Published : 11 Apr 2020 02:34 PM
Last Updated : 11 Apr 2020 02:34 PM
அந்தப் பெரியவர் மனம்விட்டுப் புன்னகைத்துக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றிலும் குடும்பத்தினர் அமர்ந்து அவருடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அந்தப் பேச்சுக்கு மையம் நகைச்சுவையாக மட்டுமே இருந்ததால் அனைவரும் மனம்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர் மட்டும் புன்னகையுடன் நிறுத்தியது ஏன் என நீங்கள் யோசிக்கலாம். காரணம், அவருக்கு ஏற்பட்டிருந்த பார்க்கின்சன் நோய் (Parkinson's disease).
தசை இறுக்கங்கள், சோர்வு, மறதி, அன்றாட வேலைகளைச் செய்வதில் சிரமம் எனத் தீவிரமாகப் பாதிக்கப்பட்ட ஒருவரால் நகைச்சுவைக்கு சிறு புன்னகையைத்தான் உதிர்க்க முடியும். ஆனால், அந்த நபருக்கு அப்புன்னகையை உறுதி செய்வது உற்றார் உறவினரின் கடமை. பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடும்பமும் நட்பும் காட்டும் அன்பும் பொறுமையும்தான் அவர்களுக்கான மருந்துகளுடன் மிக முக்கியமான பக்கபலமாக இருக்கும்.
ஓவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 11-ம் தேதி சர்வதேச பார்க்கின்சன் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கரு 'ஓர் உரையாடலைத் தொடங்குங்கள்' (Start a Conversation). பார்க்கின்சனைப் பற்றி தங்கள் அன்புக்குரியவர்கள், நண்பர்கள், பராமரிப்புக் குழு மற்றும் சமூகத்துடன் வெளிப்படையாக பேசுவதை மக்கள் மத்தியில் ஊக்குவிப்பதே இந்த ஆண்டுக்கான கருவின் நோக்கம்.
பார்க்கின்சன் சில தகவல்கள்...
பார்க்கின்சன் நோய் வருவதற்கான காரணம் இதுதான் என மருத்துவ உலகில் உறுதியாக ஏதும் பட்டியிலிடப்படவில்லை. மூளையில் உள்ள நரம்பணுக்களில் ‘டோபமைன்’ (Dopamine) எனும் வேதிப்பொருள் ஒன்று சுரக்கிறது. இதை happy chemical என்கின்றனர். வயதாகும்போது நரம்பணுக்களின் எண்ணிக்கை குறையும். அப்போது ‘டோபமைன்’ சுரப்பும் குறையும். இவற்றின் விளைவாக வருவதுதான் ‘பார்க்கின்சன் நோய்’ என்பது பொதுவான விளக்கமாக உள்ளது. ஆனால், ‘டோபமைன்’ சுரப்பு 80 சதவீதம் குறைந்த பிறகே இந்த நோயின் அறிகுறிகள் வெளிப்படுகின்றன. 1817-ல் லண்டன் மருத்துவர் ஜேம்ஸ் பார்க்கின்சன் இந்த நோயை முதன்முதலில் கண்டுபிடித்தார். அதன், காரணத்தால் இந்தப் பெயரில் இந்நோய் அழைக்கப்படுகிறது.
பார்க்கின்சன் நோயை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், நோய் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தலாம். பார்க்கின்சன் நோய்க்கான மருந்துகளின் பக்கவிளைவுகள் நோயை விட அதிக பாதிப்பைத் தரக்கூடும் என்று சொல்லப்படுவதால், மருத்துவரின் சரியான வழிகாட்டுதலுடன் அவற்றை எடுத்துவர வேண்டும். ஆரம்பத்திலேயே நடைப்பயிற்சி, இயன்முறை சிகிச்சை மூலம் உடல் தசைகளின் இறுக்கத்தைக் குறைக்க வேண்டியது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
பார்க்கின்சன் நோயாளிகளுக்கான 'பரிவர்த்தன்' அமைப்பு..
பார்க்கின்சன் நோய் பற்றிய புரிதல் சமூகத்தில் பெரிய அளவில் இன்னும் எட்டப்படாத நிலையில், சென்னையைச் சேர்ந்த சுதா மெய்யப்பன், பரிவர்த்தன் என்றொரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தக் குழு பிரத்யேகமாக பார்க்கின்சன் நோயாளிகளுக்கு தார்மீக ஆதரவு அளிப்பதற்காகவே இயங்குகிறது.
பரிவர்த்தன் பற்றி சுதா மெய்யப்பன் கூறியதாவது:
''பார்க்கின்சன் நோய் வருவதற்கான காரணம் தெரியாததாலேயே அதற்கான சிகிச்சை இல்லை. ஆனால் பார்க்கின்சனோடு வாழ்வை எளிதாக்க மருந்துகள் கொடுக்கலாம். பார்க்கின்சன் நோயுடன் வாழ்வது எப்படி? தனிமையில் இருந்து விடுபடுவது எப்படி? என்பதை உணர்த்துவதற்கு உருவாக்கப்பட்டதே Parivarthan for Parkinsons Foundation- பரிவர்த்தன் ஃபார் பார்க்கின்சன் என்ற குழுவை உருவாக்கினோம். 2014-ல் இந்த அமைப்பைத் தொடங்கினோம். 10 பேருடன் இந்தக் குழுவை ஆரம்பித்தோம். ஆனால் இப்போது 200 பேர் குழுவில் உள்ளனர். சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் உறுப்பினர்கள் உள்ளனர்.
எங்கள் அமைப்பு சார்பாக மாதந்தாந்திர ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துகிறோம். சென்னையில் அண்ணாநகர், ஆர்.கே.நகரில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அந்த ஆலோசனைக் கூட்டங்களில் மருத்துவ நிபுணர்களை அழைத்துப் பேச வைக்கிறோம். சர்க்கரை நோய் நிபுணர்கள், சிறுநீரக நோய் நிபுணர்கள் என பலரையும் அழைத்துப் பேச வைக்கிறோம்.
மனநலம் சார்ந்த ஆலோசனைகளையும் வழங்குகிறோம். ஸ்பீச் தெரபி, டான்ஸ் தெரபி, ஆக்குபேஷனல் தெரபி, யோகா ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறோம். எங்கள் ஆலோசனைக் கூட்டங்களில் உறுப்பினர்கள் அவர்கள் குடும்ப நபர்கள் மட்டும்தான் பங்கேற்பர். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. இங்கே அவர்கள் நினைப்பதை வெளிப்படையாகப் பேசும் சுதந்திரம் இருக்கிறது.
எங்கள் குழுவில் 200க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். எங்களின் இப்போதைய பார்வையெல்லாம் நடுத்தர வர்க்கத்தில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கும் இதுபோன்ற ஆலோசனைகளை வழங்கி அவர்களின் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்க வேண்டும் என்பதே. நடுத்தரக் குடும்பத்தினர் கூட மாத்திரைகள் மருந்துகள் தாண்டி மற்ற தெரபிகள் மேற்கொள்ள சிரமப்படுகின்றனர்.
ஏழைகளுக்கு பார்க்கின்சன் நோயை சமாளிப்பது மிக மிக நெருக்கடியாக இருக்கும் என்பதை எங்களால் நன்றாக உணர முடிகிறது. பார்க்கின்சன் நோய் கண்டறியப்பட்டிருந்தால் எங்கள் அமைப்பைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறலாம்.
எங்களின் ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/parivarthanforparkinsonschennai/ வாயிலாக தொடர்பு கொள்ளலாம்''.
இவ்வாறு சுதா மெய்யப்பன் தெரிவித்தார்.
78 வயது அனந்தனும், 65 வயது கவுரியும்
பரிவர்த்தன் குழுவில் உறுப்பினர்களாக உள்ள இருவரின் வாழ்க்கையை அறிவோம். அனந்தனுக்கு வயது 78 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருடைய 71-வது வயதில் அவருக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவருக்கு செய்தித்தாள் வழியாக பரிவர்த்தன் பற்றியும் தெரியவந்துள்ளது.
"பார்க்கின்சன் நோயுடன் எதிர்காலம் எப்படி என்று திகைத்தபோது எனக்கு பரிவர்த்தன் ஒரு குடும்பம் போல் கைகொடுத்தது. ஸ்பீச் தெரபி, ஆக்குபேஷனல் தெரபி, யோகா, பிஸியோதெரபி என எனது அன்றாட வாழ்க்கையை நான் இனிமையாக்கிக் கொள்ள இந்த அமைப்பு வழிகாட்டியாக இருந்தது. இப்போது என்னால் எனது அன்றாட வேலைகளை யாருடைய உதவியுமின்றி செய்து கொள்ள முடிகிறது. நோய் வந்துவிட்டதே என முடங்காமல் இதுபோன்ற குழுக்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கும் ஊக்கம் கிடைக்கும். நீங்கள் ஊக்கமளிப்பவர்களாக மாறுவீர்கள்" என்று அனந்தன் ஆலோசனை கூறினார்.
லாக் டவுன் காலத்தில் பிஸியோதெரபி போன்ற தெரபிகளை மேற்கொள்வதில் சிக்கல் இருந்தாலும் கூட, பரிவர்த்தன் ஆன்லைன் மூலமாக ஒருங்கிணைக்கும் தெரபி வகுப்புகளால் பயனடைவதாகவும் அவர் கூறுகிறார்.
டிபிஎஸ் சிகிச்சையல் பயனடைந்தேந் கவுரி
சென்னையைச் சேர்ந்த கவுரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அரசுப்பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அவர் கடந்த 7 ஆண்டுகளாக பார்க்கின்சன் நோயுடன் இயல்பு வாழ்க்கையைத் தொடர்ந்து வருகிறார். தனக்கு ‘ஆழ் மூளைத் தூண்டல் சிகிச்சை’ (Deep brain stimulation - DBS) பலனளித்ததாக் கூறுகிறார். இதயத்துக்கு எப்படி பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படுகிறதோ, அதேபோல், மூளைக்குள் பொருத்தப்படும் ஒரு நவீன சிகிச்சை இது.
சிகிச்சைகளோடு, நல்ல உணவு, குடும்பத்தாரின் சகிப்புத்தன்மை, பொறுமையான தொடர் கவனிப்பு, அன்பான அரவணைப்பு ஆகியவற்றாலும் பரிவர்த்தன் அமைப்பின் ஆதரவாலும் தன்னால் இயல்பாக இருக்க முடிகிறது எனக் கூறுகிறார். எப்போதுமே தன்னைத் தானே சுறுசுறுப்பாக வைத்திருப்பது பார்க்கின்சனால் முடங்காமல் இருக்க நல்ல வழிமுறை என்ற ஆலோசனையையும் கூறுகிறார்.
சர்வதேச பார்க்கின்சன் தினத்தில் பரிவர்த்தன் அமைப்பு பார்க்கின்சன் நோயாளிகளுக்கு தனது ஆதரவுக் கரத்தை நீட்டுவதோடு நம்பிக்கையோடு இருக்குமாறு வாழ்த்துகிறது. கரோனா காலம் என்பதால் சமூக விலகலைக் கடைப்பிடித்து அன்றாட தெரபிகளை ஆன்லைனிலும் நடைப்பயிற்சியை வீட்டிற்கு உள்ளேயும், மாடிக்குச் செல்ல முடிந்தால் துணையுடன் மொட்டை மாடியிலும் மேற்கொள்ள யோசனை சொல்கிறது.
பார்க்கின்சன் மட்டுமல்ல எந்த ஒரு நோயையும் முறையான மருத்துவ சிகிச்சைகளாலும் அன்பான உறவுகளாலும் கடந்து செல்லலாம்.
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT