரவு ஷிப்ட்டில் பணிபுரிபவர்கள் மட்டும் 12 மணி நேரம் பணி செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, அவர்களுக்குக் கூடுதல் சிரமம் ஏற்படுகிறது.
எனவே பணி நேரத்தைக் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை என்று மாற்றித் தரச் சொல்லி மருத்துவர்கள் கேட்கிறார்கள். ஆனால், அவர்களது வேண்டுகோள் செவிசாய்க்கப்படவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் மருத்துவ சங்கத்தில் செல்வாக்கு பெற்ற மருத்துவர்களுக்கே காலை நேர ஷிப்ட் வழங்கப்படுகிறது. இரவு ஷிப்ட்டில் போடப்படுபவர்கள் பெரும்பாலும் ‘பனிஷ்மென்ட் டூட்டி’ செய்பவர்களைப் போலவே கருதப்படுகிறார்கள்.
பாரபட்சம்
கோவை கரோனா மையத்தைப் பொறுத்தவரை, இங்குள்ள 4 ஸ்டேஜ் வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்குவதற்கு ஓர் அறையும், கட்டிலும் கொடுத்திருக்கிறார்கள். பயிற்சி மருத்துவர்களுக்கான தங்கும் அறைகள்தான் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அவை அவ்வளவு பாதுகாப்பாக இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
மருத்துவக் கல்லூரிகளில் 12 துறைகள் உள்ளன. அதில் குறிப்பிட்ட ஒரே ஒரு துறை மருத்துவ நிபுணர்களைத்தான் காய்ச்சல் ஓபி வார்டில் ஒவ்வொரு வாரமும் 6 பேர் வீதம் சுழற்சி முறையில் பயன்படுத்துகிறார்கள். இத்தனைக்கும் இவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆனாலும் கரோனா மையத்தில் ஒரு ஷிப்ட்டுக்கு ஒரு மருத்துவர் வீதம், 3 மருத்துவர்கள் 4 ஸ்டேஜ் வார்டுகளுக்கு என 12 டாக்டர்கள் செல்கிறார்கள்.
“கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் சுமார் 400 மருத்துவர்களும், ஈஎஸ்ஐ மருத்துவமனையில் பணிபுரியும் 400 மருத்துவர்களுமே சுழற்சி முறையில் இப்பணிக்குச் செல்ல வேண்டும். அவர்கள் கணக்குப்படி பார்த்தால் ஒரு நாள் அப்பணிக்குச் சென்றவர்கள் அடுத்ததாக 6 மாதம் கழித்து கரோனா வார்டுக்கு வந்தால் போதும். ஆனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் பத்திருபது பேர் மட்டும் தொடர்ச்சியாகக் காய்ச்சல் ஓ.பி. பார்ப்பது எவ்வளவு கொடுமை? ஒரு கண்ணுக்கு வெண்ணெய் மறு கண்ணுக்கு சுண்ணாம்பா?” என்று குமுறுகிறார் மருத்துவர் ஒருவர்.
(தொடரும்…)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT