Published : 11 Apr 2020 01:34 PM
Last Updated : 11 Apr 2020 01:34 PM
கிளினிக் நடத்தும் மருத்துவர்கள் கரோனா காலத்தில் எதிர்கொண்டிருக்கும் சிரமங்களைப் பற்றிப் பேசி வருகிறோம்.
அடுத்தது இந்த கிளினிக் மருத்துவர்களுக்கான கரோனா பாதுகாப்பு. கரோனாவுக்கு முதல் அறிகுறியே காய்ச்சல், சளி, இருமல், தலைவலி போன்றவைதான். இப்படியான அறிகுறிகள் உள்ள நோயாளிகள் முதலில் நாடுவது தெருவுக்குத் தெரு உள்ள கிளினிக் மருத்துவர்களைத்தான். அப்படி வருபவர்கள் கரோனா வைரஸ் தொற்றுடன் இருந்தால் நிலைமை என்ன? அவசியம் இந்த மருத்துவர்களுக்கு ‘என்-95’ முகக்கவசம் வழங்கப்பட வேண்டும். ஆனால், அரசு அடையாள அட்டையே இல்லாத இவர்களுக்கு ‘என்-95’ முகக்கவசம் கிடைக்குமா?
பொதுவாகத் தனியார் மருத்துவர்களுக்கான உபகரணங்கள் ஒவ்வொரு நகரிலும் உள்ள மொத்த வியாபார மருந்துப் பொருள் அங்காடிகளிலேயே கிடைக்கின்றன. அவற்றை அந்த மொத்த வியாபாரி சென்னை மருந்து கம்பெனிகளிடமிருந்து பெறுகிறார். ஆனால், இன்றைக்கு மொத்த வியாபாரிகளிடமே ‘என்-95’ கவசம் மருந்துக்குக்கூட ஸ்டாக் இல்லை. சர்ஜிக்கல் முகக்கவசம், சாதாரண முகக்கவசம் ஆகியவற்றில் பாதுகாப்பு கிடையாது.
‘என்-95’ முகக்கவசத்தின் நுட்பமான வடிவமைப்பு
‘என்-95’ கவசம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. இது 0.3 மைக்ரான் அளவைவிட பெரிய வைரஸ் கிருமிகளைத் தடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கரோனா வைரஸின் அளவு 0.14 மைக்ரான் ஆகும். 0.3 மைக்ரானுக்கு மேலே அளவுள்ள கிருமியைத் தடுக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட ஒரு கவசம் எப்படி அதைவிட சிறிதான 0.14 மைக்ரான் அளவுள்ள கரோனா வைரஸை உள்ளே விடாமல் தடுக்க முடியும் எனும் கேள்வி எழலாம். இந்த ‘என்-95’ கவசத்தின் வடிவமைப்புதான் கரோனாவைத் தடுக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். எப்படி?
இந்தக் கவசத்தின் வெளிப்புறமுள்ள முதல் லேயர், கரோனா வைரஸை உள்ளே அனுமதித்துவிடுகிறது. அதற்கு அடுத்துள்ள லேயர் பஞ்சு போன்ற வலைப்பின்னல்களால் ஆனது. அங்கே இந்த வைரஸ் மேலும் கீழுமாக அல்லாடி ‘ஜிக்-ஜாக் மூவ்மென்ட்’ போல் அதற்கு அடுத்துள்ள லேயருக்குள் நுழைய பாடாய்ப் படுகிறது. எனவே, இந்த இடத்தில் கரோனா வடிகட்டப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது. இந்தக் கவசத்தின் இறுதியில் உள்ள 3-வது லேயருக்குள் கரோனா வரவே முடிவதில்லை.
இந்த வேலைகளைச் சாதாரண துணிக் கவசமோ, சர்ஜிக்கல் கவசமோ செய்யவே செய்யாது. கரோனா வைரஸைத் தடுக்க இவை சுத்தமாகத் தகுதியற்றவை. தனியார் கிளினிக்குகளுக்கு இந்த ‘என்-95’ முகக்கவசமே கிடைக்காத நிலையில் ஒரு மருத்துவர் தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன் அட்டென்டர், செவிலியரையும் காத்துக்கொண்டு மனிதாபிமான அடிப்படையில் எப்படிப் பணியாற்ற முடியும்?
நான்கு ‘என்-95’ கவசங்கள் தேவை
முதல் வேளையாக ‘என்-95’ முகக்கவசங்கள் வழங்கப்பட வேண்டிய இடம் இப்படியான தனியார் கிளினிக்குகள்தானே? இதுதான் கிளினிக் மருத்துவர்களின் அழுத்தமான கேள்வியாக இருக்கிறது. “இதையெல்லாம் விளக்கித்தான் ஒரு கிளினிக் மருத்துவருக்கு தலா நான்கு ‘என்-95’ கவசங்களை வழங்க வேண்டும், அதை மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கண்காணிப்பில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்” என்கிறார் கிளினிக் மருத்துவர் ஒருவர்.
“எதற்காக ஒருவருக்கு நான்கு ‘என்-95’ கவசங்கள் என நீங்கள் கேட்கலாம். கரோனா வைரஸ் இந்த முகக்கவசத்தின் முதல் லேயரின் உள்ளே தங்கிவிடுகிறது. அந்த வைரஸ் மூன்று நாட்கள் அதனுள்ளேயே உயிர் வாழும். எனவே ஒரு மருத்துவர் முதல் நாள் பயன்படுத்திய முகக்கவசத்தை அடுத்த நாள் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் வெளிப்புறம் ஒட்டிக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ், மறுபடி அதை எடுக்கும்போது, கைகள் பட்டு வாய்க்குள் மூக்குக்குள் போகும். எனவே, இப்படியான முகக்கவசங்களைத் தினம் வெயிலில் உலரப் போட வேண்டும். அப்படி பயன்படுத்தினால் அந்த முகக்கவசத்தில் உள்ள வைரஸ் கிருமி அழிந்திருக்கும்.
நான்கு நாட்களுக்குத் தலா ஒரு முகக்கவசத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். முதல் நாள் பயன்படுத்திய முகக்கவசத்தை, ஐந்தாம் நாள்தான் பயன்படுத்த வேண்டும். அதுதான் பாதுகாப்பானது. எனவேதான், நான்கு ‘என்-95’ முகக்கவசங்களைக் கேட்கிறோம்” என்றார். “இவற்றை இலவசமாகக் கூட எங்களுக்கு வழங்க வேண்டாம். விலைக்கே வாங்கிக்கொள்கிறோம். மருத்துவரின் பதிவு எண் பார்த்து கொடுத்தால் போதும்” என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
சரி, இதைவிட பாதுகாப்பான முகக்கவசம் வேறு இல்லையா?
இருக்கிறது. முகக்கவசத்தில் N, R, P என்ற வகைகள் உண்டு. N என்பது ‘Not Resistant to oil’ என்பதாகும். அதாவது இந்த வகை கவசங்கள் தண்ணீர் பட்டால் மட்டும்தான் தாங்கும். அதுவே எண்ணெய் பட்டால் தாங்காது. மொத்தமாகச் செயலிழந்து விடும். R என்பது ‘Somewhat resistant to oil’. அதாவது ஓரளவுக்கு எண்ணெய்யைத் தாங்கும் சக்தி கொண்டது. P என்பது ‘Strongly resistant to oil’. இது முழுமையாக எண்ணெய் தடுப்பு கொண்டது.
இதில் 95 என்பது, 95 சதவீதம் கிருமிகளை வடிகட்டும் ஆற்றல் கொண்டது என்பதைக் குறிக்கிறது. 99 என்று குறிப்பிடப்பட்டிருந்தால் 99 சதவீதம் கிருமிகளைத் தடுப்பது. 100 என்றிருந்தால் 100 சதவீதம் கிருமிகளைத் தடுப்பது.
போலி ‘என்-95’ முகக்கவசங்கள்கூட சந்தையில் விற்கப்படுகின்றன. அவற்றை அணிவது ஆபத்தைத்தான் விளைவிக்கும். எனவேதான் அரசாங்கத்திடமே அசல் ‘என்-95’ முகக்கவசம் கேட்கிறோம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
சரி, R, P வகை முகக்கவசங்கள் இங்கே கிடைக்காதா? வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அது அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில்தான் கிடைக்குமாம்!
கிளினிக் மருத்துவர்களின் நிலை இப்படியென்றால், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்களின் நிலை?
(தொடரும்…)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT