Published : 27 Aug 2015 11:12 AM
Last Updated : 27 Aug 2015 11:12 AM
அலுவலகத்தில் கதிரேசனுடன் பணி புரிந்தவர் மோகன். இருவரும் குடும்ப நண்பர்கள் கூட. மோகன் ஒருமுறை ஸ்கூட்டரில் செல்லும் போது விபத்துக்குள்ளானதால், அவரின் தண்டுவடம் பாதிப்படைந்து படுத்த படுக்கையாகி விட்டார். அதனால் வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டார்.
ஒருநாள் மாலை அவரை பார்க்க தனது மனைவியுடன் சென்றிருந்தார் கதிரேசன். கதவை திறந்தது மோகனின் மகள் அருணாதான் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வரனுக்காக காத்திருப்பவள்.
“வாங்க மாமா, அத்தை... அப்பா கதிர் மாமா வந் திருக்காரு” என்று உற்சாகமாக உள்ளே ஓடினாள்.
சோர்வாக கட்டிலில் படுத்திருந்த மோகன், “என் மனைவி போனப்பவே நானும் போயிருக்கணும். அருணாவுக்கும் என்னால ஒரு நல்ல வரனை அமைச்சு தர முடியாம படுத்துட்டேன்” என்றார்.
“இவர் எப்பவும் இப்படித் தான் மாமா.. கொஞ்சம் சொல்லுங்க” என்று சிரித்தவாறு காபி கொண்டு வந்தாள் அருணா.
“அப்புறம் மாமா.. அத்தை ஒரு சுற்று குண் டான மாதிரி இருக் கிறாங்க” என்று மீண்டும் சிரித்தாள் அருணா.
‘என்ன பெண் இவள்? நிலைமை புரியாமல் இப்படி இருக்கிறாள்’ என்று மன துக்குள் நினைத்துக் கொண்டார் கதிரேசன்.
சற்று நேரத்துக்கெல்லாம் அருணாவின் தம்பி அர்ஜுன் கல்லூரியில் இருந்து வந்தான். இருவரும் சத்தமாக அரட்டை அடித்து சிரித்துக் கொண்டிருந்தனர். பேச்சு தடைப்பட்டதால் மோகன், “ஏம்மா, கொஞ்சம் மெதுவா பேசக்கூடாதா?” என்றார்.
“அப்பா அர்ஜுன் செஞ்ச கூத்த கேளுங்க” என்று மீண்டும் சிரித்தாள் .
கதிரேசனுக்கு எரிச்சலாக இருந்தது. பெற்ற தகப்பன் படுத்த படுக்கையாக இருக்கிறான். இவள் கவலையே இல்லாமல் இருக்கிறாளே? இவளிடம் சொல்லி வைக்க வேண்டும் என்று நினைத்தார்.
விடைபெறும்போது வாசலில், கதிரேசன் அருணாவிடம், “சொல்றேன்னு தப்பா நினைக்கா தம்மா.. அப்பா இப்படி இருக்கும் போது கொஞ்சம் அமைதியா இருந்தா நல்ல இருக்கும்” என்றார்.
“மாமா..அப்பா ஏற்கனவே ரொம்ப நொந்து போயிருக்கார். நோயாளிங்களுக்கு முதல் மருந்தே மனசு ஆறுதல்தான். அவரை சுற்றி உட்கார்ந்து நாங்களும் சோகமாக இருந்தா அவங்க மன நிலைமை என் னாகும்? என்னதான் எங்களுக்கும் அப்பா இப்படி ஆயிட்டாரேன்னு மனசுக்குள்ள கவலை இருந்தா லும், வெளியில சந்தோஷமா இருக்கிறதா காட்டுனாத்தான் அவருக்கும் சங்கடம் இல்லாம இருக்கும்னு ஒரு நம்பிக்கை” என்று கண்ணீர் துளிர்க்கச் சொன்ன அருணா, கதிரேசனின் கண்களுக்கு ஒரு தாயாக தெரிந்தாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT