Published : 04 Apr 2020 04:10 PM
Last Updated : 04 Apr 2020 04:10 PM

வைரஸ் படங்கள் 7: தி ஃப்ளூ- பரவும் பறவைக் காய்ச்சல்

தென்கொரிய சினிமாக்களுக்கு உலகளவில் ரசிகர்கள் கூட்டம் பெருகி வருகிறது. ஏனைய நாடுகள் ஹாலிவுட் சினிமாவை அப்பட்டமாகக் காப்பி அடித்துக் கொண்டிருக்கும் போது, ஹாலிவுட்டின் சில அம்சங்களை மட்டும் சுவீகரித்துக் கொண்டு தங்கள் வாழ்வியல் சார்ந்த விஷயங்களைத் திரைப்படத்தின் வாயிலாகப் பேசுவதன் மூலம் உலகத்தின் பார்வையைத் தங்கள் பக்கம் திருப்ப முடியும் என்பதை தென்கொரிய சினிமா துறையினர் நிரூபித்துள்ளனர்.

கடந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சாதனைப் படைத்த ‘பாராஸைட்’ படமே இதற்குச் சிறந்த உதாரணம். 2013-ம் ஆண்டு வெளிவந்த ‘தி ஃப்ளூ’ திரைப்படம், கிழக்காசிய நாடுகளைப் பெரிதும் அவதிக்குள்ளாக்கிய H5N1 என்ற வைரஸால் உண்டான ‘பறவைக் காய்ச்சல்’ நோயைப் பற்றியது. நாம் சில தினங்களுக்கு முன்பு பார்த்த ‘கண்டேஜியன்’ திரைப்படத்தைப் போன்ற கதைக்கருவைக் கொண்டிருந்தாலும், ‘கண்டேஜியன்’ படத்தில் உள்ள வறட்சியான அறிவியல் விஷயங்களைக் கொண்ட திரைக்கதையாக இல்லாமல் மனித உறவு, ஆக்‌ஷன், த்ரில்லர் என்று கலவையாகத் திரைக்கதையை அமைத்து அசத்தியிருப்பார் இத்திரைப்படத்தின் இயக்குநர் கிம்-சுங்-சூ.

பறவைக் காய்ச்சல் பதற்றம்
சீனாவில் இருந்து ஒரு கண்டெய்னர் மூலம் சட்ட விரோதமாகச் சிலர் கொரியாவுக்குள் நுழைவார்கள். அனைவரும் ஏழைகள். அவர்களின் நோக்கம் எல்லாம் கொரியாவில் ஏதாவது வேலை தேடி வாழ்க்கைக்கு ஒரு வழிவகை செய்ய வேண்டும் என்பதே. அந்த கண்டெய்னரில் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருக்கும். அந்த கண்டெய்னர் கொரியாவின் பூடாங் நகருக்கு வந்து சேரும் போது அதிலிருந்த அனைவரும் நோய்த் தொற்றின் காரணமாக இறந்திருப்பார்கள். ஒருவரைத் தவிர. அவரும் தப்பித்து ஊருக்குள் ஓடிவிடுவார். மெல்ல மெல்ல பூடாங் நகரத்தில் நோய்த் தொற்று ஆரம்பிக்கும். முதலில் அனுமதிக்கப்படும் நோயாளியைப் பரிசோதித்துவிட்டு பெண் மருத்துவரான இன்னிஷியா வழக்கத்தில் இருக்கும் வைரஸில் இருந்து இது புது வகையான வைரஸ் என்பதைக் கண்டுபிடிப்பார்.

இன்ஷியாவை ஒரு தலையாக விரும்பும் ஜிகூ என்பவர் பேரிடர் மீட்புக் குழுவில் பணிபுரிபவராக இருப்பார். இன்ஷியா தன் சிறுவயது மகள் மிரியாவை தனியாக வீட்டில் விட்டுவிட்டு மருத்துவப் பணியாற்றச் சென்றிருப்பார். அந்த சமயத்தில் அவளை வெளியே அழைத்துச் செல்லுவார் ஜிகூ. இதற்கிடையில் பூடாங் நகரத்தில் நோய்த் தொற்று அதிகமாகி அவசர நிலை பிரகடணப்படுத்தப்படும். சூழல்நிலை காரணமாக மிரியா, இன்ஷியா மற்றும் ஜீகூ நோயாளிகளின் முகாமில் அடைக்கப்படுவார்கள். ஒரு பக்கம் நோய்க்கு மாற்று மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி ஏற்ற இறக்கங்களுடன் சென்றுகொண்டிருக்கும். சிறுமி மிரியா நோய்த் தொற்றுக்கு உள்ளாவாள்.

அமெரிக்கா மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அழுத்தம், தென்கொரிய பிரதமரைச் செயலாற்றவிடாமல் தடுக்கும். அதன் விளைவாக இராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையே மோதல் தொடங்கும். இப்படி அனைத்துப் பக்கத்திலும் பிரச்சனையால் சூழப்பட்ட நிலையில் நோய்த் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா?, சிறுமி மிரியா உயிர் தப்பினாளா?, ஜிகூ தன் காதலில் வெற்றி பெற்றாரா என்பதைக் கடைசி நிமிடம் வரை கணிக்க முடியாத திருப்பங்களுடன் பரபரப்பான திரைக்கதை, பார்ப்பவர்களைத் திரையுடன் கட்டிப் போடும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக இதுபோன்ற பேரிடர் மீட்பு படங்களில், உலக சுகாதார நிறுவனத்தைப் புகழ்பாடியே திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், ‘தி ஃப்ளூ’ படத்தில் அமெரிக்கா, உலக சுகாதார நிறுவனத்தைக் கடுமையாகச் சித்தரித்திருப்பார்கள். தொடர்ந்து தங்கள் மேல் அமெரிக்காவின் ஆதிக்கம் அழுத்துவதை விரும்பாத தென் கொரியர்களின் ஏகோபித்தமான மனப்பான்மையின் வெளிப்பாடே இது.

இத்திரைப்படத்தில் புதுமுகமாக, சிறுமி மிரியா கதாபாத்திரத்தில் நடித்த பார்க்-மின்-ஹா முதல் படத்திலேயே தென்கொரிய மக்களின் அபிமானத்தைப் பெற்றுவிட்டார். அவரின் நடிப்பு பார்ப்பவரை உருகச் செய்துவிடும். குறிப்பாக ராணுவத்தின் குண்டு மழைகளுக்கு நடுவே நின்று தன் தாயைக் காப்பாற்ற அவர் இறைஞ்சும் அந்தக் காட்சி கல் நெஞ்சங்களையும் கரைத்துவிடும்.

நோய்த் தொற்றின் அபாயம், அதனால் ஏற்படும் குழப்பம், அரசியல் இடர்ப்பாடுகள், தனி மனித உறவுகள் என்று அனைத்துக் கோணங்களையும் தொட்டு, முழுமையான திரைப்படமாக வடிவமைக்கப்பட்ட ‘தி ஃப்ளூ’வில் கற்றுக்கொள்ள நிறையவே விஷயங்கள் இருக்கின்றன.

-க.விக்னேஷ்வரன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x