Published : 12 Jun 2015 11:25 AM
Last Updated : 12 Jun 2015 11:25 AM
‘இந்தியாவில் பணமும் பதவியும் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதி என்பது ஆமை வேகத்தில்தான் கிடைக்கும்’- இது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த கருத்து. ‘இந்தியாவில் உண்மையான குற்றவாளிகளில் தண்டிக் கப்படுகிறவர்கள் 30 சதவீதத்துக்கும் கீழ்தான்' - இது லண்டன் பி.பி.சி-யின் கருத்து. உண்மைதானா? சில வழக்குகளை அலசிப் பார்த்தால் இது உண்மைதான் என்கிற முடிவுக்குதான் வர வேண்டியிருக்கிறது.
எப்படி உண்மை?
1999.
ஏப்ரல் 29. டெல்லி. ஒரு பார். நள்ளிரவு 12.30-க்கு தன் மூன்று நண்பர் களுடன் பாருக்கு வந்தான் மனு ஷர்மா. மது கேட்டான். மது தீர்ந்து விட்டதாலும், நள்ளிரவைக் கடந்து விட்டதாலும், பாரில் பணிபுரிந்த மாடல் அழகி ஜெசிகா மது தர மறுத்தாள்.
1,000 ரூபாய் தருவதாக சொன்னான் மனு. ஜெசிகா அப்போதும் மறுக்கவே, கோபத்தின் உச்சத்தில் தன் பிஸ்டலை எடுத்தான். அவளை எச்சரிக்கும்விதமாக ஒரு முறை கூரையை நோக்கி சுட்டான். ஜெசிகா தொடர்ந்து மறுக்கவே அவளை சுட்டான். ஜெசிகா இறந்தாள். மனு ஷர்மா தன் நண்பர்களுடன் தப்பித்துச் சென்றான்.
அந்த சமயம் பாரில் இருந்த 32 பேர் இந்த சம்பவத்துக்கு சாட்சிகள். ஆனால், டெல்லி போலீஸ் இந்த வழக்கில் தீவிரம் காட்டத் தயங்கியது. ஏன்?
மனு ஷர்மா மிகப் பெரிய கோடீஸ் வரன். இரண்டு சர்க்கரை ஆலைகள் மற்றும் சாராய ஆலைகளுக்குச் சொந்த மானவன். மிக முக்கியமான அரசியல் புள்ளியான வினோத் ஷர்மாவின் மகன். வினோத் ஷர்மா ஹரியானா மாநிலத்தில் அமைச்சர்.
முதல்வரின் நண்பர். முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் ஷர்மாவின் உறவினர். இதைத் தவிர, இவர் ஒரு முன்னாள் மத்திய அமைச்சரும் ஆவார். செல்வாக்குக்குக் கேட்க வேண்டுமா?
ஆகவே, சம்பவம் நிகழ்ந்து 5 நாட்கள் வரை மனு ஷர்மாவை டெல்லி போலீஸ் தேடிக் கொண்டிருந்தது. அவனுடைய இரண்டு நண்பர்கள் மட்டும் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அலறியதும் மனு ஷர்மா கைது செய்யப்பட்டான்.
விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு அதன் எல்லா சாத்தியங்களையும் பயன்படுத்தி ஏழு வருடங்கள் இழுத்தடிக் கப்பட்டது. அரசுத் தரப்புக்கு டெல்லி போலீஸ் சரியான ஒத்துழைப்பை வழங்கவில்லை. சம்பவத்தை கண் ணால் பார்த்ததாக போலீஸில் முதலில் வாக்குமூலம் கொடுத்த 32 சாட்சிகளும் பல்டியடித்தார்கள்.
அதில் ஒரு சாட்சியான முன்ஷி என்கிற நடிகர், ‘நான் ஆங்கிலத் தில் சொன்னதை போலீஸ் ஹிந்தி யில் குறிப்பு எழுதிக் கொண்டது. எனக்கு ஹிந்தி தெரியாததால் கையெ ழுத்துப் போட்டுவிட்டேன்' என்று சொன்னார்.
ஜெசிகாவைச் சுடப் பயன் படுத்தப்பட்ட துப்பாக்கியை டெல்லி போலீஸ் கடைசிவரை கைப்பற்றவே இல்லை. துப்பாக்கி நிபுணர் சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட இரண்டு தோட்டாக்களும் ஒரே துப்பாக்கியில் இருந்து வெளிப் பட்டவை தான் என்று சொல்ல முடியாது என்று சாட்சியம் அளித்தார். ஷர்மா வின் நண்பர்களும் ஷர்மா வுக்கு ஆதரவாகவே சாட்சி யளித்தார்கள்.
இதையெல்லாம் வைத்து நீதிபதி, ‘ஷர்மாவும், அவன் நண்பர்களும் குற்றவாளிகள் இல்லை' என்று தீர்ப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்தார். தீர்ப்பில், ‘இந்த வழக்கில் டெல்லி போலீஸ் சரியான ஆதாரங்களை வழங்க வில்லை' என்றும் குறிப்பிட்டார்.
ஷர்மா விடுவிக்கப்பட்டது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத் தியது. அனைத்து ஊடகங்களும் இந்தத் தீர்ப்பைக் கண்டித்தன. மக்கள் தங்கள் எதிர்ப்பை மெழுகுவர்த்தியுடன் ஊர் வலம் நடத்தி பதிவு செய்தார்கள். அலைபேசிகளிலும், மின்னஞ்சல்களிலும் தீர்ப் பைக் கண்டித்து செய்திகள் பறந்தன.
முன்னாள் முதன்மை நீதிபதி வி.என். காரே இந்தத் தீர்ப்பைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். ‘தெஹல்கா’ செய்தி நிறுவனம் களத்தில் இறங்கியது. அமைச்சர் வினோத் ஷர்மா சாட்சிகளை விலைக்கு வாங்க பணம் கொடுத்தார் என்று ‘ஸ்டார் நியூஸ்’ தொலைக்காட்சி சேனலில் ஆதாரங்களை வெளிப்படுத்தி யது. மத்திய அரசின் அழுத்தத்தால் வினோத் ஷர்மா தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அரசுத் தரப்பு உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடந்தது. முடிவில் மனு ஷர்மாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. மேலும். கீழ்க்கோர்ட்டில் அவசரகதியில் தீர்ப்பு தந்த நீதிபதியை விமர்சனமும் செய்தது. பொய் சாட்சி சொன்னதற்காக துப்பாக்கி நிபுணர் மற்றும் நடிகர் முன்ஷி மேல் தனியாக வழக்கு தொடரவும் சிபாரிசு செய்தது.
மனு ஷர்மா உச்சநீதி மன்றத் தில் அப்பீல் செய்தான். அங்கு அவனுக்காக வாதாடினார் புகழ்மிக்க வக்கீலான ராம்ஜெத்மலானி. மீடியாவின் அழுத்தத்தால்தான் உயர்நீதி மன்றம் மாற்றி தீர்ப்பளித்திருக்கிறது என்று அவர் வாதாடினார். ஆனால், உச்சநீதிமன்றம் அதை ஒப்புக்கொள்ளா மல் உயர்நீதி மன்றத்தின் தண்டனைத் தீர்ப்பை உறுதி செய்தது. மனு ஷர்மா ஜெயிலில் அடைக்கப்பட்டான்.
மனு ஷர்மா ஜெயிலில் இருந்தாலும் அடிக்கடி பெயிலில் வந்தான். ஒருமுறை பெயில் கேட்கக் காரணமாக தன் பாட்டி இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டான். உண்மையில் அவன் பாட்டி ஒரு வருடம் முன்பே இறந்துவிட்டார்.
இன்னொரு முறை தன் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தான் அருகில் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் பெயில் கோரியிருந் தான். அடுத்த நாள் பார்த்தால் அவன் அம்மா தொலைக்காட்சியில் பெண்கள் கிரிக்கெட் பற்றி பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
இன்னொரு முறை தன் படிப்புக்காக பரீட்சை எழுத வேண் டும் என்று விண்ணப்பித்திருந்தான். ஆனால், அவன் பரோலில் வந்து இரவு விடுதிகளில் டிஸ்கொதே ஆடிக் கொண்டிருந்தான். 2015, ஏப்ரலில் பரோலில் வெளியே வந்து திருமணமும் செய்துகொண்டான்.
வினோத் ஷர்மா திகார் ஜெயிலுக்கு அருகில் ஒரு நட்சத்திர ஹோட்டலை விலைக்கு வாங்கினார். அந்த ஹோட்ட லில் திகார் ஜெயிலின் வார்டனின் மக னுக்கு ஒரு முக்கிய பதவி தரப்பட்டிருப் பதாகவும், அந்த ஹோட்டலில் மனு ஷர்மா அடிக்கடி தென்படுவதாகவும் சில பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. இந்தக் கொலை சம்பவத்தை மையமாக வைத்து ‘நோ ஒன் கில்ட் ஜெசிகா' என்று ஒரு ஹிந்தி திரைப்படம் வெளிவந்தது.
டெல்லியில் 1996-ம் வருடம் பிரியதர் ஷினி என்கிற சட்டக் கல்லூரி மாணவி சக மாணவன் குமார்சிங் என்பவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். வழக்கு வழக் கம்போல நத்தை வேகத்தில் நகர்ந்தது. காரணம், குமார் சிங்கின் தந்தை முதலில் பாண்டிச்சேரி காவல்துறையில் ஐ.ஜியாக பணிபுரிந்தவர். வழக்கு நடந்தபோது அவர் டெல்லி போலீஸில் துணை கமிஷனர்.
10 வருடங்கள் கழித்து 2006-ல் விசா ரணை கோர்ட் நீதிபதி, குமார் சிங்கை குற்றமற்றவர் என்ற விடுதலை செய்தார். தன் தீர்ப்பில், அவர், 'டெல்லி போலீஸ் சரிவர இந்த வழக்கை நடத்தவில்லை என்றும், முக்கியமான சாட்சியை ஆஜர் படுத்தவில்லை என்றும், டி.என்.ஏ. சோதனை முடிவுகளில் குழப்பம் செய்த தாகவும், குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஆதரவாக நடந்துகொண்டது என்றும் குறிப்பிட்டு, குமார் சிங்தான் இந்தக் கொலையை செய்தார் என்று தெரிந் தாலும், சந்தேகத்தின் பலனை அளித்து அவரை விடுதலை செய்ய வேண்டி யிருக்கிறது' என்றார்.
பிரியதர்ஷினியின் வயதான தந்தை தீர்ப்பைக் கண்டித்து, எல்லா தொலைக் காட்சி சேனல்களிலும் பேசினார்.பத்திரிகைகளின் ஆதரவு அவருக்குப் பெருகியது. மீடியாவும் மக்களும் தந்த அழுத்தத்தால் வழக்கு உயர்நீதி மன்றத்திற்குச் சென்றது.
நான்கு வருடங்கள் விசாரிக்கப்பட்டு 2010-ம் வருடம் குமார் சிங்குக்கு தூக்கு தண்டனை அளித்தது. குமார் சிங் உச்சநீதி மன்றத்துக்குச் சென்று அதை ஆயுள் தண்டனையாக மாற்றிக்கொண்டான். தற் போது அவன் ஜெயிலில் இருந்தாலும் அடிக்கடி பரோல் வழங்கப்படுகிறது. வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே அவன் திருமணம் செய்து கொண்டான். வக்கீலாகவும் பணியாற்றிக் கொண்டிருந் தான்.
இவை இரண்டும் சாம்பிள்கள்தான். இதைப் போல பண பலம், பதவி பலம் மிக்கவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சில சமயம் தாமதமான நீதியும், பல சமயங்களில் அந்த தாமதமான நீதிகூட கிடைக்காமலும் போயிருப்பதே உண்மை.
- வழக்குகள் தொடரும்…
கதையில் உத்தி
நான் எழுதிய ஒரு கதையில், வில்லன் ஒரு விமானத்தை கடத்தி வைத்துக்கொண்டு மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பான். அதிரடிப் படை உயர் அதிகாரி யோசிப்பார். வீரர்களில் அந்த பயங்கரவாதிகளின் உடலமைப்புடன் கிட்டத்தட்ட பொருந்தும் மூன்று வீரர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு மிகப்பெரிய ஒப்பனைக் கலைஞரை அழைத்து பயங்கரவாதிகளின் முக அமைப்பைப் போல ப்ராஸ்தெடிக் மேக்கப் போடு (தசாவதாரம் போல) அவர்களை விடுதலை செய்வதாக அழைத்துச் செல்வார். அந்த மூன்று வீரர்களும் விமானத்தில் ஏறியதும் அங்குள்ள பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று பயணிகளைக் காப்பாற்றுவார்கள்.
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள: pkpchennai@yahoo.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT