Published : 03 Apr 2020 05:25 PM
Last Updated : 03 Apr 2020 05:25 PM
‘அந்தப் பாட்டு செம ஹிட்டுப்பா. படம்தான் எதுன்னு ஞாபகம் இல்ல’ என்கிற வார்த்தையைச் சொல்லாதவர்களே இல்லை.
இப்படி நம் வாழ்வில், ஏதோ சில பாடல்கள் மனதில் தங்கிவிடும். படம் நினைவிருக்காது. நடித்தவர்கள் ஞாபகத்தில் இருக்கமாட்டார்கள். ஆனால் அந்தப் பாடல்கள் மட்டும் நம்முடன் பயணித்துக் கொண்டே இருக்கும்.
விவிதபாரதி எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்தது. இதில் ஒளிபரப்பாகும் பாடல்களைக் கேட்பதற்குக் காத்துக்கொண்டிருந்தவர்கள் உண்டு. அதேபோல், சிலோன் ரேடியோவிலும் தமிழ்ப் பாடல்களை ஒலிபரப்புவார்கள். இங்கே, கூடுதல் சுவாரஸ்யம். பிடித்த பாடலையும் ஒலிபரப்புவார்கள். ஒலிபரப்பாகும் பாடல் எது என்று மிக ஸ்டைலாகவும் கலாட்டாவாகவும் சொல்வார்கள். அதைக் கேட்பதற்கு என்றே ரசிகர் கூட்டம் உண்டு.
ரேடியோவைத் தாண்டி, நமக்குப் பிடித்த பாடல்களை நாம் கேட்கிற இடம், கோயில் திருவிழா. அப்போதெல்லாம் திருவிழாவின் ஒருநாளில், பாட்டுக்கச்சேரி நிச்சயம் இருக்கும். ஊருக்கு நான்கைந்து கச்சேரி ட்ரூப்புகள் மிகப் பிரபலமாக இருக்கும். அந்த ட்ரூப்பில் டி.எம்.எஸ். குரலில் பாடுபவர் என்றே ஒருவர் இருப்பார். எஸ்.பி.பி. குரலில் பாடுவதற்கு ஒருவர் இருப்பார். எல்லார் குரலிலும் பாடுவதற்கென ஒருவர் இருப்பார். இவர்களையும் இவர்கள் பாடுகிற ஸ்டைலையும் குரலையும் முக்கியமாகப் பாடல்களையும் ரசிப்பதற்கென்றே மிகப்பெரிய கூட்டம் இருக்கும்.
அப்போது, இந்தப் பாடலை எப்போது பாடுவார்கள் என்று நகம் கடித்துக் காத்துக் கொண்டிருப்பார்கள் ரசிகர்கள். எண்பதுகளில் வெளியான அப்படியொரு பாடல்தான் ’என்னடி முனியம்மா உன் கையில மையி’ என்ற பாடல்.
பாட்டை அறிவிக்கும்போது ஆரம்பமாகிற கைதட்டல், பாடல் பாடி முடித்தும் கூட ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும். ரெக்கார்டுகள் குறைந்து கேசட்டுகள் வரத் தொடங்கிய காலத்தில் வந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
எங்கே இந்தப் பாட்டை ஒலிபரப்பினாலும் நின்று கேட்டுவிட்டுச் சென்றார்கள் ரசிகர்கள். சங்கர் கணேஷ் இசையில் வெளியான இந்தப் பாடலைப் பாடியவர் நமக்கு முன்பே அறிமுகமானவர்தான். அவர்... டிகேஎஸ் நடராஜன்.
டிகேஎஸ் குழுவில் நடித்துக் கொண்டிருந்தார். ஏகப்பட்ட நாடகங்கள். பின்னர் எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பலரின் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். கமல். ரஜினி படங்களிலும் நடித்து வந்தார். ஆனால் அப்போதெல்லாம் திரையில் பார்த்த அவரின் முகம் பரிச்சயமே தவிர, பெயர் கூட ரசிகர்களுக்குத் தெரியாது.
அவரை ஊருக்கும் உலகுக்குமாக அறிய வைத்த பாடல்தான் ‘என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி’ . இதன் பின்னர், ஏராளமான கச்சேரிகளைப் பண்ண ஆரம்பித்தார் டிகேஎஸ் நடராஜன். நாட்டுப்புறப் பாடல்களை ஹிட்டாக்கினார். அந்தப் பாடல்களால் இவரும் ஹிட்டானார். பின்னர், பல வருடங்கள் கழித்து, ரீமிக்ஸ் பாடல்கள் வரத் தொடங்கின. அர்ஜூன் நடித்த படத்தில், இந்தப் பாடல் ரீமிக்ஸ் பண்ணப்பட்டது. அந்தப் பாடலும் ஹிட்டானது.
இது ஒருபக்கமிருக்கட்டும். 1984-ம் ஆண்டு, ‘வாங்க மாப்பிள்ளை வாங்க’ என்ற படம் வெளியானது. இது பலருக்கு ஞாபகத்தில் இல்லாமலேயே இருக்கலாம். ‘இப்படியொரு படம் வந்துச்சா என்ன?’ என்று கூட இப்போது ஆச்சரியமாகக் கேட்கலாம்.
ஆமாம். ‘வாங்க மாப்பிள்ளை வாங்க’ என்றொரு படம் வந்தது. ஆனால், வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் ‘இருக்கு... ஆனா இல்ல’ என்பது போல, ‘வந்துச்சு... ஆனா வரல’ என்பது போல, தியேட்டர்களில் வந்த கையுடன் தூக்கிவிட்டார்கள்.
சிவசங்கர் என்பவர்தான் படத்தை இயக்கினார். அவரே ஹீரோவாகவும் நடித்தார். தேவிஸ்ரீ எனும் நடிகைதான் நாயகி. இவர்கள் இருவரும் சேர்ந்துதான் ‘என்னடி முனியம்மா உன் கையில மையி’ என்ற பாட்டுக்கு குத்தாட்டம் போட்டார்கள். அந்தப் படத்தில்தான் இந்தப் பாடல்.
எண்பதுகளில், செகண்ட் ரிலீஸ் என்று உண்டு. அதாவது டவுனில் நல்ல தியேட்டரில் படத்தை ரிலீஸாகும் படங்கள், அதே டவுனில் உள்ள சுமாரான தியேட்டரில் போடுவார்கள். பிறகு டவுனில் இருந்து ஆறேழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஏரியா தியேட்டரில் படத்தைப் போடுவார்கள். இப்படியாக ஐந்து வருடங்கள் ரீல் அந்துபோகும்வரை ஓடும்.
ஆனால், ‘வாங்க மாப்பிள்ளை வாங்க’ திரைப்படம், 1984-ம் ஆண்டு, மார்ச் மாதம் 2-ம் தேதி வெளியான ‘வாங்க மாப்பிள்ளை வாங்க’ வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல், செகண்ட் ரிலீஸுக்குக் கூட வரவில்லை.
இத்தனையும் இல்லாமல் போனாலும், அந்தப் பாடல்... ‘என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி’ பாடல்... 36 வருடங்கள் கழித்தும் இன்னமும் இருக்கிறது, மக்கள் மனங்களில்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT