Published : 08 Apr 2020 11:06 AM
Last Updated : 08 Apr 2020 11:06 AM
கண்ணுக்குத் தெரியாத வைரஸ் பரவி மனித உயிர்களைக் காவு வாங்க ஆரம்பித்தால் அதற்கு மனிதனிடம் இருக்கும் முதன்மையான எதிர்வினை… அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி அதன் பரவலைக் கட்டுப்படுத்துவதுதான். தனிமைப்படுத்துவதே (குவாரன்டைன்) வைரஸுக்கு எதிரான போராட்டத்தின் முக்கியப் படிநிலை என்பதே வல்லுநர்களின் கருத்து.
சில வாரங்களுக்கு முன்பு வரை ‘குவாரன்டைன்’ என்ற வார்த்தைக்கு அறிமுகமில்லாத நம்மூர் மக்கள் கூட தற்போது அதன் அவசியத்தைப் புரிந்து கொண்டு கச்சிதமாக அதனைக் கடைப்பிடித்து வருகிறார்கள். எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை இருக்கும் என்ற விதியின் அடிப்படையில் வைரஸ் பரவலால் தனிமைப்படுத்தப்படுவதே மேலும் ஆபத்துகளுக்கு வழிவகை செய்தால் என்னவாகும் என்ற அசம்பாவிதமான கேள்வியின் வெளிப்பாடே 2007-ம் ஆண்டு வெளிவந்த ‘குவாரன்டைன்’ திரைப்படம்.
‘டெவில்’, ‘அஸ் அபவ், சோ பிலோ’ போன்ற ஹாரர் படங்களுக்குப் பெயர்போன ஜான் எரிக் டவ்டெல் இயக்கிய ‘குவாரன்டைன்’ படம் ‘ரெக்’ (Rec) என்ற ஸ்பானிஷ் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.
ரத்தம் தெறிக்கும் ரேபிஸ்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தீயணைப்பு வீரர்களின் இரவுப் பணிகளை ஆவணப்படுத்த தொலைக்காட்சி நிருபரான ஏஞ்சலா தன் கேமரா மேன் ஸ்காட்-உடன் வந்திருப்பார். தீயணைப்புத்துறையின் செயல்பாடுகளை விவரிப்பதில்தான் படத்தின் கதை தொடங்கும். பெரும்பாலும் இரவு நேரங்களில் தீயணைப்புத்துறைக்கு வரும் அழைப்புகள் மருத்துவ ரீதியான உதவிகளாகவே இருக்கும் என்று தீயணைப்புத்துறை நிலைய தலைமை அதிகாரி தெரிவிக்கிறார். அன்று இரவு ஏதேனும் அவசர அழைப்பு வந்தால் தீயணைப்பு வீரர்களுடன் பயணித்து அவர்களின் சாகசங்களை ஆவணப்படுத்தலாம் என்பதே ஏஞ்சலா மற்றும் ஸ்காட்டின் திட்டம். அவர்கள் எதிர்பார்த்தது போலவே அழைப்பு வரும்.
அதுவும் ஒரு மருத்துவ ரீதியான அழைப்புதான் என்று எதிர்பார்த்துத் தீயணைப்பு வீரர்களுடன் இருவரும் செல்லுவார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தனியாக வசிக்கும் மூதாட்டியின் அறையிலிருந்து மரண ஓலம் கேட்டிருக்கும். அதனைக் கேட்ட அக்கம் பக்கத்து வீட்டார் அவசர எண்ணிற்குத் தொடர்பு கொண்டிருப்பார்கள். தீயணைப்பு வீரர்களுக்கு முன்பே இரண்டு போலீஸார் அங்கே வந்திருப்பார்கள். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கதவை உடைத்துத் திறந்து உள்ளே சென்று பார்த்தால்… அந்த மூதாட்டி ரத்தமும் எச்சிலும் வழியும் வாயுடன் நின்று கொண்டிருப்பார். அசாதாரணமான உடல் மொழியுடன் அவர் நடந்து கொள்வார். அவரை மீட்கும் முயற்சியில் ஒரு போலீஸ்காரருக்கும் ஒரு தீயணைப்பு வீரருக்கும் படுகாயம் ஏற்பட்டுவிடும்.
அந்த கட்டிடத்தைவிட்டு உடனே வெளியே வந்து மருத்துவமனை செல்ல முடிவெடுப்பார்கள். ஆனால், அந்தக் கட்டிடம் வெளிப்புறமாக சீல் வைக்கப்பட்டுவிடும். ராணுவமும், நோய்த் தடுப்பு மைய ஆட்களும் அந்தக் கட்டிடத்தைச் சுற்றி வளைத்துவிடுவார்கள். பிறகுதான், புதிய விதமான வீரியம் மிகுந்த ரேபிஸ் வைரஸ் தொற்று அந்தக் கட்டிடத்தில் சிலருக்கு ஏற்பட்டுள்ளது என்பது கட்டிடத்துக்குள் இருப்பவர்களுக்குத் தெரியவரும். அந்த மூதாட்டி அப்படி ஆனதுக்குக் காரணமும் அதுதான்.
இந்த வைரஸை எக்காரணம் கொண்டும் அந்தக் கட்டிடத்தைவிட்டு வெளியே வரவிடக் கூடாது என்று அரசாங்கம் முடிவெடுத்துவிடுகிறது. தடைகளை மீறிக் கட்டிடத்தை விட்டு வெளியே வருவோரைச் சுட்டுக் கொல்ல ராணுவம் தயாராக இருக்கும். இதற்கிடையில் கட்டிடத்துக்குள் தனிமைப்படுத்தப் பட்ட நபர்கள் ஒவ்வொருவராக வைரஸ் தொற்றுக்கு ஆளாவார்கள். வைரஸ் தொற்று ஏற்பட்ட சில மணித் துளிகளில் சுயக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருப்பவரைத் தாக்க ஆரம்பித்துவிடுவார்கள். உள்ளே பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்தும், வெளியே இருக்கும் ராணுவத்திடம் இருந்தும் ஏஞ்சலா, ஸ்காட் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தப்பினார்களா இல்லையா என்று திடுக்கிட வைக்கும் காட்சிகளுடன் கதை சொல்லப்பட்டிருக்கும்.
இப்படத்தின் முக்கிய அம்சமே இதன் ஒளிப்பதிவுதான். தீயணைப்புத் துறையை ஆவணப்படுத்தச் செல்லும் ஸ்காட்டின் கேமரா வழியாகவே முழு திரைப்படத்தின் காட்சிகளும் சொல்லப்பட்டிருக்கும். இந்த முறை ஒளிப்பதிவை ‘Found Footage’ என்று அழைப்பார்கள். பெரும்பாலும் ஹாரர் மற்றும் த்ரில்லர் வகை படங்களுக்கு இம்முறை பயன்படுத்தப்படும். சிறிய இடங்களில் நடக்கும் பரபரப்பான காட்சிகளின் அழுத்தம் இவ்வகை ஒளிப்பதிவின் மூலம் சிறப்பாக வெளிப்படும். பெரும் மெனக்கெடல் தேவைப்படும் இந்த முறையைச் சிறப்பாக ‘குவாரன்டைன்’ படத்தில் செய்திருப்பார்கள்.
விமான நிலையத்தில் இரண்டாம் பாகம்
‘குவாரன்டைன்’ திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு ‘குவாரன்டைன் 2: டெர்மினல்’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆனால் இது ‘Found Footage’ முறையில் எடுக்கப்படாமல் வழக்கமான ஒளிப்பதிவின் மூலம் எடுக்கப்பட்டது. முதல் பகுதியின் கதையைப் போலவே இருந்ததாலும் தனித்துவமான அம்சங்கள் இல்லாததாலும் இரண்டாம் பாகம் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு எடுபடாமல் போனது.
மூலக்கதையான ‘ரெக்’ என்ற ஸ்பானிஷ் படத்தை முதலிலும் பிறகு ‘குவாரன்டைன்’ படத்தையும் இறுதியாக ‘குவாரன்டைன் 2 : டெர்மினல்’ படத்தையும் பார்த்தால் உங்கள் குவாரன்டைன் தினம் சுவாரசியமாகக் கழியும் என்பது உறுதி.
- க.விக்னேஷ்வரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT